சேலத்தில் அரசு டாஸ்மாக்கை குடிமகன்களுடன் வைத்து பூட்டு போட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!
சேலத்தில் விடிய விடிய சட்டவிரோதமாக மது விற்பனை நடத்திய அரசு மதுபான கடையை குடிமகன்களுடன் வைத்து பூட்டு போட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அடுத்த சாந்தி தியேட்டர் அருகே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை ஒட்டி மது குடிப்பகமும் உள்ளது.
டாஸ்மாக் மதுபான கடை பூட்டிய பிறகு அருகே உள்ள பாரில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மது பாரில் விடிய விடிய மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.
இரவு முழுவதும் மது விற்பனை செய்யப்பட்ட பிறகு இன்று காலையிலும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த பாரை குடிமகன்களுடன் பூட்டு போட்டு காவல் துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அருகாமையிலேயே காவல் நிலையம் இருந்தும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை காவல்துறையினர் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
மது விற்பனை செய்யும் நபர்கள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை எடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பாரை திறந்தவுடன் உள்ளே இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
-சோழன் தேவ்
மேலும் செய்திகள் படிக்க:
https://angusam.com/there-is-a-separate-law-for-manslaughter/
அங்குசம் யூடியூப்