இங்கிலாந்து திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்! என்ன நடந்தது?
பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 17ஆம் நூற்றாண்டு முகலாய பேரரசில், கோல்கொண்டாவிலிருந்து டெல்லி வரை வீர மல்லு நடத்திய துணிச்சலான பயணத்தையும், புகழ்பெற்ற கோஹீனுர் வைரத்தை மீட்கும் அவரது முயற்சியையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.
இந்த நிலையில் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், யுகேயில் ஒரு திரையரங்கில் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து, குழப்பத்தையும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பயனர் வெளியிட்ட வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தின் ஒரு காட்சியின் போது, தியேட்டர் ஊழியர்கள் பார்வையாளர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. சில பார்வையாளர்கள் திரையரங்கில் கோசம் எழுப்பி, ஒழுங்கின முறையில் காகிதத் துண்டுகளை வீசி குப்பைகளை உருவாக்கியதால், கடுப்பான ஊழியர்கள் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க படத்தை பாதியிலேயே நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திரைப்படத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பாபி தியோல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்.