பள்ளி மாணவா்களை குழந்தை தொழிலாளா்களாக உருவாக்கும் அரசு பள்ளி அட்மிஷன் !
ஒரு மாணவரை அரசு பள்ளியில் சேர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒவ்வொரு முறையும் அனுபவிக்கிறோம். சென்ற வருடம் நம் படிப்பகத்தில் பயின்ற சதீஷ் என்ற மாணவரை ஒன்பதாம் வகுப்பு சேர்க்க முடியாது என்றும் காரணமாக அவருக்கு வாசிப்பதில் சிரமம் இருக்கிறது என்றும் மதுரை மாவட்டம் ஆணையூர் அரசு பள்ளியில் கூறி அட்மிஷன் போட மறுத்தார்கள். பிறகு நாங்கள் சண்டையிட்டு ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தோம்.
இந்த வருடம் அதே போல் சந்தோஷ் என்ற மாணவரை ஆங்கிலம் வாசிப்பதில் சிரமம் என்று அதே ஆணையூர் அரசு பள்ளியில் அட்மிஷன் போட மறுத்து இரண்டு நாட்கள் கழித்து வர சொல்லி அழைய வைத்து இது போன்ற மாணவர்களுக்கு வேறு பள்ளி இருக்கிறது அங்கு போய் சேருங்கள் என்று வற்புறுத்தியிருக்கிறார்கள்.
நாங்கள் சென்று நீங்கள் கூறியதை எழுத்து வடிவில் கொடுங்கள் என்று கேட்டால் அதெல்லாம் முடியாது என்கிறார்கள். சந்தோஷ் பட்டியலின சமூகத்திலிருந்து வரும் முதல் தலைமுறை மாணவர், நீங்கள் அவருக்கு அட்மிஷன் தர மறுப்பது அவரின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது என்று சொன்னால் வாசிக்கத் தெரியவில்லை என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.
போதைப்பழக்கத்திற்குள் செல்ல தயார் நிலையில் இருந்த குழந்தைகளை பள்ளி செல்ல ஆர்வமூட்டி படிப்பதன் நோக்கத்தை புரிய வைக்கவே எங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டது. முதலில் பள்ளிக்குச் செல், பார், பிறகு படி என்பது தான் மெதுவாக எழுத்துக்களை புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது.
ஆனால், ஒரே நிமிடத்தில் அட்மிஷன் போட முடியாது என சொல்லி அனுப்பும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நோக்கம் தான் என்ன? நூறு சதவீத தேர்ச்சி விகிதத்திற்காக இன்னும் எத்தனை மாணவர்களை குழந்தை தொழிலாளர்களாக்கியிருக்கிறார்கள்? நூறு சதவீதம் என்கிற எண்ணிற்காக எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்? மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை, அவர்களின் குடும்ப, சமூக, பொருளாதார பின்புலம் என்ன என்பதை எத்தனை வகுப்பு ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் கவனிக்கக்கிறார்கள்? இந்த பிரச்சனைகள் எல்லாம் பள்ளிக்கல்வித் துறையின் கவனத்திற்கு செல்கிறதா?
நாங்கள் குழந்தைகள் நல மையத்திற்கு செல்வோம் என்று சொன்ன பிறகு தான் அட்மிஷன் போடுகிறார்கள். படிக்காத பெற்றோரை கொண்ட மாணவர்களுக்கு அரசு பள்ளியில் பயில ஏன் இத்தனை சிரமம்?
முக்கியமாக சென்ற வருடம் ஆணையூர் அரசு பள்ளியில் அட்மிஷன் போட மறுத்ததும் இந்த வருடம் அட்மிஷன் போட மறுத்ததும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். அவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆணையூர் அரசு பள்ளியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அட்மிஷன் போட வரும் பெற்றோரை ஒருமையில் பேசுவது, நாற்காலி கொடுக்க மறுப்பது, பயமுறுத்தும் தொனியில் பேசுவது போன்ற சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளி என்பது அனைவருக்குமானது அதனை ownership எடுத்துக் கொள்கிறார்கள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு.
— கனிமொழி ( அருவி )