ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆசிரியப் பணி மற்றும் பல அரசுப் பணிகள் !
ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –23
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்களும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களாக இருக்க வேண்டும். எனவே, இந்த படிப்பிற்கு பிறகு ஆசிரியப்பணியும் காத்திருக்கிறது. பல ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் ஆசிரியப்பணி புரிய காலியிடம் உள்ளது.
நான் முதலில் ஒருவருட படிப்பான Food Production படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அது வேலைக்குச் செல்ல போதுமானதாகும். ஆனால், எனக்கு ஆசிரியப் பணிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், மூன்று ஆண்டுகள் படிப்பினை தேர்ந்தெடுத்து படித்தேன். இன்றைய காலத்தில், சில கல்லூரிகளில், ஆசிரியராக பணிபுரிய வெறும் பட்டப்படிப்பு படித்தாலே போதும் என பணிக்கு சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், கல்லூரிகளில் பணிபுரிய முதுகலை படிப்பு அவசியம். M.Sc, MTM, MBA போன்ற ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த மேற்படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
பல தனியார் கல்லூரிகளில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான ஆசிரியப் பணிகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளிலும் நாடெங்கும் பல கல்லூரிகளில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் வருகின்றன. அரசு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் ஆசிரியப் பணியில் சேருவதற்கு முதுகலை படிப்பு அவசியம். அதோடு மட்டுமல்லாமல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டிற்கு என தனியாக ஒரு ஆசிரியர் தேர்வு உள்ளது அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தியா முழுதும் பல அரசு கல்லூரிகள் உள்ளன, அவற்றில் படிக்கவும் ஆசிரிய பணியில் சேரவும் விருப்பமுள்ளவர்களுக்காக அவற்றின் நகரங்களின் பட்டியலை கீழே தந்துள்ளோம். இவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்லூரிகள் ஆகும்.
ஆசிரியப்பணிக்கான அறிவிப்புகள் அவ்வப்போது தொடர்ந்து வரும். ஆசிரியப் பதவிக்குத் தகுந்தாற்போல, படிப்பு மற்றும் அனுபவ தகுதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் nchmct.gov.in வெளியிடுவர். அரசு ஆசிரியப் பணிக்கு கேட்டரிங் துறையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வலைதளத்தை மாதமொருமுறை பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்தியா முழுவதும் வாய்ப்புகள் அடிக்கடி வரும்.
தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாமல், பல்கலைக்கழங்களிலும் ஆசிரியப் பணிகள் உள்ளன. அவற்றில் பணிபுரிய Ph.Dபடித்திருந்தால் முன்னுரிமை தரப்படும்.
ஆசிரியப்பணி மட்டுமல்லாமல் பல அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உணவகம், விருந்தினர் மாளிகை போன்ற நிர்வாகப் பணிக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.
ஏன், ஐடிநிறுவனங்களின் உணவகங்களை நிர்வகிக்கும் பணி, அந்த இடங்களை பராமரிக்கும் ஹவுஸ்கீப்பிங் பணி என பல வாய்ப்புகள் உள்ளன. எங்கெல்லாம் உணவு மற்றும் தங்குமிடம் உள்ளனவோ, அங்கெல்லாம் அரசுப் பணி, தனியார் பணி மற்றும் பல்வேறு நிர்வாகப் பணிகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்த பணிகளுக்கான தேடுதல்கள் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிமையாக கிடைக்கும். இப்படி பல வேலைவாய்ப்புகளைத் தரும் படிப்பாக இந்தத் துறை இருக்கிறது. இனி வரும் தொடர்களில், இந்தப்படிப்பைப் படித்தால் என்னென்ன தொழில்கள் துவங்கலாம் என பார்ப்போம். தொழில் வாய்ப்புகள் தெரிந்து முதலாளி ஆவதைப் பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
— கபிலன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.