தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள் ! வெளியான அரசாணை !
தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 280 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ஏப்ரல்-29 அன்று நடைபெற்ற போலீசு துறை மீதான மானியக் கோரிக்கையின் போது 22-வது கோரிக்கையாக, உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கும் காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
”சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் அன்றாட அவசரம நிலைகளை கையாளவும், பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில், 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும். இதன்மூலம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சட்டம் – ஒழுங்கு சாதி, வகுப்புவாத பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் முடியும்.” என்பதாக, அறிவித்திருந்தார் முதல்வர்.
இதனை தொடர்ந்து, ஜூலை-04 ஆம் தேதியிட்டு போலீசு துறை சார்பில் அரசாணை எண் : 383 வெளியிட்டிருக்கிறார், கூடுதல் தலைமை செயலர் தீரஜ் குமார்.
தமிழகம் முழுவதும் 1366 தாலுகா அளவிலான காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும்; அவற்றுள் 424 காவல் நிலையங்கள் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்பட்டு வருவதாகவும்; இதன் காரணமாக, ஒரே காவல் ஆய்வாளர் இரண்டு முதல் மூன்று காவல் நிலையங்களை கையாள வேண்டிய நிலை இருக்கிறது. இது ஒரே காவல் அதிகாரி அதிக வழக்குகளை புலனாய்வு செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே, முதற்கட்டமாக, காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கும் 424 காவல் நிலையங்களுள், முதற்கட்டமாக 280 காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயரத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு