”அவனை நான் செருப்பால அடிப்பேன்” …. ’’சீமானாக” – மாறத்துடிக்கும் பழுத்த அரசியல்வாதி திருநாவுக்கரசர் !
”அவனை நான் செருப்பால அடிப்பேன்” …. ’’சீமானாக” – மாறத்துடிக்கும் பழுத்த அரசியல்வாதி திருநாவுக்கரசர் ! ”அவனை நான் செருப்பால அடிப்பேன்.” … ”நீ யாரு சர்டிபிகேட் கொடுக்கிறதுக்கு? வேலையைப் பாருய்யா. பிரஸ்னா என்ன வேனாலும் கேட்பியா? நிறுத்து பேச்ச நிறுத்து. உனக்கு பதில் சொல்லனும்னு அவசியம் எனக்கு கிடையாது. இஷ்டம்னா எடு, இல்லைனா போயிகிட்டே இரு. யாரு எந்த பேப்பரு? எந்த டி.வி? எந்த டி.வி.யா நீ? ஏ.பி.பி.யாவது ஒ.பி.பி.யாவது. போயிட்டே இரு வேலையை பார்த்துகிட்டு.” – செய்தியாளர்கள் சந்திப்பில் கோபம் கொப்பளிக்க பேசியது யாராக இருக்கும்? சீமான் அல்லது அண்ணாமலையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அட, அதுதான் இல்லை.
”சீமான் பேசுற மாதிரி கெட்ட வார்த்தையில பேசினால்தான் அடங்குவ போலிருக்கு. என்ன கேள்வி கேட்குற? யாரைப் பார்த்து கேட்குற?” என சீறியது வேறுயாறுமல்ல அமைதியான மனிதர், 50 வருட அரசியல் பாரம்பரியம் கொண்டவர் காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் திருவாய் மொழிந்தவைதான் முன் சொன்னவையெல்லாம்.அரை நூற்றாண்டு அரசியல் வாழ்வை தன்னகத்தே கொண்டிருக்கும் திரு ”நாவு” க்கரசரே, ”நாவை” அடக்கிப் பேசும் நிதானம் இழந்து கொந்தளிக்கும் அளவுக்கு அப்படி என்ன கேட்டுவிட்டார்கள் பத்திரிகையாளர்கள்?
முதல் கேள்வி, ”கண்டா வரச் சொல்லுங்கனு எங்க ஊர் எம்.பி.யை காணவில்லைனு போஸ்டர் அடிச்சி ஒட்டியிருக்காங்களே?” என்பது. இரண்டாவது கேள்வி, “வழக்கமாக பிரதமர் வந்து போனாலே, ஒரு பிரபலமான நபர் பாஜகவில் இணைவார் என்று சொல்கிறார்களே. அந்த வரிசையில் உங்களையும் சொல்கிறார்களே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்பது.
இந்த கேள்விகளுக்கு எதிராகத்தான் கொந்தளித்திருக்கிறார், திருநாவுக்கரசர். ”உன்மையை சொல்லலை. நீ பொய் சொல்ற. யார்கிட்டயோ காசு வாங்கிட்டு சொல்ற. யாருக்காகவோ அடிமையாகிட்டு சொல்ற. ஏயா, மூனு வருஷமா இல்லை. 5 வருஷமா வந்துட்டுருக்கேன். நீ பார்க்கலைன்னா நீ ஊர்ல இல்லைனு அர்த்தம். வேற ஆளு கேளு. சீமான் பேசுற மாதிரி கெட்ட வார்த்தையில பேசினால்தான் அடங்குவ போலிருக்கு. என்ன கேள்வி கேட்குற? யாரைப் பார்த்து கேட்குற?…”
”இனிமே சீமான் மாதிரி பேசனும்னு நானும் முடிவு பன்னிட்டேன். 50 வருட அரசியலில் இருக்கிற என்னை. உங்களுக்கு எல்லாம் என்ன வயது? என்ன 30 இருக்கும். 30 வருசம் முந்தி அரசியலில் இருக்கேன். யார்கிட்ட என்ன கேட்கனும்னு ஒரு தரம் வேண்டும்.” என்றெல்லாம் வெடித்தே விட்டார்.
எம்.பி.யை காணவில்லை என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் 39 தொகுதிகளிலும்தான் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மதுரையிலும் ஒட்டப்பட்டிருக்கிறது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனக்கு எதிராக ஒட்டப்பட்ட அந்த போஸ்டருக்கு முன்பாகவே புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு கடந்து செல்கிறார். ஆனால், 50 வருட அரசியல் வாழ்வை கொண்டவர் என்று அவரே சொல்லிக் கொள்ளும் அண்ணன் திருநாவுக்கரசரோ பொறுமையிழந்து வெகுண்டு எழுகிறார்.
மிக சமீபத்தில் காங்கிரசு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் ஐக்கியமான நிலையில் தான் அந்தக் கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக, திருச்சியில் எம்.பி.யாக வென்றதோடு சரி நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் திரும்பி வரவில்லை என்ற வருத்தம் கூட்டணி கட்சிகளிடையே இருப்பதாகவும்; புதுக்கோட்டையிலேயே இருந்து கொண்டும் தன்னை சுற்றி தனக்கு நெருக்கமான 5 நபர்களை வைத்துக்கொண்டுதான் அரசியல் செய்கிறார் என்று சொந்தக் கட்சியினரே அதிருப்தியில் இருப்பதாகவும்; மீண்டும் இவரையே வேட்பாளராக நிறுத்தினால் ஜெயிப்பது கடினம் என்று இவருக்கு எதிராக சொந்தக்கட்சியினரே அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில்தான் அந்த இரண்டாவது கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
திருச்சியில் திமுக அல்லது மதிமுக போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கும், “உங்களுக்கு அப்படி யார் சொன்னது?” என்று முதலில் கடுப்பானவர்; அதன்பின்னர் ”திமுகவில் யாரும் கேட்கலாம். அதன் கூட்டணி கட்சிகளும் கோரலாம். இவங்களுக்கெல்லாம் இருக்கிற உரிமை சிட்டிங் எம்.பி.க்கு கிடையாதா? என்ற முறையிலும், 4 இலட்சம் 70 ஆயிரம் ஓட்டுல ஜெயிச்ச எனக்கு கிடையாதா? திருச்சி தொகுதி வேண்டும் என கேட்பதில் எங்களுக்கும் நியாயம் இருக்கிறது. சிட்டிங் எம்.பி. என்ற முறையில் இங்குதான் போட்டியிடுவேன் என்று சொல்வதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது.” என்பதாக விளக்கம் கொடுத்தார்.
சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் தனக்கு கட்சியில் மீண்டும் சீட் கேட்கும் உரிமை இருப்பதாக சொல்வதைப்போலவே, இவரையே மீண்டும் நிறுத்தினால் ஜெயிக்க வைப்பது கடினம் என்று கட்சி தொண்டர்கள் கருத்தை முன்வைப்பதற்கும் மாற்றாக மற்றொருவரை முன்னிறுத்துவதற்கும் உரிமை இருக்கிறதுதானே? திருச்சி தொகுதியில் மக்கள் மத்தியில் எம்.பி.திருநாவுக்கரசுக்கு எதிரான மனநிலை இருப்பதாகவும்; இந்தமுறை திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் லூயிஸ்-க்கு சீட்டு வழங்க வேண்டும் என்றும் திருச்சியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் அகில இந்திய தலைமைக்கு தந்தி அனுப்பியதற்காக, அவரது மாவட்ட பதவியை பறித்துவிட்டார் எம்.பி. திருநாவுக்கரசர் என்கிறார்கள்.
இதுகுறித்து, அங்குசம் சார்பில் எம்.பி. திருநாவுக்கரசரை தொடர்புகொண்டபோதும்கூட, “உங்களையும் யார் என்று தெரியாது. அவரையும் யார் என்று தெரியாது. திருச்சிக்கு வரும்போது நேரில் சந்தியுங்கள்.” என்பதாகத்தான் பதிலளித்திருந்தார், அவர்.
இவையெல்லாம், பழுத்த அரசியல்வாதியான எம்.பி. திருநாவுக்கரசரிடமிருந்து சற்றும் எதிர்பார்த்திராதவை. பத்திரிகையாளரை பார்த்து உன் வயது என்ன? முப்பது இருக்குமா? என கேட்ட இதே திருநாவுக்கரசர்தான், தேர்தல் அரசியலில் பங்கேற்று இன்னும் ஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட பெற்றிராத கட்சியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைப் போல அசிங்கமாக பதிலளிக்கப் போகிறேன் என்பதாக பேசியிருக்கிறார். தனது அரசியல் அனுபவத்திலும் வயதிலும் மிகவும் இளையவரான சீமானை முன்மாதிரியாக்கியிருக்கிறார்.
திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் என்றில்லை, மிகச்சமீபத்திய அவரது பேட்டிகள் பலவற்றிலும், கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் ”பாணியிலான” பதில்களைத்தான் வழங்கியிருக்கிறார், பழுத்த அரசியல்வாதியான அண்ணன் திருநாவுக்கரசர்.
”நிறைய சேனலுக்கு நான்தான் பேட்டி கொடுக்கிறேன். வேறு யாறும் ஒன் டூ ஒன்லாம் கொடுக்க மாட்டாங்க. போய் தொலைஞ்சிட்டு போறான். வாழ்ந்துட்டு போறானுட்டுதான். சில பேரு அத நம்பி இருக்கான் பாவம். அதனால வருமானம் வரும் காசு வரும் போயிட்டு போறானு கொடுக்கிறேன். அதுமாதிரி சில பத்திரிக்கைங்க கண்டத போட்டுட்டு இருக்கான்.” என்பது அந்த வகையில் ஒன்று.
இதையெல்லாம் விஞ்சும் வகையில், ”யார்கிட்ட என்ன கேட்கனும்னு ஒரு தரம் வேண்டும்” என்றெல்லாம் சகட்டு மேனிக்கு பேசிவிட்டார், அண்ணன் அண்ணாமலை. மன்னிக்கவும், திருநாவுக்கரசர்.
ஒருவேளை நாளையே, அண்ணன் திருநாவுக்கரசரிடம் கேள்வி கேட்கும் நிலை நமக்கு வந்தாலும் வரலாம். நம்ம பிழைப்பு அப்படிப்பட்டது. அதற்கு முன்னதாக, அண்ணன் திருநாவுக்கரசரின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வு குறித்தும் அவரது அரசியல் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக சிறு மெனக்கெடல்தான்.
அண்ணன் திருநாவுக்கரசர் 1949 இலே பிறந்துவிட்டார். 1972- இல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோதே வழக்கறிஞராகவும் அரசியலிலும் இயங்கியவர். ஆர்.எம்.வீரப்பனால் அடையாளம் காட்டப்பட்டு அதிமுக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றவர். தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். முதல்முறை சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது அவரது வயது வெறும் 27. அந்த இளம் வயதிலேயே முதல்முறையிலேயே சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக பதவியேற்று தொடர்ந்து 1980 வரை அந்த பதவியில் நீடித்தவர். பின்னர், 1980 – 1987 வரையிலான காலத்தில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் தொழில்துறை, வீட்டுவசதி துறை, கலால் மற்றும் கைத்தறி துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராக வலம் வந்தவர். தேர்தலில் இவருக்கு சீட் ஒதுக்குவதில் சொந்தக் கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியபோதும், ‘வென்றாலும் தோற்றாலும் அவனை அமைச்சராக்குவேன்’என்று எம்.ஜி.ஆரே கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆரி.ன் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர். அதிமுகவின் இளைஞர் அணியின் முதல் தலைவர் என்ற வரலாற்று பெருமைக்கு சொந்தக்காரரும் கூட.
எம்.ஜி.ஆர். மறைவையடுத்து ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சாத்தூர் இராமச்சந்திரனுடன் இணைந்து ஒருங்கிணைத்தவர். இன்றைய கூவத்தூர் கூத்துகளுக்கு முன்பாகவே, எம்.எல்.ஏ.க்களை ஆம்னி பஸ்களில் ஏற்றி ஊர் ஊராக சுற்றி பாதுகாத்தவர். ஜெ.வின் வலதுகரமாக இருந்தவர். பின்னர், அதே ஜெ.வால் ”உதிர்ந்த ரோமங்கள்” என்ற புகழ் மொழியோடு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
ஜெ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், எம்.ஜி.ஆர். திமுக என்ற கட்சி தொடங்கியவர். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தவர். வந்த வேகத்தில் பிரிந்து அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி கண்டவர். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் நடிகர் டி.ராஜேந்திரனால் தொடங்கப்பட்ட தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியில் பயணித்தவர். 1996-இல் கட்சியை கலைத்துவிட்டு, தலைவர் டி.ராஜேந்தர் ஐக்கியமானபோது, எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நிறுவனர் தலைவர் ஆனவர் திருநாவுக்கரசர்.
அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்று பாஜக அரசில் அங்கம் வகித்தவர். பின்னர், 2002 இல் இந்தக் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தவர். பா.ஜ.க.வில் கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மத்திய இணை அமைச்சராக இருந்தவர் – மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா ஒருமுறை பதவி வகித்தவர்.
பாஜகவில் இணையும் வரையில் திருநாவுக்கரசு ஆக இருந்தவர், திருநாவுக்கரசராக பெயர் மாற்றம் செய்து கொண்டவர். இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை ஆகிய 7 சின்னங்களில் போட்டியிட்டவர்.
2009 வரை பாஜகவில் பயணித்தவர் பின்னர் அதிலிருந்தும் விலகி, கடைசியாக காங்கிரசுக்கு வந்து சேர்ந்தவர். இவரது கடந்த கால அரசியல் செயல்பாட்டிலிருந்து தேசிய செயலராகவும் தமிழக காங்கிரசு தலைவராகவும் இருந்தவர். 2019 முதல் திருச்சி எம்.பி.யாக செயல்பட்டு வருபவர்.
காங்கிரசில் எந்த கோஷ்டியையும் சாராதவர். தனக்கென தனி கோஷ்டி வைத்திருப்பவர் என்பதைவிட, மக்கள் செல்வாக்கு மிகுந்த நபர் என்பதும் மறுப்பதற்கில்லை. பல கட்சிகள் மாறியிருந்தாலும், மாநில அமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இவர் பணியாற்றிய சமயங்களில், அவர் வகித்த துறைசார்ந்து தமிழக நலன் சார்ந்த பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், அதிகமுறை கட்சி மாறிய – தனிக்கட்சி தொடங்கியதுமான வரலாறு கொண்ட ஒரே அரசியல்வாதி இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றே புள்ளி விவரங்களின் வழியே அறிய முடிகிறது.இந்த பின்புலத்திலிருந்து, பாஜகவில் இணையபோவதாக வதந்தி உலவுகிறதே? என்று அந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்வியில் தவறொன்றும் இல்லையே என்றுதான் தோன்றுகிறது. கூடவே, இதனையெல்லாம் அண்ணன் திருநாவுக்கரசரிடம் எடுத்து சொல்லி அவருடைய கருத்தையும் பெற்றுவிட வேண்டும் என்றுதான் பத்திரிகையாளராக மனம் கேட்கிறது. ஆனால், அண்ணன் திருநாவுக்கரசரின் மனநிலை அதற்கு உடன்பட வேண்டுமே?
அண்ணன் திருநாவுக்கரசர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து பார்த்தால், குறைந்தபட்சம் 50 வயதிற்கு கீழானவர்கள் கேள்வியேக் கேட்கக்கூடாது என்பதுதான்.
அண்ணன் திருநாவுக்கரசர் அரசியலுக்கு வந்த போதோ, அவர் முதல்முறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற போதோ நான் பிறந்திருக்கவேயில்லை. 50 வருட அரசியல் பாரம்பரியம் கொண்டவரிடம், கேட்கக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறதா? குறைந்தபட்சம் எனது கேள்வியாவது அந்தத்தகுதியைப் பெற்றிருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எப்படி கேட்பது என்பதுதான் தயக்கத்திற்கான காரணம்.
என்ன வயது என்று கேட்டால்கூட, ஆதார் கார்டை நீட்டி விடலாம். ஆனால், என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால் என்ன செய்வது என்ற குழப்பம்தான். அடுத்த பிரச்சினை, அண்ணனை பார்த்துக் கேட்கும் கேள்வியும் தரமானதுதானா? என்பதையும் எங்கு உறுதிபடுத்திக்கொள்வது என்பது.
அடுத்தமுறை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்னதாக, அண்ணன் திருநாவுக்கரசரிடம் உரையாடும் தகுதி பெற்றவர்கள் என்பதற்கான அங்கீகார அட்டையையும் அவர்கள் தரப்பில் வழங்கினால் நன்றாக இருக்கும். கூடவே, கேட்கும் கேள்விகளும் தரமானவையா? தரமற்றவையா? என்பதையும் பகுத்துப் பார்த்து முன்கூட்டியே ஒப்புதல் அளித்துவிட்டால், நேரலையில் பத்திரிகையாளர்கள் அசிங்கப்படுவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம் என்றே தோன்றுகிறது.
ஒருவேளை, உள்நோக்கம் கொண்ட கேள்விகளாக இருப்பதாக அவர்கள் சந்தேகித்தாலும் முன்கூட்டியே பணம் வாங்கிக்கொண்டுதான் இந்தக் கேள்வியை கேட்கிறார்களா? என்பதையும் சம்பந்தபட்ட பத்திரிகையாளர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சரிபார்த்துவிட்டு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை பற்றியும் அவர்கள் பரிசீலிக்கலாம்.
அடுத்து, யாருக்கோ அடிமையாக மாறித்தான் இந்தக் கேள்வியை கேட்கிறார் என்று தோன்றினால், அதனை எவ்வாறு ஆம்? என்றோ, இல்லை என்றோ உறுதிபடுத்திக் கொள்வது என்பதற்குரிய வழிமுறைகளை வகுத்துக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.
– ஆதிரன்.
வரைபடம் – தினமலர் நன்றி
வீடியோ லிங்:
லூயிஸ்கிட்ட காசு வாங்கிட்டு கூவுறானுங்க.65வார்டிலும் மக்கள் குறைகளை கேட்ட ஒரே MP திருநாவுக்கரசர்தான்.மனசாட்சியை வித்தவன்தான் பத்திரிக்கை நடத்துறான்