அங்குசம் பார்வையில் ‘ஹரிகர வீரமல்லு-1
தயாரிப்பு : ‘மெகா சூர்யா பிக்சர்ஸ்’ ஏ.எம்.ரத்னம் & ஏ.தயாகர் ராவ். டைரக்ஷன் : ஜோதி கிருஷ்ணா [ ஏ.எம்.ரத்னம் மகன்] திரைக்கதை : கிரிஷ் ஜகர்லமுடி, ஆர்ட்டிஸ்ட்ஸ்; பவன் கல்யாண், நித்தி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர், ஈஸ்வரி ராவ், கோட்டா சீனிவாசராவ், ரகுபாபு, தணிகல பரணி, முரளி சர்மா, சுனில், வெண்ணிலா கிஷோர், கபீர் பேடி, அனுசுயா, ஆதித்யா மேனன், பூஜிதா பொன்னடா. ஒளிப்பதிவு : ஞானசேகர் & மனோஜ் பரமஹம்சா, இசை : எம்.எம்.கீரவாணி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் : 15 பேர், எடிட்டிங் : கே.எல்.பிரவீன். பி.ஆர்.ஓ.: ரேகா.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பவன் கல்யாணின் அரசியல் பயணத்தின் பாதிக் கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம். முதலில் ஒப்பந்தமான டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி விலகிக் கொள்ள, ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா டைரக்ட் பண்ண ஆரம்பித்த பிறகு, லாக் டவுன் உட்பட பல இயற்கைச் சீற்றங்களால் தடைபட்டு, தடைபட்டு படம் முடிவதற்குள் ஆந்திராவின் துணை முதல்வராகவும் ஆகிவிட்டார் பவன் கல்யாண்.
பா.ஜ.க.வின் சகவாசமும் பேராதரவும் கிடைத்து மதவெறியில் முழு நம்பிக்கைக் கொண்ட ஆபத்தான அரசியல்வாதி, வியாதியாகவும் பவன் கல்யாண் மாறிவிட்ட பிறகு ரிலீசாகியிருக்கிறது இந்த ‘ஹரிகர வீரமல்லு’. படத்தின் முக்கிய நோக்கமும் பவன் கல்யாணின் மெயின் அஜெண்டாவுமே இஸ்லாமிய வெறுப்பு தான் என்பதை முதல் சீனிலேயே நிரூபித்துவிட்டார்கள்.
ஒளரங்கசீப்பின் [ பாபி தியோல்] ஆட்சியில் கொலை, கொள்ளை, கொடுங்கோன்மையைத் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான், ஒருத்தன் வருவான்.. என மக்கள் பரிதவிக்கும் போது வருபவன் தான் வீரமல்லு[ பவன் கல்யாண்]. இரண்டே முக்கால் மணி நேரப்படத்தில் பவன் கல்யாண், தரையில் நிற்கும் காட்சிகள் என்றால், அது நித்தி அகர்வாலுடன் பேசும் காட்சிகள் தான். மத்தபடி கிராபிக்ஸ் உதவியுடன் பறந்து பறந்து ஆயிரக்கணக்கான பேரை பந்தாடுகிறார். அட உண்மையிலேயே நம்ம பாலைய்யாவுக்கே ஃபைட் சீக்வென்ஸ் பாடம் எடுத்திருக்காருங்க பவன் கல்யாண். ஏண்டா இப்படி…?
கோஹினூர் வைரத்தைத் தேடி டெல்லிக்குப் போய், ஒளரசிங்கசீப்புடன் மோத ஆரம்பிக்கிறார் பவன் கல்யாண். இத்துடன் முதல் பாகம் முடிகிறது.
இந்த மதவெறியர்களின் உச்சகட்ட வெறி என்னன்னா.. இந்தப் படம் இந்த 24—ஆம் தேதி காலை தான் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் ரிலீசாகியிருக்கு. ஆனா மதியம் 3 மணிக்கே படத்தின் ‘சக்சஸ்’ மீட்டை ஆந்திராவில் நடத்திட்டாய்ங்கன்னா பார்த்துக்கங்க மக்களே, அவய்ங்க எந்தளவுக்கு வெறி கொண்டு அலையுறாய்ங்கன்னு.
–மதுரை மாறன்