முதல்வரின் நலத்திட்டங்களை பாழடிக்கும் அரசு அதிகாரிகள் ! வேதனையில் குடியிருப்போர் நலச்சங்கம் !
திருச்சி விமானநிலையத்தை அடுத்துள்ள குண்டூர் கிராம ஊராட்சியில், மீன்வளத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய மு.ராமமூர்த்தி தலைமையில் குண்டூர் வடக்கு மற்றும் கிழக்கு கிராமக் குடியிருப்போர் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றது. இச் சங்கத்தின் செயலாளராக திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியாகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்ற முனைவர் தி.நெடுஞ்செழியன் செயலாளராக உள்ளார்.
கடந்த 01.12.2025ஆம் நாள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் குண்டூர் நலச் சங்கத்தின் செயலாளர் தி.நெடுஞ்செழியன் கலந்து கொண்டு.
குண்டூர் பகுதியில் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள குண்டூர் பெரியகுளம் என்றழைக்கப்படும் ஏரியின் மேற்குக் கரையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு பார்த்தீனியம் என்னும் விஷச்செடி அடர்த்தியாக வளர்ந்து புதர்போல் மண்டிக்கின்றது. இதனை அகற்ற வேண்டும்.
குண்டூர் பகுதியில் உள்ள ஐடி பார்க் நெடுஞ்சாலை எண் 336இல், சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள 25 அடி சர்வீஸ் ரோடு கடை நடத்துவோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கான சர்வீஸ் அமைத்து தரவேண்டும்.
குண்டூர் ஊராட்சிக்குப்பட்ட குண்டூர், எம்ஐடிஇ, அய்யம்பட்டி, துப்பாக்கித் தொழிற்சாலை இரவுண்டா பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் பேருந்து நிழல் குடை அமைக்காமல் உள்ளது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் அவதியுறுகிறார்கள். உடனே நிழற்குடை அமைக்க வேண்டும் என்று 3 கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் செயலாளர் நெடுஞ்செழியனிடமிருந்து பெற்ற மனுவை நெடுஞ்சாலைத் துறை அலுவலர் வசம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் திரு மு.சுப்பையா அவர்கள் குண்டூர் நலச் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில்,
திருச்சி – புதுக்கோட்டை (தே.எண்.210) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரம்புகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு உள்ளது என்றும் நீதிமன்ற உத்தரவு பெற்றவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகால் மேற்கொள்ள இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அங்குசம் செய்தி இதழிடம் பேசிய குண்டூர் நலச் சங்கத்தின் செயலாளர் தி.நெடுஞ்செழியன்,“ எங்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் ஐடி பார்க் நெடுஞ்சாலை எண்.336 இல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுகோள் வைத்தோம். தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் தேசிய நெடுஞ்சாலை எண்.210ஐப் பற்றி பேசுகிறார். உதவிக் கோட்டப் பொறியாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக பெற்ற எங்கள் மனுவைப் படித்து பார்க்காமலே பதில் தந்துள்ளார் என்பது வேதனையாக இருக்கிறது.
அடுத்து பொதுமக்கள் குறிப்பாக மூத்தக்குடி மக்கள், பெண்கள், மாணவர்கள் – எனப் பேருந்தில் பயணம் செய்வோர் குண்டூர் ஊராட்சிப் பகுதியில் நிழற்குடை இல்லாமல் அவதியுறுகிறார்கள் என்பதற்கு, நிழற்குடை அமைக்க இயலாது என்று பதில் அளித்துள்ளார். உங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றால், சாலையில் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கும் அதிகார அமைப்பிற்கு இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இந்தத் துறையை அணுகவேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து எங்களால் இயலாது என்று தெரிவித்திருப்பது மக்களில் நலனில் நெடுஞ்சாலைத்துறைக்கு அக்கறை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் குண்டூர் ஏரியின் மேற்கு கரையில், மக்கள் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் பார்த்தீனியம் விஷச்செடியை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைத் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியளார் பதில் எதுவும் அளிக்காமல் வாய்மூடி மௌனமாக இருக்கிறார். இது குறித்து ஏன் அவர் பதில் அளிக்க மறுத்துள்ளார் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணை செய்து தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் மீது அலுவலகபூர்வமாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக எங்கள் சங்கத்தின் சார்பில் விரிவான மடலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதுவோம்” என்று முடித்துக்கொண்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகின்றது. அந்த முகாம் “முதல்வரின் முகவரி மனு” என்னும் பெயரில் நடைபெறுகின்றது. ஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் மனுக்களுக்கு ஒப்புதல் இரசீது வழங்கப்படுகின்றது. முதல்வரின் முகவரி மனு என்ற பிரிவுக்கு மனுக்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது. முதல்வர் அலுவலகத்திலிருந்து நம் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகின்றது.
அதில்,“உங்கள் கோரிக்கை 30 நாள்களுக்குள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் உடனடியாக மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அயாரது உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரின் எண்ணத்தைப் பாழடிக்கின்ற விதத்தில் சில அரசு அதிகாரிகள் செயல்படுவது பொதுமக்களுக்கு வேதனை அளிப்பதாகவே உள்ளது. தமிழக முதல்வரின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே நம் வேண்டுகோள் ஆகும்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.