நானும் டெல்லியில்தான் இருக்கிறேன், இந்தி படிக்காததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை ! எம்.பி கனிமொழி
நானும் டெல்லியில்தான் இருக்கிறேன், இந்தி படிக்காததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை: மகளிர் தின விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!
திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி சார்பில் மகளிர் தின விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், கனிமொழி கருணாநிதி சிறப்புரையாற்றினார். முன்னதாக, பெண்கள் மட்டும் பங்கேற்று கலை நிகழ்ச்சியை நடத்தினர்.
விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: சில நபர்கள் சொல்வார்கள், நீ பெண். உன்னால் படிக்க முடியாது என்று சொன்னால், அதை நாம் நம்புவோம். பெண்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டார்கள் என்றால் சமூகம் நம்மை பார்த்துக் கேட்கக்கூடிய கேள்வி, நீ என்ன உடை உடுத்தி இருந்தாய் என்று? இது வழிவழியாக சொல்லப் பட்ட விஷயம். இதையும் எதிர்த்து கேள்வி கேட்க கூடிய கடமை நமக்கு இருக்கிறது. பெண்கள் முன்னேறத் திட்டங்கள் வகுத்துத் தந்து இருக்கக்கூடிய திராவிட இயக்கம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தற்போது, முதலமைச்சர் இரண்டு விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டுள்ளார். ஒன்று, நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை. மும்மொழி கொள்கையை நாம் மீது கொண்டு வந்து திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்காக தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர மாறுகிறது. இன்னொன்று தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டிற்கு எம்.பிக்களின் தொகுதி எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம் தீட்டப்படுகிறது.
கலைஞர் ஆட்சிக்காலத்தில், பெண்கள் பத்தாம் வகுப்பு வரை படித்தால் திருமண உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அது உண்மையில் கல்வி உதவி திட்டம். பெண் கல்வி அதிகரிக்க அதிகரிக்க, நம்முடைய மொழியை பாதுகாக்க இரண்டு மடங்காக வருவார்கள் என்பது முதலமைச்சருக்குத் தெரியும். இந்தி மொழி படித்தால் என்ன கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது. நானும் டெல்லியில்தான் இருக்கிறேன், இந்தி படிக்காததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் எனக்கு இல்லை.
லட்சக்கண நபர்கள் வட மாநிலத்திலிருந்து, ஆங்கிலம் தெரியாமல் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, தமிழ் தெரியாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அதனால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தமிழ் மொழியை சொல்லிக் கற்றுக்கொடுங்கள். அப்படிச்செய்தால், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தென் மாநிலங்களுக்கு வரும் போது, அந்த மாநிலங்களுக்கு ஏற்ப மொழியை சொல்லிக்கொடுங்கள். உங்களுக்கு நாங்கள் தேவைப்படும் போது எங்கள் மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.
திராவிட இயக்கம் மாணவர்களை படிக்க வைத்து, அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நம்முடைய மருத்துவர்கள் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால், நங்கள் இந்தி கற்றுக்கொண்டு ஒன்றுமே பயம் கிடையாது. வளர்ந்த நாடுகளிலும், மிகப்பெரிய சாதனை செய்திருக்கக்கூடிய நாடுகளிலும் கூட மும்மொழி படித்து ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
சில அறிவாளிகள் சொல்கிறார்கள், சிங்கப்பூரில், பின்லாந்து போன்ற நாடுகளில் மும்மொழி சொல்லித் தருகிறார்கள் என்று? நிச்சியம் கிடையாது. அந்த நாடுகளில் எல்லாம் ஒரு மொழி, இல்லையென்றால் இரண்டு மொழிகள் தான் சொல்லித் தருகிறார்கள்.
குழந்தைகளுக்குப் படிக்க வேண்டிய பாடம் அதிகமா இருக்கிறது, எல்லா பிள்ளைகளுக்கும் அனைத்து பாடம் நன்றாக படிக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு குழந்தைக்கு இன்னொரு மொழி காத்துக்கொள்ள ஆர்வம் இருந்தால், ஆசை இருந்தால், தேவை இருந்தால் கற்றுக் கொள்ளட்டும். எதற்காக அந்த குழந்தைக்கு இன்னொரு சுமையை ஏற்ற வேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கல்லூரிக்கு போக வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளையும் கல்லூரிக்குச் சென்று படியுங்கள் என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார்.
நமக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் சிலநபர்கள், அவர்கள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் உள்ள பெண்கள், பள்ளிக்கூடத்துக்கு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் கூட இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை வழியாக உயர்கல்வியில் இன்னும் 30, 50 வருஷம் பிறகு, நிர்ணயம் செய்த இலக்கை, இன்று உயர்கல்வியில் தமிழ்நாடு தாண்டி இருக்கிறது. இந்தியாவில் வேலை செய்யக்கூடிய பெண்களுடைய சதவீதத்தில் 42% சதவிகிதம் தமிழ்நாட்டில் வேலை செய்யக்கூடிய பெண்களே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்விக்குப் போகக்கூடிய சதவிகிதம் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இத்தனை சாதனைகளையும் செய்து இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை திறக்க வேண்டும் என்று திட்டமிட்டு திறந்து காட்டி இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. தலைவர் கலைஞர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடிய ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் கல்லூரி என்பது கனவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சின்ன சின்ன ஊர்களில் கல்லூரிகளைத் திறந்ததுள்ளார் கலைஞர்.
புதுமைப் பெண் திட்டமாக இருக்கட்டும், தமிழ் புதல்வன் திட்டமாக இருக்கட்டும், அந்த திட்டத்தின் வழியாக சாதனையை செய்துகொண்டு கொண்டிருப்பது முதலமைச்சர்.
கல்லூரிக்கும், நிறுவனத்திற்கும் இருக்கக்கூடிய இடைவெளியை அரசு நிரப்ப வேண்டும் என்று கொண்டு வந்த திட்டம் தான் நான் முதல்வன் என்ற திட்டம். நான் முதல்வன் திட்டம் வேலை கிடைக்கும் நபர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் பல திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.
அதேபோல், ஒரு பெண் வீட்டிலிருந்து கூட யார்கிட்டயாவது போய் கையை நீட்டவும் பஸ்ஸுக்கு காசு கொடுங்க என்று கேட்கும் நிலை இருந்தது. விடியல் பயணத்தில், பேருந்து நடத்துநர் கூட, நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க முடியாது. ஏனென்றால், எந்தத் தடையும் பெண்ணுக்கு இருக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஆட்சி தந்தை பெரியார் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது திட்டங்களுக்கான ஆட்சி மட்டுமில்லை. நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சி, இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஒவ்வொரு நாளும் பாடுபடக்கூடிய நாம் என்ற பெருமையை மகளிரணி சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. நாம் உரிமைக்காகவும் போராடுவோம், நம்முடைய உரிமைக்காகப் போராடுவோம். அதே நேரத்தில் நம்முடைய மாநிலத்தின் உரிமைகளுக்கும் போராடுவோம், இந்த மாநிலத்தை பாதுகாப்போம், நம்முடைய முதலமைச்சர் பின்னால் அணி திரள்வோம் என்று பேசினார்.
இந்த விழாவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். என்விஎன் கனிமொழி சோமு, திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, திமுக மகளிர் அணி இணைச்செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் அஜிதா, திமுக மகளிர் அணி மாநில நிர்வாகிகள், திமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
— மணிபாரதி.