ஹாலிவுட் பட பாணியில் கார் பார்க்கிங்கில் கைமாறிய ஹவாலா பணம் ! த்ரில் ஸ்டோரி !
மதுரை சட்னிக்கு தான் பேமஸ் … இப்போ இதுக்குமா? னு கேள்வி கேட்பது போலத்தான் அமைந்துவிட்டது அந்த சேசிங் சம்பவம். மதுரை என்றாலே, மீனாட்சி அம்மன் தான். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக இருந்தாலும் தவறாமல் பார்வையிட்டு செல்லும் இடங்களில் முதன்மையானது. எப்போதும் பரபரப்பாகவும் பலரும் வந்து செல்லும் இடமாகவும் இருக்கிறது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகம்.
வடக்கு மூல ஆவணி வீதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. தரை தளத்திற்கும் கீழாக அண்டர்கிரவுண்ட்டும் இரண்டு அடுக்குகளிலும் கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்து, ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சில பேக்குகளை இடம் மாற்றியிருக்கிறார்கள். இதனை, Park Lens India Private limited என்ற நிறுவனத்தின் சார்பில் பராமரிக்கப்படும் அந்த கார் பார்க்கிங் மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கிறார்.

மதுரை மாநகர கமிஷனர் லோகநாதன், உத்தரவின் பேரில் துணை ஆணையர் இனிகோ திவ்யன், சரக உதவி ஆணையர் சூரக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில், களமிறங்கிய விளக்குத்தூண் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன், எஸ்.ஐ. விஜயகுமார், தலைமைக்காவலர் வேல்முருகன் ஆகியோரை கொண்ட போலீசார் சம்பவ இடத்தை இரகசியமாக நோட்டமிட்டனர். சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடவடிக்கைகளை பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அப்போதுதான், வழக்கம்போல சில கார்களில் பார்க்கிங்கில் நிறுத்தப்படுகிறது. TN 59 BM 7000 என்ற பதிவெண் கொண்ட VENTO ரக காரும், MH 09 GU 1423 என்ற VENUE ரக காரும் அருகருகே நிறுத்தப்படுகிறது. அப்போது, ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு பேக்குகள் இடம் மாறுவதை கையும் களவுமாக போலீசார் டீம் கொத்தி தூக்கியிருக்கிறது. ஹைடெக் பேக்குகளை திறந்து பார்த்தால், எல்லாமே பணக்கத்தைகளாக இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார், உடனடியாக இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி அவர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்திருக்கிறார்கள்.
போலீசாரின் அதிரடி சோதனையில், மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் பாலாஜி கோல்ட் டெஸ்டிங் கம்பெனி என்ற பெயரில் நிறுவனத்தை நடத்திவரும் பாபுராவ், மற்றும் அவரிடம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவரும் பிரதமேஷ் ஆகியோர் போலீசாரின் பிடியில் சிக்கினர். மேலும், மற்றொரு காரில் மஹாராஷ்டிராவை சேர்ந்த விட்டல், அக்ஷய், விஜய் ஆகியோரும் சிக்கினர். இவர்கள் ஐந்து பேரிடம் இருந்து 5 பேக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கோடியை என்பது இலட்சம் ரூபாய் மற்றும் ஆறு செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, வருமான வரித்துறையின் இணை ஆணையர் ரவீந்திரன், ஆய்வாளர்கள் ஆர்.கே.கணேஷ், சுப்புராம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றவாளிகள் ஐந்து பேரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும் மதுரை போலீசார் ஒப்படைத்துள்ளனர். வருமானவரித்துறையினர் மேற்படி கும்பலிடமிருந்து தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
மதுரை போலீசாரும், வருமான வரித்துறையினரும் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சோதனையில் பிடிபட்டது, ஹவாலா பணம்தான் என்பதை உறுதி செய்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து உண்டி எனப்படும் முறையில் பரிமாற்றம் செய்வதற்காக கையாளப்பட்ட பணம் என்பதாக தெரிவிக்கிறார்கள். சட்ட வழிமுறைகளின்படி, இந்த பணத்தை பரிமாற்றம் செய்வதாக இருந்தால், அரசுக்கு வரி கட்ட வேண்டியிருக்கும் என்பதாலேயே, இந்த நெட்வொர்க் கும்பல் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொண்டு சட்டவிரோதமான முறையில் பணத்தை பரிமாற்றம் செய்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ள விவரம் வெளியாகியிருக்கிறது.
வருமான வரித்துறையினரின் தொடர் விசாரணையில்தான், இந்த கும்பலின் தலைவன் யார்? இவர்களது நெட்ஒர்க்கில் இருப்பவர்கள் யார்? என்ற விவரம் தெரியவரும். தமிழகத்தில் அதுவும் மதுரையில் ஹாலிவுட் பட பாணியில் பணப்பெட்டிகள் கைமாறிய சம்பவம் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்