அலட்சியத்துடன் அரசு பள்ளி ! ஜவ்வாது மலை – மழைநீர் சேகரிப்பா ? கழிவுநீர் சேகரிப்பா ?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள ஜமனாமரத்தூர் பகுதிக்குட்பட்ட குனிகாந்தூரில் மலைவாழ் மக்களுக்காக பழங்குடியினர் நலத்துறை சார்பில் (SFRD ) அரசு நிதியுதவி பெரும் பள்ளி இயங்கி வருகிறது இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
மேலும் , திருவண்ணாமலை, திருப்பத்தூர் ,வேலூர் ,போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் தங்கி படித்து வருகிறார்கள். இவர்களுக்காக பள்ளி அருகிலேயே தங்கும் விடுதிகள் கட்டுப்பட்டு உள்ளது. இந்த விடுதியின் முன்புறம் சுமார் 1 லட்சம் ரூபாய் செலவில் 800 அடிக்கு ஆழ்துளை கிணற்றுடன் (போர்வெல்) இணைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் SFRD பள்ளி விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் , பள்ளியின் எதிரில் ஆறாக ஓடி, மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சென்று சேர்கிறது. பின்னர், மழைநீர் சேகரிப்பு தொட்டியில் கழிவுநீர் முழுவதும் நிரம்பி ஆழ்துளை கிணற்றில் கலந்து வருவதால் இப்பகுதியில் தண்ணீர் மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அவ்வழியே செல்லும் பொதுமக்களும் மூக்கை பிடித்தப்படி சென்று வருகின்றனர்.
இது குறித்து அப்பள்ளின் ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். பெயரை தவிர்க்குமாறு கூறியவர், “எங்கள் விடுதியில் மாணவர்கள் குளிக்கும் தண்ணீரை வீணாக்காமல், விடுதி எதிரில் உள்ள மரம் செடி கொடிகளுக்கு பாய்ச்சி வருகிறோம். நீங்கள் குறிப்பிடுவது போல அது மழைநீர் சேகரிப்பு இல்லை. எங்கள் பள்ளியின் விடுதி தேவைக்காக போடப்பட்ட போர்வெல் அது. நாளடைவில் பழுது அடைந்ததால், அதை சரி செய்து மின் மோட்டார் பொருந்தி விடுதியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோவிலூர் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டோம். ஆனால், காதில் வாங்காமல் அதை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி விட்டனர்.” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கோவிலுர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசனிடம் பேசினோம். ”உபயோகத்தில் இல்லாத போர்வெல் அது. அதுபோல மூன்று போர்களையும் மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி உள்ளோம். மழைநீர் சேகரிப்பு தொட்டியில் கலக்கப்பட்டு வரும் கழிவுநீரை பள்ளி நிர்வாகத்திடம் பேசி நிச்சயமாக தீர்வு காண்கிறேன்.” என்றார்.
– கா.மணிகண்டன்