அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேசவிரோதியோடு பேச்சுவார்த்தை நடத்தினாரா, முதல்வர்?  சர்ச்சை எழுப்பிய கடிதம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

”தேசவிரோத குற்றச்சாட்டுக்குள்ளான நபரை, முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாமா?” என்பதாக, காயிதேமில்லத் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – மேடவாக்கத்தில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் கல்லூரியான காயிதேமில்லத் கல்லூரியில், தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் காஜாகனி. மனித நேய மக்கள் கட்சி சார்ந்த அமைப்பான, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பின் பொதுச்செயலாளராகவும் இருந்துவருகிறார். மனித நேய மக்கள் கட்சியின் சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத்தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரவித்து, காயிதேமில்லத் கல்லூரி நிர்வாகத்தின் செயலாளர் தாவூத் மியாகான் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்தான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

முதல்வருக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் முதல்வருடன் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு, அரசு ஊதியம் பெற்றுவரும் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் காஜாகனி அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டும், அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவர் அரசியல் கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது விதி மீறிய செயல். இவர் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்பதாக கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, சர்ச்சையில் சிக்கியிருக்கும் பேராசிரியர் காஜாகனியிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.  அப்போது, “மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் சார்பற்ற அமைப்பான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்துவருகிறேன். மமக கூட்டணி பேச்சுவார்த்தையின்போது நான் அரசியல் பேசவில்லை. முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கோரிக்கைகளை முன்வைத்தேன். அதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டு காலமாகவே காயிதேமில்லத் கல்லூரியில் மாணவர்களிடம் சராசரியாக அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட ரூ.10 ஆயிரம் கூடுதலாக வசூல் செய்யப்படுகின்றது. இதற்கு முறையாக இரசீது வழங்கப்படுவதில்லை. கல்லூரியில் எந்த அடிபப்டை வசதியும் இலலை என்று மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

முதல்வர் பிறந்தநாள்

கல்லூரி செயலாளர் காயிதேமில்த் அவர்களின் பெயரன் தாவூத் மியாகான் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் நான்தான் என்று எனக்கு மெமோ வழங்கினார். விசாரணைக் குழு அமைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் (W.A.No.3814 of 2025 and C.M.P.No.31379 of 2025) உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், 2021ல் பிறப்பிக்கப்பட்ட Charge Memo முற்றிலும் சட்ட விரோதம், 2024 இல் கல்லூரி கவுன்சில் ஏற்கனவே விசாரணையை நிராகரித்து தீர்மானிம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தை மறைத்து மீண்டும் Enquiry தொடங்கியது தவறானது. ஹாஜா கனிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் “unsupported மற்றும் flimsy”, College Council தீர்மானத்தை செயலர் “fabricated” என கூறியது பொய்யானது.  2025ல் புதிய Enquiry Officer நியமனமே அதிகார துஷ்பிரயோகம், என மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பில் Charge Memo (2021) ரத்து, Enquiry Officer நியமனம் (2025) ரத்து, செயலரின் Resolution No.8 & 9 (14.03.2025) ரத்து, எந்த புதிய விசாரணையும் மேற்கொள்ள முடியாது என உத்தரவிட்டுள்ளது. இந்த பின்னணியில்தான் என் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியிலிருந்து இப்படி குற்றச்சாட்டை என்மீது சுமத்துகிறார்கள்.” என்கிறார், பேராசிரியர் காஜாகனி.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டை சுமத்தியுள்ள கல்லூரியின் செயலாளர் தாவூத் மியாகானை அங்குசம் சார்பில் தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை ஏற்காதது மட்டுமல்ல; வாட்சப் வழியே அனுப்பிய குறுந்தகவலுக்கும் இதுவரையில் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த விவகாரம் தொடர்பாக, பல்கலை கழக ஆசிரியர் சங்க (ஏ.யு.டி.) மேனாள் தஞ்சை மண்டலத் தலைவர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியனிடம் பேசினோம். அவர், “அரசு ஊழியர் என்பது வேறு, அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றி அரசு ஊதியம் பெறுவது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. சென்னை காயிதேமில்லத் கல்லூரி என்பது அரசு உதவிபெறும் சிறுபான்மை தகுதியுடைய கல்லூரியாகும். இங்குப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்கும் முறை இல்லை. ஆசிரியர்களைப் பணியில் சேர்க்கும் அதிகாரம் படைத்த செயலாளர், அரசிடமிருந்து ஊதியத்தைப் பெற்று ஆசிரியர்களுக்கு வழங்குகிறார். இந்தக் கல்லூரிக்கு அரசின் எல்லா விதிகளும் பொருந்தி வராது. இதற்கென்று தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976இன் விதிகள்தான் பொருந்தும். அரசு ஊதியம் பெறுவதால், பேராசிரியர் காஜாகனி அரசியல் இயக்கத்தில் இருப்பது தவறு என்பதைத் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் சுட்டிக்காட்டவில்லை.

பேராசிரியர் ஹாஜா கனி.
பேராசிரியர் ஹாஜா கனி.

இதற்கு முன்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோது, அங்கே பணியாற்றிய பேராசிரியர் சபாபதிமோகன் மதிமுகவின் இளைஞர்அணி செயலாளராக இருந்தார். வடசென்னை மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடையாது. வாணியம்படி கல்லூரி பேராசிரியர் அப்துல்காதர் மதிமுகவில் உயர்மட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தார். மயிலாடுதுறையில் நகராட்சித் தலைவராக 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த தேன்மொழி ஏவிசி கல்லூரியின் விலங்கியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அரசுக் கல்லூரியில் பணி பெற முடியாது. தனியார் கல்லூரி என்பதால் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு விதி வகை செய்கின்றது.

தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முயன்று நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட காயிதேமில்லத் காயிதேமில்லத் கல்லூரி நிர்வாகம் சார்பில் முதல்வருக்குக் கடிதம் எழுதப்பபட்டிருப்பது ஆசிரியர்கள் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருவகையான வன்முறை என்றுதான் சொல்லவேண்டும். தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டப்படி தமிழ்நாடு முதல்வர், கல்லூரிக் கல்லி இயக்குநரகம், மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் என்று யாரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில், கல்வி கட்டண முறைகேடு உள்ளிட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார் என்ற காழ்ப்புணர்ச்சியிலிருந்து இந்த விவகாரத்தை கல்லூரி நிர்வாக அரசியலாக்கி வருவதாகவே இதனை புரிந்து கொள்ள முடியும்.” என்கிறார், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்.

தனது கல்லூரியில், பேராசிரியராக ஒரு துறையின் தலைவராக பணியாற்றிவரும் பேரா.காஜாகனிக்கு எதிராக கல்லூரி நிர்வாகமே, அவரை ”தேசவிரோதி” என்பதாக குற்றம் சுமத்துவது தமிழகம் இதுவரை கண்டிராத மோசமான முன்னுதாரணம். தேர்தல் அரசியலுக்கு சற்றும் சளைத்தது அல்ல போல, கல்லூரிகளில் அரங்கேறிவரும் இதுபோன்ற நுண் அரசியல் விவகாரங்கள் !

–              ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.