19 முறை மனு கொடுத்தும் பிரச்சினை தீரல … புலம்பும் பழங்குடியின பெண் விவசாயி ! விசாரணையை முடுக்கிவிட்ட ஆட்சியர் !
பழங்குடி பெண் விவசாயிக்கு அரசு ஒதுக்கிய தரிசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் உடந்தையோடு அதிமுக பிரமுகர் அபகரித்ததாக 19 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் வடித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடி மலைவாழ் மக்களுக்காக வருவாய் துறை வசமுள்ள புறம்போக்கு இடங்களில் விவசாயம் , மற்றும் கால்நடை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு மலையில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு வழங்கப்பட்டது . அதற்கு தரை வரியாக அரசாங்கத்திற்கு அனுபவத்தில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வரி கட்டி வரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த நிலத்தை மற்றொரு பழங்குடி விவசாயி நினைத்தாலும் சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் , நான்கு தலைமுறைகளாக பெண் விவசாயிடம் இருக்கும் நிலத்தினை அரசியல் புள்ளிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி அதிமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர் அபகரித்ததுமில்லாமல் அதில் லே-அவுட் அமைத்து விற்பனை செய்து விட்டதாக பழங்குடினர் ஒருவர் பல வருடங்களாக சம்மந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களிடம் புகார் அளித்துக்கொண்டே வருவதும் , அதற்கு தீர்வு காணாமல் அலட்சியயமாக இருக்கும் சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றது.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள அத்னாவூர், “மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளியம்மாள்”( 81). இவருக்கு . நான்கு தலைமுறைக்கு முன்பே வருவாய் துறையால் வழங்கப்பட்ட புறம்போக்கு நிலம். மற்றும் ஓடை புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்தும் கால்நடைகள் மேய்ச்சலுக்கும் பயன்படுத்தியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் , காளியம்மாள் அனுபவத்தில் இருக்கும் நிலத்தை விஏஓ , தாசில்தார் ஒத்துழைப்புடன்” அபகரித்து , சுற்றிலும் முள்வேலி அமைத்து அதனை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து விட்டதாக அத்னாவூர் கிராம பஞ்சாயத்து தலைவி ராஜஸ்ரீ கணவர் “அதிமுக மாவட்ட பிரதிநிதியும் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கருமான கிரிவேலன்’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டருக்கு புகார் பறந்துள்ளது.
அந்த புகார் மனுவில் , எங்கள் பூர்வீக நிலத்தையொட்டி ,(சர்வே எண். 23-ல் , 25 செண்ட் ) , எங்கள் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட சுமார் 2 ஏக்கர் ( Revenue ) புறம்போக்கு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் “விஏஓ சிவக்குமார்” அப்போதைய ‘தாசில்தார் சிவப்பிரகாசம்” ஆகியோர் அத்னாவூர் கிராம பஞ்சாயத்து தலைவி ராஜஸ்ரீ கணவர் A.R.கிரிவேலன் என்பவருக்கு போலியான ரிக்கார்ட் செய்து தாரை வார்த்துவிட்டார்கள் .

அதை பயன்படுத்தி நிலத்தை அபகரித்து சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து வீட்டு மனைகள் அமைத்து ஒரு ஃப்ளாட் சுமார் ரூ.3,00,000/- வரை, விற்பனை செய்துள்ளார். இது சம்மந்தமாக கடந்த 13/4/2018 முதல் 15/2/2025 வரை 19 முறை அரசுக்கும் , வருவாய் துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மனு கொடுத்து பார்த்துட்டோம். எந்த பயனுமில்லை. போலீஸில் புகார் அளித்தால் ஏலகிரி மலை சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் கோதண்டம் பெரிய இடத்தில் உள்ளவர்களை பகைத்து கொள்கிறாய் இதன் விளைவை நீங்கள் மோசமாக சந்திப்பீர் என மிரட்டுவதாகவும் கிரவேலனுக்கு உடந்தையாக இருக்கும் சப் ரிஜிஸ்டர் விஏஓ , தாசில்தார் மற்றும் கிரிவேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அபகரிக்கப்பட்ட சுமார் 2 ஏக்கர் நிலத்தை மீட்டு தரவேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது .
மேலும், இதுகுறித்து மலைவாழ் பழங்குடி மூதாட்டி காளியம்மாளிடம் பேசினோம், “எங்கள் பூர்விக நிலத்தையோட்டி சுமார் இரண்டு ஏக்கர் மேய்ச்சல் மற்றும் ஓடை புறம்போக்கு நிலங்களை அன்றைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது . இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கும் இதுபோன்ற மேய்ச்சல் நிலங்கள் ஏராளமாக உள்ளது. அதில் தலைமுறை தலைமுறையாக ஜீவனம் நடத்தியும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தியும் வருகிறோம் . மலையில் வெளியாட்கள் வந்து குடியேறி வருவதால் பூர்வகுடிகளான எங்களை போன்ற மலையாளிகளின் கலாச்சார சீர்கேட்டில் சிக்கி சீரழிவதில்லாமல் உடமைகளையும் இருப்பிடங்களையும் இழந்து வருகிறோம்.
இதற்கு காரணம் எங்கள் இனத்தை சேர்ந்தவர்களே துரோகிகளாக உள்ளனர். அப்படி ஒருவர்தான் கிரிவேலன் போன்றவர்கள். இந்த குடிசை வீடு மழைக்கும் . வெயிலுக்கும் தாங்காததால உடல்நலம் நலிவுற்று போனதால இதன் அருகிலே சிமெண்ட் சீட் போட்ட சிறிய அளவிலான வீட்டை கட்டி வந்தேன் . அப்போது இருந்த இப்பகுதி விஏஓ சிவக்குமார் வீடு கட்டுவதை நிறுத்த சொன்னதால், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டோம் . அதன்பிறகு எங்கள் பகுதி பஞ்சாயத்து தலைவியின் கணவர் கிரிவேலன் வீட்டின் பேஸ் மட்டத்தை இடித்து தரைமட்டமாக்கிட்டு இடம் எனக்கு சொந்தமானது. குடிசைகளை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் தொலைச்சுடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
மலையில் உள்ள எங்களை போன்ற மக்களுக்கு அரசு வழங்கிய விவசாய மேய்ச்சல் நிலம் உள்ளது அங்கெல்லாம் போய் இவர் மிரட்டி அபகரித்து வீட்டு மனைகள் அமைத்து விற்பனை செய்வாரா ?
ஆடு மாடுகளுக்கு தீவனம் இல்லாமல் உயிர் இழக்கிறது. வனத்திற்குள் கால்நடைகளை விட கூடாது என வனத்துறையினரும் அச்சுறுத்துகிறார்கள். எப்படிதான் நாங்கள் ஜீவனம் செய்வது என கண்கலங்கி அழ தொடங்கினார்.
மேலும், கிரிவேலன் மற்றும் அவர் மகன் அபிலாஷ் ஆகியோரால் அபகரித்த இரண்டு ஏக்கரையும் மீட்டு தரவேண்டும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .
பஞ்சாயத்து தலைவர் ராஜஸ்ரீ -கிரிவேலன்
புகார் குறித்து கிரிவேலனிடம் கேட்டபோது, ”அவருடைய நிலத்தை அபகரிக்கவில்லை அவர்தான் அபகரித்துள்ளார். அந்த இடத்தை நான் ஜேஎம் ஹாரூனிடம் விலைக்கு வாங்கி பத்திரம் பதிவு செய்துள்ளேன்” என்றார்.
அந்த நிலத்தில் நீங்கள் ஃப்ளாட் போட்டு விற்பதாக புகாரில் கூறியுள்ளாரே என கேட்டதற்கு ? அரசு இடத்தை யாராவது ஃப்ளாட் போட்டு விற்க முடியுமா? என முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துவிட்டு நேரில் வாங்க பேசிக்கலாம் என்றார்.
மறுநாள் மீண்டும் அழைத்தவர் , சம்மந்தப்பட்ட தரிசு நிலத்தை அவருடைய அப்பா விற்றுவிட்டார். அது 50 பேருக்கு கைமாறி அந்த இடத்தை தற்போது நான் வாங்கி இருக்கிறேன். என்றார். வாங்கியதற்கு பத்திரம், பட்டா , என ஏதாவது ஆதாரம் உங்கள் பெயரில் இருக்கா என கேட்டதற்கு ? அது வாய்மொழியாக பேசி வாங்கியது எனவும் அதனால், விற்பனை செய்யும்போது வாய்மொழியாக பேசி விற்றுவடுவேன் என்றார்.
புகார் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, புகார் மனு அளித்திருந்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசு தரிசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்ய முடியுமா? என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷெனாஸ் அவர்களிடம் பேசினோம்.
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905 நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், அரசிடமோ அல்லது அரசு அனுமதியுடன் பயன்படுத்தி வரும் விவசாயி இடமோ அனுமதியின்றி நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் ஆக்கிரமிப்பை அகற்ற வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அதிகாரமுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை இடிக்கவும் அதிகாரம் உள்ளது. என்றார்.
இதுகுறித்து ஜவ்வாது ஏலகிரி பழங்குடி மலைவாழ் கமிட்டியின் தலைவர் ஜெயராமன் கூறுகையில்
“சிவன் அருள் ‘ மாவட்ட ஆட்சியராக இருந்த போது நேரிடையாக காளியம்மாள் வசிக்கும் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் இந்த இடம் காளியம்மாள் அனுபவத்தில் தான் இருந்து வருகிறது. இது அவருக்குதான் சொந்தம் என்றும் அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த குடிநீர் கிணறும் காளியம்மாள் அனுபவத்தில் இருந்து வரும் நிலத்தில் தான் உள்ளது . ஆட்சியர் மாறிய பிறகு அதிகரித்தை பயன்படுத்தி குடிநீர் குழாய்கள் பிடுங்கி எறிந்துவிட்டு சுற்றிலும் சுவர் எழுப்பி அபகரித்துக் கொண்டார்.
அந்த கிரிவேலன் மனைவி பஞ்சாயத்து தலைவரின் கணவர் என்பதால் பல இடங்களில் அரசு வழங்கிய புறம்போக்கு நிலங்களை அடியாட்கள் மூலம் அபகரித்து ஃப்ளாட் போட்டு விற்று வருகிறார். இதே போன்று மற்றொருவர் அனுபவத்தில் இருந்து வரும் நிலத்தை ஆக்ரமிப்பு செய்து பூங்கா அமைக்க முயன்றார் நான்தான் தலைமைச் செயலாளர் வரை சென்று போராடி மீட்டோம் என்றார்.
தமிழ்நாடு பழங்குடி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் சண்முகத்திடம் பேசினோம். பூமிதான இயக்கத்தின் கீழ் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஏலகிரி போன்ற மலையில் நிலத்தை திருடி ரியல் எஸ்டேட் சூதாட்டம் கும்பல் விடுதிகள் கட்டவும், இடத்தை வாடகைக்கு விட்டு காசு பார்த்து வருகின்றனர்.
இந்த நிலத்திருட்டு கும்பல்கள் ,அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி போலிப்பட்டா பெறுவது ஏலகிரி மலையில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதாக புகார் வருகிறது. “கிரிவேலன் ‘ என்ற ஒரு புரோக்கர் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளதாக அறிந்தேன்.
நாட்டில் உள்ள 23 மாநிலங்களில் பழங்குடியினரின் நிலத்தை மீட்டுத் தரும் சட்டம் உள்ளது. தமிழகத்திலும் இச்சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பல ஆண்டுகளாக சாகுபாடி செய்து வரும் மலையாளி இன பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டா ஜாதிச்சான்றிதழ் விரைந்து வழங்க வேண்டும்.

2006-ம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கால்நடைகள் மேய்க்க அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களை அவர்களிடமே மீண்டும் வழங்க வேண்டும். என்றார்.
விளை நிலங்களை வீட்டு மனைகளாக ‘லே-அவுட்’ போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவாகும். அதையெல்லாம் மீறி அப்போதைய விஏஓ சிவக்குமார், தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் விதிகளை மீறி தாரை வார்த்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவர்கள் மீது பழங்குடி பெண் 19 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அரசு எந்திரங்கள் அலட்சியமாக இருந்து வருவது ஆச்சரியமாக . அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
லாஸ்ட் புல்லட் : மூதாட்டியின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறார், மாவட்ட ஆட்சியர். இந்த முறையாவது மூதாட்டிக்கு ஒரு நல்ல தீர்வை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
— மணிகண்டன்.