பகுஜன் சமாஜ் தலைவராகிறார் டைரக்டர் பா.இரஞ்சித்? திமுக பக்கம் மாரி செல்வராஜ்? சூடு பிடிக்கும் சினிமா அரசியல்!
பகுஜன் சமாஜ் தலைவராகிறார் டைரக்டர் பா.இரஞ்சித்? திமுக பக்கம் மாரி செல்வராஜ்? சூடு பிடிக்கும் சினிமா அரசியல்! ‘அட்டக்கத்தி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அதன் பின் கார்த்தியை ஹீரோவாக வைத்து ‘மெட்ராஸ்’ என்ற படத்தின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனால் ரஜினியை வைத்து ‘கபாலி’, ‘காலா’ என இரு படங்களை டைரக்ட் பண்ணியதன் மூலம் இந்திய சினிமாவின் மெகா டைரக்டர்களையும் தயாரிப்பாளர்களையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதன் பிறகு தான் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தான் டைரக்ட் பண்ணிய நான்கு படங்களில் மட்டுமல்ல, தனது கம்பெனி தயாரிக்கும் படங்களிலும் தலித் மக்களின் வாழ்வியலைப் பேசும் படங்களையே தயாரித்தார். அல்லது மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த படங்களை, தனது நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரில் வாங்கி ரிலீஸ் பண்ணினார்.
இப்போது ஹீரோ விக்ரமின் அசாத்திய நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணியிருக்கிறார். கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், குறிப்பாக தலித்துகள் ரத்தம் சிந்திய கதை தான் இந்த ‘தங்கலான்’.
சினிமா தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் நிறுத்திவிடாமல், ‘நீலம் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார் பா.இரஞ்சித். இந்த அமைப்பின் சார்பில் சென்னை எழும்பூரில் நூலகம் ஒன்றை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை வைத்து சில மாதங்களுக்கு முன்பு திறந்தார் இரஞ்சித்.
தலித் இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டாலும், எல்லோருக்குமே பயனுள்ளதாக இந்த நூலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நூலகத்திற்கு வரும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் ‘பி.கே.ரோஸி’ திரைப்பட விழாவையும் இந்த ஆண்டு ஏப்ரல் 14 முதல் நடத்த ஆரம்பித்துள்ளார் பா.இரஞ்சித்.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாக்களில் வெளியான தலித் சினிமாக்கள் மட்டுமின்றி, உலகளவில் வெளியான ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலையும் வலியையும் பேசும் சினிமாக்களை இந்த பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் திரையிட்டது நீலம் பண்பாட்டு மையம். மேலும் ‘கேஸ்ட்லெஸ் கலெக்ஷன்’ , மார்கழியில் மக்கள் இசை’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி தலித் இசைக் கலைஞர்கள், பாடகர்களை பெருமளவில் ஊக்கப்படுத்தி வருகிறார் பா.இரஞ்சித்.
நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் ரஞ்சித் நடத்தும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தலித் சமூக இளைஞர்களும் யுவதிகளும் பெருமளவில் கூடி, இரஞ்சித்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர். பா.இரஞ்சித் பெயரை மேடையில் உச்சரிக்கும் போதெல்லாம் உற்சாகம் பீறிட குரல் எழுப்புகின்றனர்.
பொதுவாகவே தான் பேசும் மேடைகளிலெல்லாம் புரட்சி பாரம் கட்சியை நிறுவிய மறைந்த பூவை மூர்த்தியின் பெயரை நன்றியுடன் நினைவு கூர்வது ரஞ்சித்தின் வழக்கம். அந்த பூவை மூர்த்தியின் சிஷ்யராக இருந்தவர் தான் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இந்தப் படுகொலையால் திமுக மீது சற்றே அதிருப்தியில் இருக்கிறார் திமுகவின் அபிமானியான டைரக்டர் பா.இரஞ்சித்.
இந்த அதிருப்தியை இரு தினங்களுக்கு முன்பு [ ஜூலை.18 ] சென்னையில் ஒரே நாளில் நடந்த இரு நிகழ்ச்சிகளில் நேரடியாக வெளிப்படுத்தினார் இரஞ்சித். ‘கேஸ்ட்லெஸ் கலெக்ஷன்’ மூலம் வெளிப்பட்ட தலித் பாடகர் அறிவு தயாரித்திருக்கும் தனி இசை ஆல்பம் ‘வ்ள்ளியம்மா பேராண்டி’ . ரிட்டயர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ‘சமூக சமத்துவ படை’ கட்சியின் தலைவருமான சிவகாமியும் டைரக்டர் இரஞ்சித்தும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அறிவு தயாரித்த இசை ஆல்பத்தை வெளியிட்டனர்.
இதில் பேசிய அனைவருமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின் தலித் சமூக தலைவர்களும் இளைஞர்களும் ஒருவித அச்சத்துடன் வாழ்வதாக வேதனையுடன் பேசினார்கள். பா.இரஞ்சித் பேசும் போது கூட, “நான் இதுவரை திமுகவிற்குத் தான் ஓட்டுப் போட்டேன். ஆனால் திமுக ஆட்சியில் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை. அதனால் இனிமேல் திமுக ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலை செய்ய வேண்டியிருக்கும்” என பேசி அதிர வைத்தார்.
அதே நாள் மாலை, அதே இடத்தில் டைரக்டர் மாரி செல்வராஜ் தயாரித்து [ டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஃபைனான்ஸ் சப்போர்ட் ] டைரக்ட் பண்ணியிருக்கும் ‘வாழை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் விழாவும் நடந்தது. ‘வாழை’ படத்தினை தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் ‘ரெட் ஜெயண்ட்’ தான் ரிலீஸ் பண்ணுகிறது. இந்த விழாவில் ரெட்ஜெய்ண்ட் சார்பில் செண்பக மூர்த்தி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய இரஞ்சித், டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் பெயரைச் சொன்னார். ஆனால் ரெட்ஜெயண்ட் பெயரை கவனமாக தவிர்த்துவிட்டார். ஆனால் மாரி செல்வராஜோ ரெட்ஜெயண்ட் பெயரையும் உதயநிதி, செண்பகமூர்த்தி ஆகியோரின் பெயர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இப்படியான பா.இரஞ்சித்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறது திமுக மேலிடம். நாமும் இரஞ்சித்தின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசிய போது, “எங்க சமூகத் தலைவர்களான கிருஷ்ணசாமியும் ஜான்பாண்டியனும் முற்றிலும் செயல் இழந்துவிட்டனர். தேர்தல் நேரத்துக்காக மட்டுமே கட்சியை நடத்துகின்றனர். அதே போல் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவும் திமுக ஆதரவில் உறுதியாக இருக்கிறார்.
இப்படிப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக அண்ணன் இரஞ்சித்தை நியமித்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவாக களம் இறங்குவோம். எங்களின் உரிமைக்காக உரத்து குரல் கொடுப்பார் இரஞ்சித். இதற்கான முயற்சிகளில் அக்கா சிவகாமி ஐ.ஏ.எஸ்.சும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நல்லதே நடக்கும்” என்றார்கள் நம்பிக்கையுடன்.
-கரிகாலன்