மதுரை உயர் நீதிமன்ற கிளை செயல்படும் அடிமனைக்கு இன்னும் கிரயத்தொகை பட்டுவாடா செய்யவில்லையா ? மதுரை பஞ்சாயத்து !
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மூத்த குடிமகன்களான வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர்கள் சுப்பிரமணியன் , லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைவதற்காக தங்களது நிலமான 5 ஏக்கரை அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு வழங்கி உள்ளனர்.
வழங்கிய நிலத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கான வட்டியை வழங்காதது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் , சகோதரர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டும் பணத்தை வழங்காததால் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஜீப் , டேபிள் , பீரோ கம்ப்யூட்டர் , ஷேர் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள் பாதிக்கப்பட்ட வெங்கட்ராமன் உள்ளிட்டோருடன் மேலூர் அடுத்த வெள்ளரிபட்டியில் உள்ள மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் அலுவலக கணினி , பீரோ , டேபிள் , சேர் , ஃபேன் , மேஜை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஜப்தி செய்து சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் மூன்று நாட்களுக்குள் நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அதற்கான துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.