வயசான காலத்துல தாத்தா பாட்டிகளுக்கு வேற வேலையே இல்லை போல !
அன்றொரு நாள் காலை 6 மணி. திருச்சி இரயில் நிலையம் எப்போதும் போல, பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பலதரப்பட்ட மனிதர்களின் பல்வகையான நடவடிக்கைகள் சுவாரசியத்தை கூட்டின. அதுவரை சோம்பலாய் தொற்றியிருந்த அரை தூக்கமும் தூர விலகிப் போயிருந்தது.
பல்லவன் ரயிலில் சென்னைக்கு பயணம். முகூர்த்த தேதி வேறு, கூட்டம் எப்படி இருக்குமோ? உட்கார இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கால் வைத்து நிற்க இடம் கிடைத்தால்கூட போதுமானது என்ற மனநிலைதான். பல நேரங்களில், சரக்கு ரயிலில் புளிமூட்டைகளை போல, நெருக்கியடித்துக்கொண்டு பயணித்த மோசமான பயண அனுபவங்கள் இரயில் பயணத்துக்கான மனநிலையை தயார்படுத்தியே வைத்திருந்தன.
நீண்டதூர பகல்நேர பேருந்து பயணங்களில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு மத்தியில், பயணக் களைப்பு இல்லாமல் பட்ஜெட் செலவில் ரயில் பயணம் மேலானது. அரை மணி நேரத்துக்கு முன்பாகவே, ரயில் நிலையம் வந்து சேர்ந்தாயிற்று. வழக்கம்போல, கூட்டம் அலைமோதியபடிதான் இருந்தது. இரயிலும் வந்தது. எல்லோரும் இருக்கையைப் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள்.
ஓடும் பேருந்தில் ஏறிப்பழகிய அனுபவத்தில், ஓடும் இரயிலிலும் சாகசத்தை காட்டினார்கள் சிலர். இறங்குபவர்களுக்கு வழியைக்கூட விடாமல், அவர்களை அப்படியே சிறைபிடித்தபடியே முன்னேற முயன்றது ஒரு கூட்டம். ”எங்களை இறங்க விடுங்கப்பா” என அவர்களின் தயவை எதிர்நோக்கியிருந்தார்கள், திருச்சியில் இறங்க வேண்டிய பயணிகள்.
ஒருவழியாக இரயிலில் ஏறி இருக்கையைப் பிடித்தவர்களுக்கிடையே, இந்த இடம் யாருக்கு என்பதில் அடுத்தப் போட்டி ஆரம்பமானது. “ஒருத்தனுக்கே இடம் கிடைக்க இவ்வளவு பாடு. இதுல, நீ ஊருக்கே இடம் போடுவியா?”னு இளைஞர் ஒருவரை வசைபாடினார்கள் பயணிகள் பலரும். காரணம், அந்த ஒரு இளைஞர் மட்டும் தனது நண்பர்கள் 8 பேருக்காக எதிர் எதிர் இருக்கைகள் இரண்டுக்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தார். மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளுமாக வந்து சேர்ந்தார்கள் அவரது நண்பர்கள். வயதான மூதாட்டி ஒருவரும் நடுத்தர வயது பெண்மணி ஒருவரும் ஒருவழியாக கார்னர் இருக்கையை அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் அவர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.
”ஒரு ஆளு எட்டு பேருக்கு இடம் போடுவியா? அப்ப, நாங்களாம் என்ன பன்றது?”னு பாட்டி உரையாடலை தொடர, அத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் நீயா நானா விவாதமே நடந்து கொண்டிருந்தது. “நீ எங்க வேணாலும் போயி சொல்லு. நாங்க பன்னது தப்பு ஒன்னும் இல்ல. எங்க பிரண்ட்ஸ்க்கும் சேர்த்து இடம் போடுறதுல என்ன? அடுத்த ஸ்டேஷன்ல நிற்கிறவனுக்கா இடம் போட்டிருக்கேன்.”னு சட்டம் பேசினாரு இடம் பிடித்த அந்த இளைஞர்.
சரி விடுனு அவர்களது நண்பர்களே சமாதானம் செய்ய.. அதிலிருந்து ஒரு மாணவி, “இந்த கூட்டத்துல நாங்க ஏறி இடம் போட முடியுமா? எங்களுக்கு பாய்ஸ்ங்கதான் இடம் போடுவாங்க. என்ன இப்போ?”னு எகிற ஆரம்பித்தார்.
சண்டையெல்லாம் முடிந்து, ஒருவழியாக, எதிர் எதிர் இருக்கைகளில் மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளுமாக வந்தமர்ந்தார்கள். அத்தனை பேர்களுக்கு மத்தியில் அவ்வளவு மூர்ச்சை போட்ட அந்த வயதான பாட்டியும், நடுத்தர வயது பெண்மணியும் ஆளுக்கொரு பக்கமாக எதிர் எதிர் கார்னரில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அமர்ந்தார்கள்.
இரயிலும் நகர ஆரம்பித்தது. பெருமழை பெய்து ஓய்ந்தாலும் செடிமழை ஓயாது என்ற கதையாக, அந்த குரூப் தங்களுக்குள் இந்த விசயத்தை நக்கலாகவும் மற்றவர்கள் மனது வருந்தும்படியாகவும் “நியாயம்” பேசிக்கொண்டு வந்தார்கள். நடுத்தர வயது பெண்மணி கேட்டார், “அதுதான் முடிஞ்சிருச்சுல்ல. இப்ப எதுக்கு திரும்ப ஆரம்பிக்கிறீங்க”னு. அதிலிருந்த மற்றொரு மாணவி பதில் கொடுத்தார். “நாங்க எங்களுக்குள்ள ஏதோ பேசிட்டு வர்றோம் உங்களுக்கு என்ன?” அந்த பெண்மணியால் அடுத்து எதுவும் பேசமுடியவில்லை. இப்படியாக, போனது அந்த பஞ்சாயத்து.
மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளுமாக சேர்ந்து ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். கல்வி சார்ந்த பயணமா? இல்லை, தனிப்பட்ட பயணமா? என்பதெல்லாம் நமக்கு அவசியமில்லாதது. ஆனால், ஒரு குழுவாக பொது இடத்தில் அதுவும் தங்களது தாய், தந்தை, பாட்டியை ஒத்த சக மனிதர்களிடத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதம்தான் சிக்கலுக்குரியதாக இருந்தது.
அந்த மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, உடன் வந்த மூன்று மாணவர்களின் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அதிகபட்சம் ஒருவர் இருவருக்கு இடம் பிடிக்கலாம். ஒருவரே உடன் வந்த எட்டு பேருக்கும் இடம் பிடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? அதுவும் அத்துனை நெருக்கடிகளுக்கு மத்தியில். யாருடைய துணையும் இன்றி, தனியாக வந்திருந்த மூதாட்டிக்கு யார் இருக்கை பிடித்துக் கொடுப்பது? சரி, பரவாயில்லை எங்களில் ஒருவர் நின்று கொண்டு வருகிறோம். நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள் என்று அந்த பாட்டியிடம் சொல்ல முடியாத அவர்களின் மனநிலைதான் விவாதத்திற்குரியது. இன்னும் சொல்லப்போனால், அந்த ஐந்து மாணவிகளுக்கு மட்டும் இருக்கையை பிடித்து கொடுத்துவிட்டு அந்த இளைஞர்கள் மூவரும் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ்-க்கான இடத்தில் அமர்ந்து பயணித்திருக்க முடியும்.
அடுத்து, அத்தனை பேருக்கு மத்தியிலும் அத்தனை நெருக்கடியான கூட்டத்திற்கு மத்தியிலும் அரட்டையும் கும்மாளமுமாக பயணித்ததுதான். அவர்களது பயணத்தை இனிமையான மனநிலையில் அனுபவிப்பதை குறை சொல்வதற்கில்லை. ஆனாலும், மற்றவர்களுக்கு சங்கடத்தையும் முகசுளிப்பையும் ஏற்படுத்திடாத அளவுக்கு இருக்க வேண்டுமல்லவா? அந்த மனப்பாங்கு அவர்களிடம் இல்லை. மாணவிகள் ஐந்து பேரையும் ஒரே வரிசையில் அமர வைத்து எதிர் இருக்கையில் அந்த இளைஞர்கள் அமர்ந்து பயணித்திருக்கலாம். ஆனாலும், இரு பெண்களுக்கிடையில் ஒரு இளைஞன் என்பதாகத்தான் அந்த பயணம் முழுவதும் நீடித்தது. அதுவும் அவ்வப்போது ஆட்களை மாற்றி மாற்றி வேறு அமர்ந்தபடி வந்தார்கள். அவர்களின் புணைப்பெயர்களை சொல்லி கிண்டல் அடிப்பது தொடங்கி, “உன் பொண்டாட்டிய பாருடா”னு மற்றொரு இளைஞரை நக்கலடிப்பது வரையில் நீண்டது அவர்களது அரட்டைகள்.
ஆண் நண்பரின் மடியில் படுத்துக் கொண்டும், தோளில் சாய்ந்து கொண்டும், தோளில் கை போட்டுக் கொண்டுமாக முகச்சுளிப்பையும் ஏற்படுத்த தவறவில்லை. அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த ரயிலில் உடன் பயணிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும், அவர்களது தந்தை, தாய், சகோதரனையொத்த வயதுடைய பயணிகள் பலரும் அவர்களை கவனித்தபடியேதான் பயணிக்கிறார்கள் என்ற சிறு குற்றவுணர்ச்சி கூட அவர்களிடம் வெளிப்படாததுதான் வியப்பில் ஆழ்த்தியது.
அந்த மூதாட்டியோ இதனையெல்லாம் காண சகிக்காது, எதிர்திசையில் முகத்தை திருப்பி அமர்ந்து கொண்டார். இதில் கூடுதல் கொடுமை என்னவெனில், அந்த வயதான பாட்டி கழிவறைக்கு செல்ல முற்பட்டபோது கழிவறையில் ஆள் இருப்பதை அறியாமல் கொஞ்சம் பலமாக கதவை திறக்க முற்பட்டார். அதற்கு, ஒரு நபர் அந்த பாட்டியிடம் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். தங்களிடம் இருக்கைக்கு மல்லுக்கட்டிய அந்த பாட்டி அவமானப்படுவதை அந்த மாணவர்கள் அவ்வளவு நயமாக புன்சிரிப்போடு ரசித்தார்கள் என்பது எவ்வளவு வக்கிரமானது?
படித்தவர்களிடத்தில்தான் மனிதாபிமானம் மறத்து போய்விட்டதோ? என்றே என்ன தோன்றுகிறது. மனிதாபிமானம் இல்லாமல், இங்கிதம் தெரியாமல் இவர்கள் கல்லூரியில் எதைப் படித்து கிழிக்கப் போகிறார்கள்?
இரயில் பயணம்தான் இப்படியாக முடிந்தது என்றால், பேருந்து பயணத்தில் கண்ட காட்சி கண்களை குளமாக்கியது. மதியம் 12 மணி வாக்கில், சென்னை நகர பேருந்து ஒன்றில் நிற்கக்கூட இடமில்லாத வகையில் முண்டியடித்த கூட்டம். கைத்தடியுடன் கட்டைப்பையுடன் வயதான முதியவர் ஒருவர் ஏறினார். வயது எப்படி பார்த்தாலும் 70-க்கு குறையாது. உடல் தளர்ந்து நிற்கக்கூட முடியாத நிலையில் அவர் இருந்தார். கைத்தாங்கலாக அவரை நகர்த்தி இருக்கையின் ஓரமாக சாய்ந்தபடி வருமாறு பயணிகள் சிலர் அவருக்கு ஆலோசனை கூறினர். அந்த வயதான முதியவர் படியில் ஏறியது தொடங்கி, பயணிகள் அவரை அரவணைத்து ஓரமாக நிற்க சொன்னது வரையில் எல்லாவற்றையுமே இருக்கையில் அமர்ந்தபடியே பயணிகள் சிலர் பார்த்து கொண்டுதான் இருந்தனரேயொழிய, அவருள் எவர் ஒருவரும் இருக்கையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
கண்ணிருந்தும் குருடர்களாய் கிஞ்சித்தும் மனிதாபிமானமற்ற நபர்களுமாக அமர்ந்திருந்த அந்த பயணிகளிடம், அந்த முதியவருக்காக இருக்கை கேட்டு பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் அப்பேருந்தில் நின்றுகொண்டு பயணித்தவர்கள். தடிமாடு கணக்காக இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞரிடம் கொஞ்சம் நகர்ந்து அமருங்கள், இவர் அமரட்டும் என நகரச்சொன்னார் பயணி ஒருவர். அப்போதாவது அந்த இளைஞர் தனது இருக்கையை அந்த முதியவருக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். அல்லது, அந்த உரையாடலை கவனித்து வந்த முன் பின் இருக்கையில் இருந்த வேறு யார் ஒருவராவது விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவே இல்லை. அந்த முதியவரும் மூன்று இன்ச் அளவுக்கேயான அந்த இடத்தில் அமர முடியாமல், நான் நின்று கொண்டே வருகிறேன் என்பதாக எழுந்து கொண்டார்.
“வெயில் காலத்துல இப்படி மதியான நேரத்துலலாம் வெளிய வராதீங்க. வெயில் மோசமா அடிக்கிது”னு பயணி ஒருவர் அறிவுரை சொல்ல. “எப்ப இருந்தாலும் போற உசுருதான். போனா போயிட்டு போவுது.”னு சிரித்தபடியே பதிலளித்தார், அந்த முதியவர். முகத்திலறைந்தார் போல இருந்தது அவரது பதில்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், ஒரு கையில் கைத்தடி. மறு கையில் கட்டப்பை. இந்த மத்தியான வேளையில், அவர் என்ன வேலைக்கா செல்லப் போகிறார்? இல்லை, பொழுது போகவில்லை என்பதற்காக சென்னையை சுற்றிப்பார்க்கலாம் என்று கிளம்பியிருப்பாரா? கேட்டதற்கு, ”மக வூட்டுக்கு போறேன்” என்றார், நா தழுதழுத்தபடி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரயிலில் பயணித்த அந்த வயதான பாட்டியை போல, பேருந்தில் பயணித்த இந்த தாத்தாவைப் போல், தமிழகத்தின் ஏதோ ஒரு பேருந்திலோ, இரயில்களிலோ அத்தனை கூட்ட நெரிசல்களுக்கு மத்தியிலும், ஏதோ ஒரு பாட்டியும் தாத்தாவும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசி காலத்தில், கஞ்சி ஊற்ற மறந்து தன்னை கைவிட்ட, தான் பெற்ற மகன் அல்லது மகள் வயிற்றுப் பேரனையோ, பேத்தியையோ ஆசையாய் பார்ப்பதற்காக !
— கலைமதி.