ஓய்வூதியம் என்ற கருத்தியல் முதல்முதலில் ரஷ்யாவில் தோன்றி, எப்படி உலகெங்கும் விரிந்தது என்பதை முதல் பாகத்திலும்; 2004 இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இரண்டாவது பாகத்திலும் பார்த்தோம்.
CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை. அரசு ஊழியர்கள் செலுத்திய 10% பணத்தைக்கூடத் தர மறுத்து விட்டார்கள். 2011 ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனாலும், கலைஞர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை ஜெயலலிதா அரசு எவ்வித மாற்றம் இல்லாமல் அமுல்படுத்தி வந்தது. பலர் நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் அரசு ஊழியர் செலுத்திய பங்கீடு 10% அரசு பங்கீடு 10% அதற்குரிய வட்டியுடன் வழங்க ஆணையிட்டது.
உயர் நீதிமன்ற உத்திரவைத் தமிழக அரசு அமுல்படுத்த மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தமிழக அரசு 10% வட்டியுடன் வழங்கினார்கள். 2016ம்ஆண்டு பிப்ரவரி வரை இந்த நிலை நீடித்தது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ம் தேதி முதல் 10 நாட்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய வேலை நிறுத்தத்தின் விளைவாக 19.2.2016 அன்று சட்டமன்றத்தில் 110 ன் விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்காக 11 அறிவிப்புகளை அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டார். அதில் இரண்டு அறிவிப்புகள் CPS தொடர்பானது ஒன்று: CPS ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை வழங்க ‘வல்லுநர் குழு’ அமைத்தது. இரண்டு: CPS திட்டத்தில் இறந்த மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு ஊழியர் செலுத்திய பங்கீடு 10% அரசு பங்கீடு 10% அதற்குரிய வட்டியுடன் One Time Settlement வழங்கப்படும் என்பதாகும். அரசாணையில் ஓய்வூதியம் கோர மாட்டேன் என்று under taking அளித்தால் தான் One Time Settlement வழங்கப்படும் என்று நிபந்தனையும் இருந்தது. One Time Settlement நிபந்தனையைத் திரும்பப் பெற 10 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. CPS ரத்து செய்வது தொடர்பாக வல்லுநர் குழு அமைத்தது இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதில் (பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு) பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS திட்டம்) ஏன் அமுல்படுத்தினார்கள்? புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டமாக்கிய காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதன் முதலாக NPS திட்டத்தை ஏன் ரத்து செய்தது? ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், இமாச்சல் தவிர இதர மாநிலங்கள் CPS திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை? NPS திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த பஞ்சாப், கோவா, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஏன் ரத்து செய்யவில்லை? ராஜஸ்தானில் NPS திட்டத்தை ரத்து செய்த காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பின்பு NPS திட்டத்தை ஏன் ரத்துசெய்யவில்லை? மத்திய அரசு NPS திட்டத்தில் மாற்றம் செய்து
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) ஏன் அறிவித்துள்ளார்கள்? இதற்கான விடைகளைத் தெரிந்து கொண்டால்தான் CPS ரத்து என்ற கோரிக்கை வெற்றிபெறும்.
பன்னாட்டு முதலாளிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. NPS திட்டத்தை ரத்து செய்வது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்து என இந்திய ரிசர்வ் வங்கி அலறியது. ஓய்வூதியப் பலன்களை மேலாண்மை செய்வது, நிதிக் கொள்கையைத் தீர்மானிப்பது மத்திய அரசு, மத்திய அரசு அறிவிக்க வேண்டிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஏன் அறிவித்தது. மத்திய அரசு சார்பாக அறிவித்து இருந்தால் BJP கட்சிக்கு அரசியல் ரீதியாக இழப்பு ஏற்படும் என்பதால் ரிசர்வ் வங்கியை அறிவிக்கச் செய்தார்கள். மேலும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து NPS திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய நிதிச் செயலாளர் T.V.சோமநாதன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. சோமநாதன் கமிட்டி அமைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்த காங்கிரஸ் முதலாளிகளுக்கும் அரசியல் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட சமரச ஏற்பாட்டால், சோமநாதன் கமிட்டி அறிக்கையை எதிர்பார்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் NPS-ஐ ரத்து செய்யவில்லை. சோமநாதன் கமிட்டி அறிக்கையால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதிச்சுமை என்பதால் கர்நாடக அரசு UPS ஐயும் அமுல்படுத்தவில்லை.
மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் CPI(M) ஆட்சி இருந்தவரை அம்மாநிலங்களில் NPS திட்டத்தைக் கொள்கை ரீதியாக அமுல்படுத்தவில்லை.
(தொடரும்)
பா.பார்த்தசாரதி, புரவலர்,
அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக,
கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFRUCTO)








Comments are closed, but trackbacks and pingbacks are open.