உழைப்பு – உணவிடுதல் – உதவுதல் என்பதே என் வாழ்க்கை முறை குண்டூர் மாரிமுத்து நெகிழ்ச்சி- எளிய மனிதர்கள் மகத்தான சாதனை – தொடா் – 6

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி, விமானநிலையம் அடுத்துள்ள குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட திருவளர்ச்சிப்பட்டியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து, தற்போது அய்யனார் நகர் 6-ஆவது தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து. ஆனாலும், குமார் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.

அவரது பிசினஸ் ரியல் எஸ்டேட். பிளாட்டுகளை விலைக்கு வாங்கி, அதில் அழகிய வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறார். பொதுவில் ரியல் எஸ்டேட் பிரமுகர் என்றாலே, கழுத்திலும் கையிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளை தொங்கவிட்டபடி, சொகுசு காரில் அவர் சார்ந்திருக்கும் கட்சிக் கொடியை பறக்கவிட்டபடி, பந்தா காட்டும் பேர்வழிகளாகவே பலரையும் பார்த்து பழகியிருக்கிறோம். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் மாரிமுத்து (எ) குமார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

எளிய விவசாயியைப் போலவே, காலை 6 மணிக்கு வயலில் நிற்பார். பிள்ளைகளை பள்ளியில் கொண்டு சேர்த்துவிட்டு பத்து மணிக்கு அலுவலகத்தில் இருப்பார். பத்திர பதிவு தொடர்பான பணிகள் உள்ளிட்டு அலுவல் பணி முடித்துவிட்டு, மீண்டும் மாலையில் பள்ளிச் சென்ற பிள்ளைகளோடு வீடு சேர்ந்திருப்பார். அதன்பின்னர், திமுகவின் கிளைச் செயலராக கட்சிப்பணி முடித்து, மீண்டும் அலுவலகம் சென்று இரவு வீடு திரும்ப எப்படியும் மணி பத்து ஆகிவிடும். நாளொன்றுக்கு 16 மணிநேரம் பம்பரமாய் சுழலுபவர்.

இவற்றையெல்லாம் தாண்டி, அவருக்கென்றே தனிச்சிறப்பான ஈகை குணம் ஒன்று குடிக்கொண்டிருக்கிறது. அவற்றுக்காகவே, எளிய மனிதர்களின் மகத்தான சாதனை பக்கங்களுக்காக மாரிமுத்துவை சந்தித்தோம். அவர் நம்மோடு உரையாடத் தொடங்கினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி விற்பனை செய்துவருகிறேன். வருடத்திற்குச் சராசரியாக 2 வீடுகள் கட்டி விற்பேன். அதிலிருந்து எனக்குத் தேவையான வருமானம் கிடைத்துவிடும். அந்த வருமானத்தால் நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம்.

நான் ஒவ்வொரு வீடும் கட்டி முடித்தவுடன், என் தொழில் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை எடுத்து, எங்கள் குலச்சாமிக்கு ‘கிடா’ வெட்டி விருந்து வைப்பேன். அதில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 500-க்கு மேல் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

கெட்டி எலும்பு குழம்பு, மட்டன் சுக்கா, சிக்கன் மசாலா, முட்டை கிரேவி என்று விருந்து வைப்பேன். என்னை நன்கு அறிந்த உறவினர்கள் தவிர்த்த, புதிய நண்பர்கள் என்னை வாழ்த்தி என்னிடம் அன்பளிப்பு கவர் கொடுப்பார்கள். அதை வாங்க மறுத்து, என்னை மனதார வாழ்த்துங்கள். வளர்கிறேன் என்று சொல்லி, கொடுத்த அன்பளிப்பு கவரைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.

திருவளர்ச்சிப்பட்டி திமுக கிளைச் செயலாளராகவும் இருந்துவருகிறேன். என்னிடம் வீடு வாங்கிய பலர் இன்றுவரை எனக்கு நண்பர்களாக உள்ளனர். அதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் எந்த உதவி கேட்டாலும், எந்த நேரமானாலும் தட்டாமல் உதவி செய்வேன். வெளியூரில் இருக்க நேரிட்டால் நண்பர்களை அழைத்து, அந்த உதவியைச் செய்யச் சொல்வேன்.

பெரும்பாலும் என்னிடம் வீடு வாங்குபவர்கள் வெளியூர்க்காரர்களாகவே இருப்பார்கள். அதனால் புதுமனை புகுவிழா நடத்தும்போது, ஹோமம் வளர்ப்பது, காலை சிற்றுண்டி, பகல் விருந்து, விழாவுக்குத் தேவைப்படும் துணிப்பந்தல், நாற்காலி, ஒலிபெருக்கி, சீரியல் செட் போன்ற அனைத்தையும் செய்யச் சொல்லி என்னிடம் அந்தப் பணியைக் கொடுத்துவிடுவார்கள்.

அந்தப் பணிகளை என் வழக்கமான பணிகளுக்கிடையில் செய்து கொடுப்பேன். இடையில் நான் செய்துகொடுத்த பணிக்காக எனத் தனியாக ’சர்வீஸ் சார்ஜ்’ என்று எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டமாட்டேன். என்னை மனதார வாழ்த்துவார்கள். அதுபோதும் என்றே நினைத்துக்கொள்வேன். இதைப் பெருமையாக எண்ணுகிறேன்.

என்னோடு நட்பு கொண்டுள்ள நண்பர்கள் வீட்டு விஷேசங்களையும் இதுபோலவேதான் கையாளுவேன். அந்தந்த நிகழ்வுக்குத் தேவைப்படும் அனைத்தையும் செய்து கொடுத்து விடுவேன். “நாங்கள் பணம் கொடுக்காமல் எல்லாச் செலவையும் செய்துகொடுத்துவிட்டாய்” என்னை நெஞ்சார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்துகளை எவ்வளவு இலட்சம் கொடுத்தும் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிடமுடியாது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஷேசம் என்று மட்டுமில்லை, துக்க நிகழ்வுகளிலும் முதல் ஆளாய் நிற்பேன். பந்தல் போடுவது தொடங்கி, மயானத்தில் குழி வெட்டுவரை வரையில் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து கொடுப்பேன். எதிர்பாராத, திடீர் மரணம் நிகழும்போது சமயத்தில் நண்பர்கள் தேவையான பணம் இல்லாமல் திகைத்து நின்றார்கள் என்றால் அவர்களுக்குத் தேவைப்படும் தொகையைக் கொடுத்து உதவுவேன். மரண நிகழ்வின்போதும் மட்டும் என்னுடைய பிசியான எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து உதவி செய்வேன்.

திருவளர்ச்சிப்பட்டி திமுக கிளைச் செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணியையும் செய்துவருவேன். அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலின் பிறந்தநாள் என்றால் ஊர் முழுக்க இனிப்புகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

நாள்தோறும் உழைத்துப்பெறும் ஊதியத்தால் சிறப்பாக வாழ்ந்து வருகிறேன் என்பதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கின்றதோ அந்த அளவுக்கு நண்பர்களின் குடும்பங்களுக்கும் உதவியாக இருப்பதில் நான் மனநிறைவு கொள்கிறேன். பணம் மகிழ்ச்சியைத் தந்தாலும், நண்பர்களுக்கு உதவி செய்து, அவர்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால்தான் நான் மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறேன்”என்று உரையை நிறைவு செய்தார்.

அறிஞர் ஒருவர் பகல் நேரத்தில், கையில் எரியும் விளக்குடன் கிரேக்க நகர வீதிகளில் எதையே தேடிக் கொண்டிருந்தார். அவரிடம், “பகல் நேரத்தில் கையில் விளக்குடன் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “மனிதர்களைத் தேடுகிறேன்” என்றார்.

“நாங்கள் மனிதர்கள் இல்லையா?” என்று அவர்கள் திருப்பிக் கேட்டபோது, “தன் வேலையை மட்டும் செய்பவன் மனிதன் இல்லை. சக மனிதர்களுக்கு உதவி செய்பவர்களே மனிதர்” என்றார், அந்த அறிஞர். தம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்கு உதவி செய்யும் மாரிமுத்து போன்ற மனிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோம்.

 

— ஆதவன்.

 

இதையும் படிங்கள் ! .. 

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி – எளிய மனிதர்கள் – சாதனையாளர்கள் – தொடர் – 1

 

விலையில்லா நூல்களை வழங்கி, வாசிப்பை இயக்கமாக்கிய அரசெழிலன் ! எளிய மனிதர்கள் – மகத்தான சாதனை தொடர் – 2

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி – ‘துப்பாக்கி’ வெங்கடேசன் ! எளிய மனிதர்களின் மகத்தான் சாதனை தொடர் – 4

”பணம் சோ்க்கவில்லை மனிதா்களைச் சோ்த்து வைத்துள்ளேன்” ஆட்டோ செல்வம் – எளிய மனிதர்கள் மகத்தான சாதனை – தொடா் – 5

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.