அரசுத்துறை நிறுவனத்துக்கே இதுதான் கதி ! GST பாிதாபங்கள் தொடா் – 03
ஜி.எஸ்.டி. அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் வறட்டுத்தனமான கெடுபிடிகளுக்கு காரணமாக, அடிப்படையான மூன்று விசயங்களை குறிப்பிடுகிறார்கள். முதல் விசயம் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மாதாந்திர டார்கெட். அடுத்தது, கீழ்மட்ட பணியாளர்களிலிருந்து குறிப்பிட்ட ஆண்டு பணி அனுபவத்திலிருந்து பதவி உயர்வு பெற்றவர்களாக இருப்பது. மூன்றாவது, இவர்களை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் அதிகாரிகள் பெரும்பாலானோர் குருப்-1 தேர்வு எழுதிவிட்டு விரைப்பாக வந்தமர்ந்திருப்பது.
ஜி.எஸ்.டி. துறையில் பணியாற்றும் எல்லா அதிகாரிகளையும் நாம் குறை சொல்கிறோம் என்பதல்ல. வெறுமனே சட்ட விதிமுறைகளை மட்டுமே தூக்கிப்பிடித்துக் கொண்டு, சந்தர்ப்ப சூழல்களை கருத்திற் கொள்ளாமல் வறட்டுத்தனமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறோம்.
வணிகர்கள் தரப்பிலிருந்து அவர்களின் ஆடிட்டர்கள் தரும் விளக்கங்களைக்கூட கேட்க முன்வருவதில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். வழக்கு போடுகிறார்கள். அபராதம் விதிக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். மிக முக்கியமாக, மேல்முறையீட்டில், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் நிற்காது என்று தெரிந்தும்கூட, வழக்குப் போடுகிறார்கள். வேண்டுமென்றே அலைய விடுகிறார்கள் என்கிறார்கள்.
எந்த அளவுக்கு வறட்டுத்தனமாக வழக்குகளை கையாளுகிறார்கள் என்பதற்கு இந்த உதாரணம் மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் வட மாவட்டம் ஒன்றில் இயங்கும் மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனம் அது. அந்நிறுவனத்தின் அன்றாடப் பயன்பாட்டிற்கான எரிபொருளை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்று வருகிறது. மாதத்திற்கு இரண்டு முறையோ, மூன்று முறையோ தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யப்படும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் 15 நாளைக்கு ஒரு முறை தனது எரிபொருளின் விலையை மாற்றி தீர்மானிக்கும். சில நேரங்களில் முந்தைய விலையைவிட கூடுதலாகவும் அமையும்; சில நேரங்களில் குறையவும் வாய்ப்பிருக்கிறது.
இதன்படி, 14-ஆம் தேதி இரவு பில் போட்டு மறுநாள் சரக்கை அனுப்பி வைக்கிறார்கள். மேலும், அந்த சரக்கு சம்பந்தபட்ட மாநில அரசின் நிறுவனத்திற்கு இரண்டு நாள் கழித்துதான் சென்று சேரும். ஆகவே, 15-ஆம் தேதிய விலையில் பில் போட்டு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவர்களும் அதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, போட்டு அனுப்பிய இன்வாய்சில் விலை மாற்றத்தை மேற்கொள்ளாமல், பழைய இன்வாய்ஸ் மற்றும் வே-பில்லுக்கு பதிலாக, புதிய இன்வாய்ஸ், வே-பில் வழங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், மேற்படி சரக்கு வாகனத்தை வழிமறித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதனை கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். நடந்த விவரத்தை சொல்லியும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. அதற்கு ஃபைன் போடுகிறார்கள்.
”ஐயா, அதிகாரிகளே. ஒன்று மத்திய அரசின் நிறுவனம். மற்றொன்று மாநில அரசின் நிறுவனம். இதில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை. கிளார்க் செய்த கிளாரிக்கல் எர்ரர்.” என்று ஆடிட்டர் தரப்பில் எடுத்துரைத்தும் ஏற்கவில்லை. மாநில அரசு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி தனிப்பட்ட முறையில் சில ஆயிரத்தை இலஞ்சமாக கொடுத்துதான், வாகனத்தை மீட்டிருக்கிறார். அரசுத்துறை நிறுவனத்துக்கே இதுதான் நிலை என்றால், சாமானிய வணிகர்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள் !
(தொடரும்)
– ஆதிரன்.
G.S.T. பரிதாபங்கள் தொடா்-2 ஜ படிக்க click