ரயிலில் கிலோ கணக்கில் கஞ்சா சிக்கயது எப்படி ! மதுரை அதிர்ச்சி !
மதுரையில் அதிர்ச்சி! கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்ட உயர் ரக கஞ்சா போதைப்பொருட்கள் ! டெல்லியில் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், சென்னையிலும் பல இடங்களில் விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு குடோனில் படம்பிடிக்க சென்றிருந்த பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் வைத்து 180 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து பயணி ஒருவர் போதை பொருட்களை கடத்தி செல்வதாக, வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டிஆர்ஐ) கவனத்திற்கு வந்ததையடுத்து, மதுரை மற்றும் இரயில்வே போலீசாரின் கூட்டு நடவடிக்கையின் வாயிலாக குற்றவாளியை மதுரையில் மடக்கிப் பிடித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்ற அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து, இரயிலில் அவர் உடன் எடுத்து வந்த சுமார் 180 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபைட்டமின் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மேலும், சென்னையிலுள்ள அவரது வீட்டில் மேலும் சில கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட தகவலும் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்குள்ளாக, இந்த தகவலை கேள்விபட்ட அவரது மனைவி, வீட்டிலிருந்த போதைப்பொருட்களை அருகிலுள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் வீசியிருக்கிறார். இதனையடுத்து, குப்பைக்கிடங்கை கிளறிய போலீசார், அங்கிருந்து 6 கிலோ எடையுள்ள 3 பாக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்திருக்கிறது. இந்த கடத்தல் கும்பலின் நெட்ஒர்க் மற்றும் தொடர்புடையவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். சாதாரண விமல் பாக்கு, ஹான்ஸ், கூலிப் விற்பணைக்கே கடுமையான நடவடிக்கைகளை தமிழக போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில், உயர்ரக போதை பொருளான மெத்தபைட்டமின் என்ற போதைப்பொருள் கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
– ஷாகுல், படங்கள் : ஆனந்த்.