அந்த வலியையே நீ சொல்லக்கூடாது என்பது எத்தனை பெரிய வன்முறை ?
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் சாதிப்பிரச்சினைய வச்சு படம் எடுப்பீங்க?” என்ற கேள்வி மாரி செல்வராஜை இன்னும் துரத்திக் கொண்டிருக்கிறது. காளமாடனுக்கு முன்னும் பின்னும்!
மாரி செல்வராஜ் காளமாடனுக்கு முன் நான்கு படங்கள் எடுத்திருக்கிறார். ஒரு படம் சராசரியாக இரண்டரை மணி நேரம் என்று வைத்துக் கொள்ளலாம். மொத்தமாக பத்து மணி நேரம் தன் கதையை சொல்லியிருக்கிறார். ஏ.சி திரையரங்கில் சாய்விருக்கையில் அமர்ந்து கொண்டு, கையில் பாப்கார்ன், பப்ஸ், கோக்குடன், சௌகரியமாக பத்து மணி நேரம் இந்த கதையை கேட்கவே இவர்களுக்கு வலிக்கிறதென்றால், வாழ்நாள் முழுவதும் சாதி, பகை, வன்முறைக்கு மத்தியில் வாழ்பவனுக்கு எத்தனை வலிக்கும்? படத்தை விமர்சிப்பது வேறு, ஆனால் அந்த வலியையே நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எத்தனை பெரிய வன்முறை?
மாரி செல்வராஜ் படங்களின் வெற்றி, தோல்வி, குறைகள், நிறைகள் இவற்றைத் தாண்டி அவை சினிமாவிற்கும் சக படைப்பாளிகளுக்கும் சொல்லும் முக்கிய சேதி ஒன்றிருக்கிறது. மாரி செல்வராஜ் தன் கதைகளை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார், கற்பனையில் இருந்தோ சினிமாக்களில் இருந்தோ அல்ல. அப்படங்களில் ரத்தமும் சதையுமாக நிறைந்திருக்கும் வாழ்க்கையே அவற்றின் ஆன்மாக்களாக திகழ்கின்றன. வாழ்விலிருந்து உருவாகும் கலைக்கு எப்போதும் மதிப்பதிகம். அவர் தன் கதைகளை மாற்ற வேண்டுமெனில், பதட்டம் நிறைந்த அந்த வாழ்க்கையல்லவா முதலில் மாற வேண்டும்?

இன்னொரு கயமையான வாதம், ‘இதெல்லாம் எப்பவோ நடந்தது, ஏன் இப்ப மறுபடியும் காட்டுறீங்க?’. இப்போது அப்படியெல்லாம் நடக்கவில்லை என்பதே பச்சைப் பொய். போகட்டும். கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்பு நடந்த இரண்டாம் உலகப்போர் பற்றிய படங்கள் இன்று வரை பல மொழிகளில் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றின் நோக்கம் என்ன? மூன்றாம் உலகப் போரை தூண்டுவதா? தன் தவறுகளில் இருந்து தான் மனித இனம் கற்றுக் கரை சேரும். அதை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம், சக மனிதனுக்கு எதிரான வன்முறைகளை விடுத்து, அவன் மேல் கருணை கொள்ளக் கோருதல் ஒன்றே அப்படைப்புகளின் நோக்கம். மாரி செல்வராஜ், ரஞ்சித் படங்களையும் அவ்வாறே அணுக வேண்டும்.
உச்சகட்ட கயமை, இவர்களின் படங்களை சாதிப்படங்கள் என்று முத்திரை குத்துவது. அடிப்பவனை அலங்கரித்து வரும் படங்களையும், அடி வாங்குபவன் தன் வலியினை சொல்லி சமத்துவத்தைக் கோரும் படங்களையும் ஒரே கோட்டில் நிறுத்துவது எத்தனை அயோக்கியத்தனம்? சமீபத்தில் வெளி வந்த நிஜமான சாதிப்படங்களில் இருந்த கொம்பு சீவி விடும் சுயசாதி பெருமையும் மற்ற சாதியினர் மீதான வெறுப்பும் மாரி செல்வராஜ், ரஞ்சித் படங்களில் எங்கேனும் இடம் பெற்றிருக்கிறதா?
காளமாடனில் கிட்டான், சாதி, பகை, வன்முறை என பலவும் துரத்த ஓடிக்கொண்டேயிருப்பான். மாரி செல்வராஜ், ரஞ்சித் படங்களுக்கு வரும் வன்மங்கள், கிண்டல்களுக்கும் கிட்டானைத் துரத்திய வன்முறைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. “We will not strike a blow, but we will receive them. And through our pain we will make them see their injustice, and it will hurt – as all fighting hurts” என்றார் காந்தி. இது திரைப்படங்களுக்கும் பொருந்தும்!
-ஜெயச்சந்திரன் ஹாஸ்மி








Comments are closed, but trackbacks and pingbacks are open.