ஆதிதிராவிடர்கள் மயானத்திற்காக நிலம் அபகரிப்பு – கண்ணீர் விடும் “பழங்குடி பெண் விவசாயி” !
அரசு கையகப்படுத்திய பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றங்கள், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மேலும் அபகரிக்க முயற்சி செய்யும் ஆதி திராவிடர் நல பெண் அலுவலர் , 25 செண்ட் நிலத்தை மீட்க 25 ஆண்டுகளாக போராடும் (குருமன்ஸ்) பழங்குடி பெண் விவசாயி .
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டில் பழங்குடி விவசாயி கோவிந்தசாமியின் பூர்வீக சொத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி ஆதிதிராவிடர்களின் மயானத்துக்காக முறையான அறிவிப்பு கொடுக்காமல் சுமார் 25-செண்ட் நிலம் கையகப்படுத்தியது ஆதி திராவிடர் நலத்துறை .
அபகரித்த விவசாய நிலத்தில் அத்துமீறி இடுகாடு அமைத்து தகன மேடை மற்றும் போர்வெல் அமைந்துள்ளதை எதிர்த்து நில உரிமையாளர் கோவிந்தசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் , அந்த வழக்கில் 2001 ஆம் ஆண்டில் , கோவிந்தசாமியின் நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அந்த தீர்ப்பின் நகல் ஆதிதிராவிட நலத்துறை இடமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பின்படி கையகப்படுத்திய நிலத்தை வழங்காமல் அந்த இடத்தில் தகனம் மேடை மற்றும் போர்வெல் அமைத்தார் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் .
இந்த நிலையில் கோவிந்தசாமி 2020 ஆம் ஆண்டு காலமானதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி அவரது வாரிசுதாரர்கள் திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர் ,
அந்த வழக்கிலும், கோவிந்தசாமி நிலத்தை எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி, முறையான உத்தரவும் பெறாமல் நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்றும் , கையகப்படுத்திய நிலத்தில் அமைத்துள்ள “தகனமேடை மற்றும் ஆழ்துளை கிணறு” ஆகியவற்றை இரண்டு மாதத்திற்குள் அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கும் ஜோலார்பேட்டை வட்டார அலுவலர்களுக்கும் காலகெடு விதித்து 2016-ல் ” உத்தரவிட்டிருந்தது”
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் மேலும், 25 செண்ட் நிலத்தோடு மொத்தமாக 65 செண்ட் விளை நிலத்தை கேட்டு தற்போது ” தனி தாசில்தார்” முயன்று வருவதாகவும் , தொடர்ந்து நோட்டிஸ் அனுப்பி கொண்டே இருப்பதால் செய்வது அறியாமல் (குருமன்ஸ்) பழங்குடி விவசாய குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளனர்.
இதுகுறித்து கோவிந்தசாமியின் மனைவி மல்லிகா பேசுகையில்,
2018 கையகப்படுதிய 174/3A பட்டா எண் நிலத்தை அரசு புறம்போக்காக மாற்றப்பட்டதை , 28/11/2024 அன்று என் கணவர் கோவிந்தசாமி பெயருக்கு மீண்டும் பட்டாவாக மாற்றி உத்தரவிட்டனர்.
திடிரென்று உங்கள் நிலத்தை சுடுகாட்டு பாதைக்கு கையகப்படுத்த உள்ளதாகவும் 13/11/24 அன்று நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டிசை அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார் தனி வட்டாட்சியர் , அப்போதும் நீதிமன்ற தீர்ப்பின் நகலை அந்த தனி வட்டாட்சியர் வழங்கி எடுத்து சொன்னோம் .
அதன் பிறகும் ,14/12/2024 அன்று , “பாதை என்பதை திருத்தி” மீண்டும் ‘மயான வசதிக்காக” உங்கள் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக மற்றொரு நோட்டீசை வழங்கினார் “தனி தாசில்தார் சுமதி”, தற்போது கூட ஒரு நோட்டிஸை அனுப்பி உள்ளனர் ( நோட்டிஸ் காட்டியபடி) இப்படி கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து நோட்டிஸ் மேல் நோட்டிஸ் அனுப்பி இருக்கும் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்கள்.
எனக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் அதில் மூன்று ஆண்பிள்ளைகளும் கூலி வேலை செய்துதான் வாழ்ந்து வருகின்றனர் , எங்களுக்கு இருக்கும் சொற்ப நிலத்தை கையகப்படுத்த நினைக்கும் அரசு அதிகாரிகள், இதே பகுதியில் அரசு அலுவலர்களாகவும், அதிக அளவில் நிலங்களை வைத்திருக்கும் அதே ஆதி திராவிடர்களின் நிலத்தை ஏன் கையகப்படுத்தவில்லை ?

அருகிலேய “ஓடை புறம்போக்கு” நிலமும் உள்ளது. அங்கு சுடுகாடு அமைத்திருக்கலாம் , இதை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் விளை நிலத்தை மட்டும் குறிவைத்து அபகரித்து கொண்டனர் , எப்படி ஜீவனம் ஓட்டுவது? நாங்க எங்க போவோம் என்றார் ? கண்கலங்கியபடி
புகார் குறித்து ஜோலார்பேட்டை வட்டார அலுவர் சங்கரிடம் பேசினோம் ,
இதுகுறித்து சம்மந்தப்பட்ட தனி தாசில்தாரிடம் ஆலோசனை செய்துவிட்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
நிலத்தை திருப்பி கொடுக்க சொல்லி நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது ஏன் வழங்கவில்லை என தனி வட்டாட்சியர் சுமதி’யிடம் கேட்டதற்கு,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, மீடியா முன் அவர்கள் எதற்கு வரவேண்டும் ? எங்கள் முன்தான் அவர்கள் வர வேண்டும் அதற்காக நோட்டிஸ் அனுப்பி உள்ளோம் , உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமும்மில்லை என்று அழைப்பை துண்டித்தார் .
25 செண்ட் நிலத்தை 25 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் பழங்குடி பெண் விவசாயி ஒருவர் போராடி வருவதும் , நீதி மன்றங்கள் தீர்ப்பை மதிக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதும் அப்பகுதி மக்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
– மணிகண்டன்