மாவு வகைகள் மீதான ஜி.எஸ்.டி. வரி ! நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை !
மாவு வகைகள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சருக்கு மாவு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர் சங்க தலைவர் தெய்வராஜன், செயலாளர் மனோகரன் ஆகியோர் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அதில், “குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, பஜ்ஜி மாவு, கேழ்வரகு மாவு, முறுக்கு மாவு, இடியாப்ப மாவு, கொழுக்கட்டை மாவு, பலதானிய மாவு உள்ளிட்ட மாவு வகைகள் அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களின் ஓர் முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது. அதில் உறையிடப்படாத மற்றும் பெயரிடப்படாத மாவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உறையிடப்பட்டு மற்றும் பெயரிடப்பட்ட மாவு வகைகள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அமலில் உள்ளது.
இந்தநிலையில், ஜி.எஸ்.டி. முறையில் மாற்றம் கொண்டு வரும்போது, மாவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் மற்றும் இது நுகர்வோரின் செலவை நேரடியாக குறைப்பதோடு தொழிலாளர் குடும்பங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்” என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.