சீக்ரெட்ஸை மறைத்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ டீம்!
எஸ்.விஜயபிரகாஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகி, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட்.01—ஆம் தேதி ரிலீசாகிறது. படத்தில் தர்ஷன், அர்ஷா பைஜு, காளிவெங்கட், வினோதினி வைத்தியநாதன், அப்துல் லீ, உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : எஸ்.பி.சக்திவேல், ஒளிப்பதிவு : சதீஷ், இசை : ராஜேஷ் குமரேசன், பாடல்கள் : மோகன் ராஜன், எடிட்டிங் : நிஷார் ஷெரீஃப், ஆர்ட் டைரக்டர் : ராகுல், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.
இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக இருந்து இப்படத்தின் மூலம் டைரக்டராகியுள்ளார் ராஜவேல். படத்தின் தயாரிப்பாளர் விஜயபிராக்ஷும் இவரும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். இன்னும் மூன்று நாட்களில் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ரிலீசாவதையொட்டி, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் ஜூலை.26-ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் அஜய் ஞானமுத்து, ‘அயலான்’ ரவிக்குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

படத்தின் எடிட்டர், கேமராமேன், மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் ஆகிய அனைவருமே சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தனர். ஆனால் யாருமே படத்தைப் பற்றிய சிறு தகவலைக் கூட சொல்லவில்லை.
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் எஸ்.பி.சக்திவேல் பேசும் போது ,
“இப்படத்தின் திரைக்கதை வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகும். படத்தின் டிரெய்லர் தான் திகில் பட ஜானரில் இருக்கு. ஆனா படத்தில் வேறு சங்கதிகள் இருக்கு” என சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் இணைத் தயாரிப்பாளர் கலையரசன் பேசும் போது, “புதியவர்கள், புதிய சிந்தனைகளை வரவேற்பதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கிறோம். ‘கனா’வில் ஆரம்பித்து இப்போது ஹவுஸ் மேட்ஸ் வரை எங்களுக்கு 11—ஆவது படம் இது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் ராஜவேல் மிகச்சிறப்பான இடத்துக்கு வருவார்” என்றார்.
“சிவகார்த்திகேயன் உள்ளே வந்த பிறகு தான் படத்திற்கு பெரிய வெளிச்சம் கிடைத்தது. இந்த டீமுக்கு நம்பிக்கை பிறந்தது. படத்தில் இருக்கும் முக்கிய சங்கதிகளை இப்போது சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்” என டைரக்டர்கள் அஜய் ஞானமுத்து, ரவிக்குமார், படத்தில் நடித்த ஹீரோ தர்ஷன், ஹீரோயின் அர்ஷா பைஜு, வினோதினி, காளிவெங்கட், அப்துல் லீ, ஆகியோர் ஒரே டோனில் பேசினார்கள்.
தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ்,
“எனது நண்பனுக்காக இப்படத்தைத் தயாரித்தேன். எஸ்.கே.சார் எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். அதனால் தான் இந்த மேடை வரையும் ரிலீஸ் வரையும் வந்துள்ளோம்”.
இயக்குனர் ராஜேவேல்,
“முதல் படம் எடுப்பது கஷ்டம், அதை ரிலீஸ் பண்ணுவது ரொம்பக் கஷ்டம். எங்கள் கஷ்டங்களையெல்லாம் களைந்தவர் அண்ணன் சிவகார்த்திகேயன், படத்துல காம்ப்ளிகேட்டான விஷயம் ஒண்ணு இருக்கு. அதை இப்போதே சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இருக்காது. மீடியா நண்பர்களுக்கு புதுவித அனுபவத்தை இப்படம் கொடுக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்”.
— மதுரை மாறன்