சமையல் ஆஸ்கார் நாயகன் செஃப் விஜயகுமார் – ஹோட்டல் துறை என்றொரு உலகம் – 19
இந்தியாவின் பெருமை, தமிழ் சாப்பாட்டை உலகளவில் உயர்த்திய உழைப்பாளர்.
ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் துறையில், படிப்பு, ஆர்வம், அனுபவம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பார்வையும் அதற்கான உழைப்பும் இருந்தால் பலவாறு சாதிக்கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
சினிமாவில் ஆஸ்காருக்கு ஒரு படம் அனுப்பினாலே பெரிய விஷயம். அதேபோலத்தான், ஜேம்ஸ்பியர்ட் விருது என்ற ஒரு அமெரிக்க விருதுக்கு ஒரு ரெஸ்ட்டாரண்ட் அல்லது செஃப் விண்ணப்பிக்கவே பல விதிமுறைகள் உள்ளன. அந்த ரெஸ்ட்டாரண்ட் மற்றும் செஃப் குறித்து பத்திரிக்கைகளில் ஏற்கனவே வந்திருக்க வேண்டும் என்பது போன்ற பல விதிமுறைகள் இதனுள் அடங்கும்.
ஜேம்ஸ்பியர்ட் விருதுக்கு விண்ணப்பித்தவர் என்றே விளம்பரம் செய்யலாம். அமெரிக்காவில் இது அப்படிப்பட்ட சிறந்த விருது ஆகும்.
இப்படிப்பட்ட மிகப்பெரிய விருதை ஜுன் 2025ல் நம் தமிழ்நாட்டைச் சார்ந்த செஃப் விஜயகுமார் வென்றிருக்கிறார்.

திண்டுக்கல், நத்தம் பகுதியைச் சார்ந்த விஜயகுமார், திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு உணவக மேலாண்மைக் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர். எனக்கு கல்லூரியில் 2 ஆண்டுகள் இளவல் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன்.
தம்பி, விஜயகுமார், நமது தமிழ்நாட்டு உணவகத்தை செம்ம (அமெரிக்காவில் இதனை செம்மா என உச்சரிக்கின்றனர்) என்ற பெயரில், அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் மிகவும் பிரபலமடையச் செய்துள்ளார். ஆம் நாம் செம்மயா இருக்குன்னு சொல்லுவோம் பாருங்க; அந்த செம்ம தாங்க இந்த பெயர்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ரெஸ்டாரண்டுகளின் தரத்தையும் செஃப்களின் தரத்தையும் பரிசோதித்து நட்சத்திரம் வழங்குவது மிசலின் ஸ்டார் எனும் அங்கீகாரம் ஆகும். இந்த அங்கீகாரம் கிடைப்பது மிகவும் அரிது. மேலும், இடையில் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கும்போது நட்சத்திரத்தை திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளது. மிசலின்ஸ்டார் அங்கீகாரத்தை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து பெறும் ஒரு சிறந்த செஃப் விஜயகுமார் ஆவார்.
நியூயார்க் டைம்ஸ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும், நியூயார்க் மாகாணத்தின் சிறந்த 100 உணவகங்கள் என்ற பட்டியலில் முதல் இடத்தை செம்மாபெற்றிருக்கிறது. அத்தனைக்கும் காரணம் விஜயகுமாரின் உழைப்புதான். கடந்த ஆண்டும் முதல் 10 இடத்தில் இருந்துள்ளது, இவ்வாண்டு முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய விஷயம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடுவது அதிகம். அதேபோல, உணவகம் நடத்த பல கட்டுப்பாடுகளும் உள்ளது. பல்வேறு வகையான அங்கீகாரங்கள் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்திற்குத் தகுந்தாற்போல, மக்கள் உணவகங்களைப் போற்றுவர்.
உணவகங்களையும் செஃப்களையும் கொண்டாடும் நாடுகளாக மேலை நாடுகள் உள்ளன. அதனால்தான் கேட்டரிங் படித்த பலர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேலை நாடுகளுக்கு செல்கின்றனர். சமீபகாலத்தில்தான் நாமும் உணவையும், உணவகங்களையும், செஃப்களையும் மதிக்கத் துவங்கியுள்ளோம்.
செஃப் விஜயகுமார், திருச்சி அரசு உணவுக்கல்லூரியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு படித்துவிட்டு தாஜ்ஹோட்டலில் பணிபுரிந்து பின்னர் கப்பலில் பணிபுரிந்து, அமெரிக்கா சென்றார். அங்கே நன்முறையில் உணவகத்தில் பணிபுரிந்து மிசலின்ஸ்டார் வாங்கித் தந்துள்ளார்.
அதன் பின்னர் செம்மாவின் செஃப் பொறுப்பையும் பங்குதாரர் பொறுப்பையும் வகிக்கும் இவர், மிசலின் ஸ்டார் அங்கீகாரத்துக்குச் சொந்தக்காரர். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட முதல் 100 உணவகப் பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார். மேலும், உலகிலேயே உணவகங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படும் ஜேம்ஸ்பியர்ட் விருதைப் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
உணவில் ஏழை, பணக்காரர் உணவு என்றில்லை என தனது உரையில்குறிப்பிட்டுள்ளார் செஃப் விஜயகுமார். ஆம். பழைய காலத்தில் இது ஏழையின் உணவு என்ற பேச்சு இருந்திருக்கிறது. கருப்பாக இருக்கும் தான் இந்த இடத்திற்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார். இவரின் உழைப்புக்கும் உணவுக்கும் நிறம் தடையில்லைதான். ஊர் தடையில்லை. உயரம் தடையில்லை. சுவையாக மனமார உணவளிக்கிறார். அதனால் உயர்ந்திருக்கிறார்.
நத்தத்தில் இருந்து சென்ற பிள்ளை, நத்தையை அருமையாக சமைத்து அமெரிக்காவில் அனைவருக்கும் பிடிக்கும் உணவாக மாற்றியுள்ளது. நத்தை பிரட்டல் இவரது கைவண்ணத்தில் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இதனை தனது ஊரில் வீட்டில் கற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.
தனது பாட்டி, மற்றும் அம்மாவின் சமையலையும், தான் படித்த படிப்பையும், அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்பையும் மனதில் நிறுத்தி, உணவினை தேர்ந்தெடுத்து, அருமையாக சமைத்து வழங்கிக் கொண்டுள்ளார்.
பெருமைமிகு இந்த ஜேம்ஸ்பியர்ட் விருதை பெற்றிருக்கும் செஃப் விஜயகுமாரை தமிழ்நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை விருது வாங்கும்பொழுதும், இப்பொழுது மிக உயரிய விருதான ஜேம்ஸ்பியர்ட் விருது வாங்கும்பொழுதும், இவர் நம் பாரம்பரிய வேட்டி அணிந்துதான் விருதினைப் பெற்றுள்ளார். இது நமது பாரம்பரியத்திற்கு பெருமையளிக்கும் செயல்.
நம்ம ஊருக்கு வரும்பொழுது, அவர் படித்த திருச்சி துவாக்குடி அரசு உணவுக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக நாங்கள் அவரைக் கொண்டாட காத்திருக்கிறோம்.
உழைப்பால் உயர்ந்த உன்னதம், செஃப் விஜயகுமாரை ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடரின் எழுத்தாளர் கபிலன் ஆகிய நான், அங்குசம் ஆசிரியர் மற்றும் குழுவினர் இணைந்து வாழ்த்தி மகிழ்கிறோம்.
தொடரும்
கபிலன்