நம்பிக்கையின் முத்துக்கள்! அனுபவங்கள் ஆயிரம்(6)
சில கதைகள் நம் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..
அப்படித்தான் என் சிறுவயதில் படித்த மகாபாரதம் எனும் மாபெரும் காவியம்.
அதிலுள்ள சில சம்பவங்கள் என் மனதில் இன்னும் ஒலிக்கின்றன… நான் மிகவும் ரசித்து ரசித்து படித்திருக்கிறேன்…
அதில் ஒன்று, நம்பிக்கையும் பாசமும் கலந்து உருவான ஒரு கதை…
துரியோதனன், பானுமதி, கர்ணன். நம்பிக்கையின் சின்னங்கள் பழமையான புறக்கதைகளில் சொல்லப்படும் இந்தச் சம்பவம்…
துரியோதனன் மனைவி பானுமதியும் கர்ணனும் ஒரு நாள் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். பாதி ஆட்டத்தில் திடீரென்று பானுமதி எழுந்தாள். அவள் தோற்கும் நிலையில் இருந்ததால் பயந்து ஓடப் பார்க்கிறாள் என்று நினைத்த கர்ணன் அவள் புடவையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சி செய்தான். கைதவறி பானுமதியின் இடுப்பில் இருந்த மேகலையில் கர்ணன் கை சிக்கவே மேகலையில் ஒட்டியிருந்த முத்துக்கள் சிதறின. பானுமதி திடீரென எழுந்ததற்குக் காரணம் அவளது கணவன் துரியோதனன் உள்ளே நுழைந்ததாகும். துரியோதணன் கண் முன்னால், முத்து மேகலை சிதறவே இருவரும் தலை குனிந்து நின்றனர்.
அடுத்தது என்ன நிகழுமோ என்று பானுமதியும் கர்ணனும் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், துரியோதனன் “ எடுக்கவோ கோக்கவோ என்றான். இந்த முத்துக்களை எடுக்கவா அல்லது மாலையாகக் கோர்த்துத் தரட்டுமா? என்று அன்போடு வினவுகிறான்.
அந்த வாக்கியத்தால் மட்டும் அல்ல …
அவன் மனத்தின் ஆழத்தில் இருந்த நம்பிக்கை முழுவதும் வெளிப்பட்டது.
அவனின் பார்வையில் கோபமில்லை, குற்றமில்லை,
அன்பும் நம்பிக்கையும் கலந்த ஒரு அமைதி மட்டுமே.
அந்தச் சொற்கள் வாழ்க்கையின் பாடம்.
கர்ணனின் நட்பைக் கடவுளுடன் கொண்ட நட்பாகக் கருதுபவன் துரியோதனன். கர்ணனுடைய ஒழுக்கத்தின் மீது அவனுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. கர்ணனே வியப்படையும் அளவுக்கு அவன் நடந்து கொண்டான. அதனால் அல்லவோ, அந்தப்புரத்தில் தன் மனைவியுடன் மாற்றான் ஒருவனை சொக்கட்டான் ஆட அனுமதித்தான்.
அந்த ஒரு சம்பவம் நம்பிக்கையின் உச்சி.
ஒரு கணம் கூட யோசிக்காமல், துரியோதனன் தனது மனைவியையும், தனது நண்பனையும் ஒரே அளவிலான மரியாதையுடன் பார்த்தான். அந்த நம்பிக்கைதான் கர்ணனின் இதயத்தில் “இந்த மனிதனுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்” எனும் உணர்வை விதைத்தது.
அதனால் தான், துரியோதனன் தவறான பாதையில் சென்றாலும், கர்ணன் அவனை விட்டு பிரியவில்லை. அவன் நம்பிக்கையைக் காப்பாற்றுவது தான் தனது கடமை என்று எண்ணினான்.
என் சிந்தனை… என் அனுபவம்
அந்தக் கதையை நான் சிறுவயதில் படித்தபோது, என் ஆழ் மனதில் ஓர் எண்ணம் விழுந்தது..
என் அன்பின்மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ளக் கூடாது…
என்னை நேசிப்பவர்களை முழு நம்பிக்கையோடு மதிக்க வேண்டும். நானும் அந்த நம்பிக்கையின் சின்னமாக இருக்க வேண்டும்.. யார் நம்பிக்கையையும் உடைக்ககூடாது”… அதை நான் இன்று வரை காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்….
ஆனால்…இந்த காலத்தில்,
ஒரு சிறு தவறே பெரிதாகி நம்பிக்கையை உடைத்து விடுகிறது. காரணம் நம்பிக்கை வைத்தால் அதுவே அவர்களுக்கு துரோகம் செய்ய அனுகூலமாக போய்விடுகிறது….
சந்தேகம் பாசத்தை விழுங்கி விடுகிறது.
ஒரு காலத்தில் மனிதன் உறவுகளுக்காக வாழ்ந்தான், இப்போது உறவுகள் அவனைப் பரிசோதிக்கின்றன.
அந்த நம்பிக்கையும் உண்மையும் இன்றைய உலகில் ஒரு கதையாக மட்டுமே மாறிவிட்டது.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.