அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இடம்பெற்று விடக்கூடாதென்று அன்றே எதிர்த்த அன்றைய உள்துறை அமைச்சர் !
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும்விதமாக பேசிவிட்டார் என்பது, கடந்த சில தினங்களாக பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றம் தொடங்கி நாடுதழுவிய அளவில் கண்டனங்களும், எதிர்ப்பு போராட்டங்களும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.
இன்று மட்டுமல்ல; அன்றைய சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காக கடும் எதிர்ப்பை தெரிவித்தவர் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், தமிழ்நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சிலின் தலைவர் வழக்கறிஞர் எம்.ரஹ்மத்துல்லா.
இந்த விவகாரம் தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியா இன்று இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை மனு தர்மத்தின் அடிப்படையில் மாற்றியமைக்க பெரும் முயற்சி நடைபெற்றுவருகிறது. இந்த முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் அம்பேத்காரின் பெயர் தொடர்ந்து உச்சரிக்கபட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்க தலைமை வகித்தவர் அம்பேத்கர் என்பது மட்டுமே நமக்கு தெரியும். அவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? அவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு வந்து விடக்கூடாது என்று கடுமையாக போராடியவர்கள் யார்? என்பது நமக்கு அதிகம் தெரியாது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க முதலில் அரசியல் நிர்ணய சபை ஒன்று தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. அந்த சபையை உருவாக்க இந்தியா மறைமுகமாக சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு பஞ்சாப், பிகார், அசாம் மற்றும் ஒடிசா மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுதேச சமஸ்தானங்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 389. அதில் 292 பேர் மாகாணங்களின் பிரதிநிதிகள், 93 பேர் சமஸ்தானங்களின் பிரதிநிதிகள். இந்திய தேசிய காங்கிரஸ் 208 இடங்களையும் (69%), முஸ்லீம் லீக் 73 இடங்களையும் வென்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கார் அவர்களை பிரதிநிதியாக தேர்வு செய்ய மும்பை மாகாணத்தில் அவர் நிறுத்தப்பட்டு அங்கே தோற்கடிக்கப்பட்டார். அன்று டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக வேலை செய்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். எப்படியாவது அம்பேத்காரை அரசியல் நிர்ணய சபைக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதே அவருடைய விட முயற்சியாக இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அவர் வங்காள மாகாணத்தில் நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று காங்கிரஸிற்கு அடுத்தபடியாக மிக பலமான மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியாக இருந்தது.
முஸ்லிம்கள் தங்களுடைய பிரதிநிதியாக ஒரு முஸ்லீமை தேர்வு செய்யாமல் அண்ணல் அம்பேத்கரை தேர்வு செய்து அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்பினார்கள். அம்பேத்கார் மட்டும் அன்று அரசியல் நிர்ணய சபைக்கு ஒரு பிரதிநிதியாக தேர்வு செய்யப்படவில்லை என்றால், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது மனுநீதியின் அடிப்படையிலான சட்டமாக மாறியிருக்கும்.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிராஷாத் அவர்களும் அரசியலமைப்பு வரைவு குழுவிற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசியல் நிர்ணய சபையில் பதினைந்து பேர் பெண்கள் இடம் பெற்று இருந்தார்கள் . டாக்டர் அப்துல் கலாம் ஆசாத், முஹம்மது இஸ்மாயில் மற்றும் சையது முஹம்மது ஷாதுல்லா போன்ற இஸ்லாமிய பிரதிநிதிகளும் முக்கியமாக இடம் பெற்று இருந்தார்கள்.
உலகில் உள்ள ஜனநாயக கோட்பாடுகள் அனைத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வந்து சேர்ந்தவர் அம்பேத்கார்.
சோஷலிசம் பெடர்லிஷம் செக்யூரலிஷம் டெமாகிரசி போன்ற உயர்ந்த அரசியல் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கின்ற பிரெஞ்சு புரட்சியின் தத்துவங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் அடங்கியுள்ளன.
சமூக நீதியின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் மிக நீண்ட விவாதத்திற்கு பிறகு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க நாட்டில் இருந்து அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஷரத்துகள் நீதித்துறை சுதந்திரம் ஆகிய விஷயங்கள் நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் உள்வாங்கி இருக்கிறது. ஐரிஸ் நாட்டில் இருந்து ஒரு அரசாங்கத்தின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற ஷரத்துகள் நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்வாங்கப்பட்டு இருக்கிறது.
ரஷ்யாவில் இருந்து அடிப்படை கடமைகள் ஜெர்மன் நாட்டில் இருந்து நெருக்கடி நிலை அதிகாரங்களை பயன் படுத்தும்முறை இங்கிலாந்து நாட்டில் இருந்து பாராளுமன்ற நடைமுறை என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் நல்ல கருத்துக்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து தன்னுடன் இணைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர் என்றால் மிகையாகாது.
அவரை தவிர, உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். மஹாத்மா காந்தியின் அஹிம்சை சித்தாந்தம் முதல் கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமை சித்தாந்தம் வரை இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைத்து நல்ல விஷயங்களையும் உள்வாங்கி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவுகளை வேண்டுமானாலும் இந்திய பாராளுமன்றம் திருத்தம் செய்யலாம். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டு இருக்கும் அடிப்படை அம்சங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ” என்று சொல்லப்பட்டு உள்ளது. பாஸிஸத்தை தவிர எல்லா ஜனநாயக அம்சங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் அடங்கியிருக்கிறது.
இந்தியா பல்வேறு மொழிகள் மதங்கள் கலாச்சாரங்கள் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட சமயசார்பற்ற நாடு என்பதை பறைசாற்றுவோம். அண்ணல் அம்பேத்கர் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். அம்பேத்கார் மட்டும் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்தியா இன்றுவரை தாக்குபிடித்திருக்காது. தற்போது இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்களாக நம்பிக்கை அளிக்கும் வகையில் திகழ்கிறார்கள் என்பதும்; இந்திய பாராளுமன்றத்தில் அம்பேத்கார் பெயர் தொடர்ந்து ஒளிக்கப்படுகிறது என்பதும்; இந்திய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும் என்கின்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களை பாதுகாக்கும் நம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் இந்திய பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர்களின் பெயரை நிலைநாட்ட போராடும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொள்கிறது.” என்பதாக வரலாற்றுப் பார்வையில் இந்த விசயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.