உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம் .!
மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்மைக்காலத்தில் ஊடகங்களில் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான தொடர் போராட்டங்கள் மூலம் மக்கள் கவனத்தைப் பெறுகின்றன. இன்று மாதா மாதம் சம்பளமும்/ ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்கு கூட அரசிடம் கையேந்தும் நிலையில் பல்கலைக் கழக நிதி நிலைமை உள்ளது.
11.10.2025 ஆம் நாள் ஆங்கில இந்து நாளிதழில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடக்கூட பணமின்றி வாடும் பல்கலைகழகத்தின் பொருளாதார நெருக்கடி குறித்து கண்டோம் .
தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் என பல்துறைகளிலும் கோலோச்சிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தமிழ்நாட்டுப் பல்கலை கழகங்கள் இன்று இயங்கவே தடுமாறுவது கவலை அளிக்கின்றது.
கடந்த சில வருடங்கள் கால தணிக்கை அறிக்கைகள் இன்றைய நிதி நெருக்கடிகள் ஏற்பட பல காரணங்களை சுட்டிக்காட்டுகின்றன.
17.05.1999 நாளிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி பல்கலைக்கழக பணியாளர்களுக்கு தரப்படும் சம்பளம் மற்றும் படிகள் ஆகியன தமிழ்நாடு அரசால் ஈடு செய்யப்படும்.
மேற்சோன்ன அரசாணையின்படி ,2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கழகத்திற்கான நிதி வழங்கப்படவில்லை.
2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் பல்கலைகழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ஏழுகோடியே 74 லட்சம்.
அது சிறிது சிறிதாக கடந்த 17 வருடங்களில் அதிகரித்து 2023-24 ஆம் ஆண்டுகளில் ரூபாய் 2990900902 என ஏறத்தாழ 300 கோடி ரூபாய் நிலுவைத்தொகை அரசால் தரப்படவில்லை.
ஒருவேளை அந்தப் பணம் உரியநேரத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் 500 கோடி உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் என தணிக்கை அறிக்கை கூறுகிறது.
மேற் சொன்ன நிலுவைத்தொகையை அரசு தராமல் இருப்பதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் விதி மீறல்களோடு நியமனம் செய்யப்பட்டதை அரசு காரணமாக கூறுகிறது.
பல்கலைக்கழகத்தில் பணியாளர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகளும் பணி விதிகளும் ஏற்படுத்தப்படவில்லை, என்ற காரணமும் உண்டு.
உதாரணமாக, அலுவலக உதவியாளருக்கு அரசின் சம்பள விகிதத்தை விட கூடுதலாக இருப்பதாகவும், அதுபோன்று முதுநிலை மேற்பார்வையாளர்கள், உதவி பதிவாளர்கள், முதுநிலை துணைப்பதிவாளர் ஆகியோருக்கு சம்பள விகிதம்கூடுதலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசுபல்கலைக்கழக மேற்பார்வையாளர்கள் அரசாங்க மேற்பார்வையாளரை விட குறைவாக சம்பளம் வாங்குவதாலும் எழுத்தர் துணைப்பதிவாளர் ஆகிய பதவிகளிலும் அரசு ஊதியமும் பல்கலைக்கழக ஊதியமும் ஒன்று போலவே உள்ளது.
இது தவிர பல்கலைக்கழகத்தின் நிதிநெருக்கடிக்கு இரு முக்கிய காரணங்கள் நீதிமன்றங்களும் , மத்திய பல்கலைக்கழக நிதிஆணைய சட்டமும் என்றால் தவறல்ல.
மேலும் பல்கலைகழக தணிக்கை அறிக்கையில் வழக்கறிஞர்களுக்கு கட்டுப்படுத்தப்படாத கட்டணங்கள், பட்டமளிப்பு விழா வீண் செலவுகள் என நிர்வாகச் சீர்கேடுகளும் உண்டு. சிஏஎஸ் பதவி உயர்வுகளில் விதி மீறல்களும் நிதி இழப்புகளுக்கு காரணமாயின.!
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் தொலைதூர கல்விதுறை 2010 ஆம் ஆண்டில் 49298 மாணவர்களைகொண்டிருந்தது, அதே துறை 2023 ஆம் ஆண்டில் 6236 மாணவர்களையேக் கொண்டுள்ளது. இருப்பினும் மதுரைகாமராஜர் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வித்துறை2023-24 வருடங்களில் ஐந்தரை கோடிக்கு குறையாத உபரி பணத்தை கையிருப்பாக கொண்டிருந்தது.நீதிமன்றமும் யூஜிசி சட்டமும் பல்கலைக்கழகத்தின் இறகுகளை வெட்டாவிட்டால் இதைவிட பத்து மடங்கு பணத்தை தொலைதூரக் கல்வித் துறையின் மூலம் ஈட்டியிருக்க முடியும் .
பல்கலைக்கழக மானிய குழு சட்டப்படி தொலைதூர கல்வியானது அந்த மாநில எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி பல்கலைக்கழகத்திற்கு நிதி அளிக்க வகை செய்யும் பல்கலைக்கழக மானிய குழு சட்டத்தால்கூறப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 2023 SCC Online Mad 567 என்ற வழக்கில் மாண்புமிகு நீதிபதி ஆர். சுப்பிரமணியம் மற்றும் கே. குமரேஷ் பாபு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியன பல்கலைக்கழகங்கள் தத்தம் எல்லைகளுக்கு உள்ளேயே இயங்க வேண்டும் எனவும், நாற்பதாவது தொலைதூர கல்வி குழுவில் எடுக்கப்பட்டதீர்மானத்திற்கு எதிராக தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியேஇயங்க கூடாது என்ற முடிவினை சுட்டிகாட்டியும் “பேராசிரியர் யஸ்பால்” வழக்கைச் சுட்டிகாட்டி உயர்கல்வியைகட்டுப்படுத்துவதில் தேசிய மானிய குழு விதிகள்பயன்படுதுவதையும் அத்தீர்ப்பு காட்டியது. இறுதியாக 2023 வழக்கில் பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன்பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் வழக்குகளை தள்ளுபடி செய்த மெட்றாஸ் உயர்நீதிமன்றமானது தொலைதூர கல்வியின் மீது மத்திய அரசின் கட்டுப்பாடுகளை உறுதி செய்தது.
பல்கலைக்கழக மானியகுழு சட்டம் 1956 இன் படி அவ்வாணையத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று பல்கலைக்கழகங்களின் பொருளாதாரதேவைகளை பூர்த்தி செய்வது.
பல்கலைக்கழக மானிய குழு சட்டப்பிரிவு 12 இன் படி பிறபல்கலைக்கழகங்களுக்கு கொடுக்கப்படும் நிதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ பூஜ்ஜியம் ஆகிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்புவரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கையிருப்புபணம் ஏறத்தாழ 300 கோடி இருந்தது. இன்று மத்திய அரசின் பல்கலைக்கழகமானிய குழு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குகொடுக்கும் நிதி பூஜ்ஜியம் மட்டுமே.
மாநில அரசின்நிதி பங்களிப்பு மட்டுமே காமராஜர் பல்கலைக்கழகத்தைஅரைகுறை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும்பல பல்கலைக்கழகங்கள் குறித்த ஒரு வழக்கில் வெறும்நாற்பதாவது தொலைதூரக் கல்விக் குழு கூட்டத்தில் எடுத்தமுடிவையும், பல்கலைக்கழக மானிய குழு நிபந்தனையும்வைத்தே மேற்சொன்ன உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு மேல் செயல்பட்டதொலைதூரக் கல்வி முடக்கப்பட்டது, பற்றியும் அதுபல்கலைக்கழகங்களுக்கு பெற்று தந்த நிதி நின்றுபல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரங்கள் வறண்டு போனதுகுறித்தோ, எவ்விதமான விவாதங்களும் அத்தீர்ப்பில்இடம்பெறவில்லை.
அரசியலமைப்புச்சட்ட நீதிமன்றங்கள்பெரும்பாலான நேரங்களில் தங்களது தீர்ப்புகளில் ஒரு நாள்முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ மாறுவது பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி 15 வருடங்களாக நிரப்பப்படவில்லை. இது தவிர பட்டதாரிகளுக்கான 15 உறுப்பினர் பதவிகளும் பதினைந்து வருடங்களுக்கு மேல் காலியாக உள்ளன.!
அண்மையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றஉயர் அதிகாரி ஒருவர் பணி பலன்களை பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகியே பெற வேண்டி இருந்தது. பலபணியாளர்களுக்கும் இதே நிலைமை தான்.
அண்ணா பல்கலைக் கழகம்,டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம்,பாரதியார் பல்கலைக் கழகம் , பாரதிதாசன் பல்கலைக் கழகம்,காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ் பல்கலைக் கழகம் , திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி நிரப்பப்படவில்லை.மத்திய மாநில முரண்களும் பல்கலைக்கழக நிலைமையை குப்புறத் தள்ளி குழி பறிக்கின்றன.
மத்திய அரசின் யூஜிசி சட்டத்தாலும், மாநில அரசின் கவனக்குறைவாலும், நீதித்துறையாலும் பலியான பல்கலைக்கழகங்களில் முதல் பல்கலைக்கழகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மூடு விழா கண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.
— தி.லஜபதிராய்








Comments are closed, but trackbacks and pingbacks are open.