அங்குசம் பார்வையில் ‘ஹவுஸ் மேட்ஸ்’
தயாரிப்பு ; சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ & ப்ளே ஸ்மித் ஸ்டுடியோஸ், செளத் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன், எஸ்.விஜய் பிரகாஷ், இணைத் தயாரிப்பு : கலையரசு, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : எஸ்.பி.சக்திவேல், டைரக்ஷன் : ராஜவேல். ஆர்ட்டிஸ்ட் : தர்ஷன், காளிவெங்கட், அர்ஷா பைஜு, வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக். ஒளிப்பதிவு : எம்.எஸ்.சத்தீஷ், இசை : ராஜேஷ் முருகேசன், எடிட்டிங் : ஏ.நிஷார், ஆர்ட் டைரக்டர் : என்.கே.ராகுல், காஸ்ட்யூம் : நந்தினி நெடுமாறன், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & திரு
தனது வருங்கால மனைவி அர்ஷா பைஜுவுக்காக சென்னை வேளச்சேரியில் பழைய பிளாட் ஒன்றில் வீடு வாங்குகிறார் தர்ஷன். பத்திரம்பதியும் போது கரண்ட் போகிறது, வீட்டுச் சாவி கீழே விழுகிறது. இப்படியெல்லாம் அபசகுணங்கள் நடக்கும் போதே நமக்கு ஓரளவு தெரிந்துவிட்டது, ரைட்டு அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கப் போகுது, பேய் பீதி கிளம்பப் போகுதுன்னு. வழக்கம்போல ஊதப்போறாய்ங்கன்னு.
நாம நினைச்ச மாதிரியே தர்ஷனும் அர்ஷாவும் கல்யாணம் பண்ணிய பிறகு அந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறுகிறார்கள். தர்ஷன் வேலைக்குப் போன பிறகு, அர்ஷா மட்டும் இருக்கும் போது, பீரோவுக்குப் பின்னால் ஒரு கிறுக்கல் ஓவியத்தைப் பார்த்து திடுக்கிடுகிறார். வாஷ் பேஸின் பைப் தானாக திறந்து தண்ணீர் கொட்டுகிறது, நிற்கிறது. சுவிட்ச் போடாமலேயே டிவி ஓடுகிறது. சாமியார் ஒருத்தன் வந்து தண்ணி தெளித்து பூஜை பண்ணியும் திகில் ஓய்ந்தபாடில்லை.
வழக்கமான பேய்ப்படம்னு நாம நினைச்சுக்கிட்டிருக்கும் போது, இடைவேளை விடும் நேரம் காளிவெங்கட் –வினோதினி வைத்தியநாதன் தம்பதிகளின் மகன் மாஸ்டர் ஹென்ரிக்கும் இதே திகிலை பார்க்கிறான் என லீடு கொடுத்ததும் கதை சூடு பிடிக்கிறது.
அதன் பின் நடப்பதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் புரிய சிரமப்படும், அதே நேரத்தில் புதிய கான்செப்டுடன் திரைக்கதை களைகட்டுகிறது. டைம் டிராவல் மாதிரி, இதில் ‘இயர்’ [ ஆண்டு ] டிராவல் என்ற கண்டெண்டை கச்சிதமாக பிடித்துள்ளார் டைரக்டர் ராஜவேல். அதே நேரம் அப்துல் லீ சொல்லும் ‘டெசெர்ட்’, ஃபார்வேர்டு, பேக்வேர்டு இதெல்லாம் புரியத்தான் நமக்கு சிரமமாகிவிட்டது. இருந்தாலும் ராஜவேலின் ‘நியூ ஐடியா’வுக்கு சபாஷ் போடலாம்.
இந்த ஸ்கிரிப்ட்டுக்கு தர்ஷன் –அர்ஷா பைஜு, காளிவெங்கட், வினோதினி வைத்தியநாதன், அந்தச் சிறுவன் என ஐந்தே கேரக்டர்கள், ஒரே ஒரு வீடு இதை வைத்துக் கொண்டு நன்றாகவே விளையாடியிருக்கார் டைரக்டர்.
திகில் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்ததும் 2012-ல் காளிவெங்கட், வினோதினி, 2022— தர்ஷன் –அர்ஷா பைஜு என திரைக்கதையின் போக்கு பக்கா எண்டெர்டெய்ன்மெண்ட். தர்ஷனிடம் நன்றாகவே வேலை வாங்கியுள்ளார் டைரக்டர். தமிழ் சினிமாவுக்கு புதுவரவான அர்ஷா பைஜுவும் நடிப்பில் ஸ்கோர் பண்ணியுள்ளார். உடம்புவாகு தான் கொஞ்சம் ஒடுசலா இருக்கு. இந்த ஹவுஸ் மேட்ஸின் திக் மேட்ஸ்னா, அது காளிவெங்கட்டும் வினோதினி வைத்தியநாதனும் அந்த சின்னப்பையன் ஹென்ரிக்கும் தான்.
முக்கால்வாசி சீன்கள் ஒரே வீட்டுக்குள் நடந்தாலும் அதுதெரியாத அளவுக்கு தனது கேமரா ஆங்கிள்களால் ஆச்சர்யப்படுத்துகிறார் சத்தீஷ். அனுபவசாலி போல பின்னணி இசையால் படத்திற்கு சப்போர்ட்டாக இருக்கிறார் ராஜேஷ் முருகேசன்.
எல்லாம் சரி டைரக்டரே, வீட்டுக்குள் பதினைந்து அடி உயர சுவற்றில் ஐந்து பேரும் மாறி மாறி எழுதுவது இதையெல்லாம் கரெக்ட் பண்ணியிருக்க வேண்டாமா?
— மதுரை மாறன்