தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் வளர்ப்புத்திட்டம்”
கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் நோக்குடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
1) இறவையில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட கோ(எப்.எஸ்.29) மற்றும் தீவனச் சோளம் போன்ற தீவன விதைகளை 100% மானியத்தில் 0.25 ஏக்கருக்கு தீவனப் பயிர் விதைகள் மற்றும் உரங்களுக்கான மானியமாக ரூ.1,125/- வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 கால்நடைகள் வைத்திருக்கும் நீர்பாசன வசதியுடன் கூடிய நிலத்தில் 0.25 ஏக்கருக்கு குறையாமல் தீவனப்பயிர்களை பயிரிட விருப்பமுள்ள மற்றும் குறைந்தது 3 ஆண்டுகள் பராமரிக்க விரும்பும் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள்

2) மானாவாரியில் 250 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் தீவனச் சோளம் மற்றும் தீவன தட்டைபயிறு சாகுபடி செய்திட 0.5 ஏக்கருக்கு தீவன விதைகள் மற்றும் உரங்களுக்கான மானியமாக ரூ.1,500/- வழங்கப்படவுள்ளது. கறவை மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் நீர் பாசன வசதியில்லாத, மானாவாரி நிலங்கள் இருத்தல் வேண்டும். தீவனப்பயிரிட தயாராகவுள்ள பயனாளியாக இருத்தல் வேண்டும். அதிக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயியாக இருத்தல் வேண்டும். ஒரு ஹெகடேர் வரை தீவனப்பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும்.
3) 50 சதவீத மானியத்தில் 150 பயனாளிகளுக்கு புல்வெட்டும் கருவி வழங்கப்படவுள்ளது. ரூ.32,000/- மதிப்புள்ள புல் வெட்டும் கருவிக்கான மானியமாக ரூ.16,000/- வழங்கப்படும்.
இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஏற்கனவே இந்த திட்டங்களில் பயன் பெற்றிருத்தல் கூடாது. அனைத்து திட்டங்களிலும் 30 சதவீத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவர். சிறு மற்றும் குறு விவசாயிகள் முன்னுரிமை வழங்கப்படும். பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.