பாட்டியின் காது மூக்கை அறுத்து தங்கத்தை திருடி சாராயம் குடித்த பேரன் கைது !
பாட்டியின் காது மூக்கை அறுத்து தங்கத்தை திருடி சாராயம் குடித்த பேரன் கைது ! வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் மருமகள் மற்றும் பேரன் கைது . மது குடிக்க பணம் இல்லாததால் பாட்டியின் தங்கத்தின் மீது ஆசைப்பட்டு கொலை செய்ததாக பேரன் பரபரப்பு வாக்குமூலம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82) , இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஆனால், மூவரும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், மூதாட்டி அனுமாக்காள் கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி மூதாட்டி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்களுடன் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்
அதன் பிறகு 29 ந்தேதி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 05.07.2024 முன்தினம் மூதாட்டியின் மகன் வழி பேரன் சிவகுமார் (31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சிவகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு மதுப்பழக்கம் உள்ளதால் மது குடிக்க பாட்டியிடம் பணம் கேட்டால் மறுத்து வந்தார் கடந்த 26 ஆம் தேதி இரவு மது அருந்த பணம் இல்லாததால் பாட்டியிடம் இருக்கும் தங்க நகைகளை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி தூங்கி கொண்டு இருந்த பாட்டியின் வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் தன் கைகளால் அழுத்தி கொலை செய்தார்.
அதன் பிறகு நகைகளை கழற்ற முடியாததால், காது, மூக்கை அறுத்து, ஒன்றரை சவரன் நகையை எடுத்துக் கொண்டு பாட்டியின் சுருக்கு பையில் வைத்திருந்த, 350 ரூபாயையும் எடுத்துச் சென்று, நகையை, தாய் மலரிடம் கொடுத்துவிட்டு 350 ரூபாய்க்கு சாராயம் குடித்தது தெரியவந்தது. கொலையாளி சிவகுமார் அந்த பகுதியில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது
பின்னர் கொலையாளி சிவகுமார் மற்றும் அவரது தாய் மலரை நேற்று கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கம்மல், மூக்குத்தி, மாட்டல் உட்பட ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கா.மணிகண்டன்