நிலையில்லாமையே வாழ்க்கையின் முக்கிய விதியானதோ ?
நிலையில்லாமையே வாழ்க்கையின் முக்கிய விதியாக நிலைத்து நிற்கிறது..
சாதித்த வெறியில் மனிதன் தலை தூக்கும் போதும் சம்மட்டி கொண்டு நிலையில்லாமை போதிக்கிறது .
நேற்று பணக்காரன்
இன்று ஏழை
நேற்று ஆரோக்கியவான்
இன்று நோயாளி
நேற்று எழிலாடும் இளமை
இன்று தள்ளாடும் முதுமை
நேற்று ஒவ்வொரு நாளும்
நொடிபோல் கழிந்தது
இன்று ஒவ்வொரு நொடியும்
ஆண்டு போல் நீளுகிறது
நேற்று மாலையுடன் மேடையில்
இன்று ஓலையில் நெய்யப்பட்ட பாடையில்
ஒரு நொடி, ஒரு கனப்பொழுது அனைத்தையும் மாற்றி அமைத்து விடுகிறது.
செல்வத்தைக் கொண்டு நிலம் நீர் காற்று எதையும் வாங்க முடிகின்றது. ஆயினும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளின் ஒரு நானோ நொடியைக் கூட நீட்ட முடிவதில்லை.
அதைக் கொண்டு மாட மாளிகை கட்டிக் கொள்ள முடிகிறது.
காற்றைக் கொஞ்சம் குளிர் கூட்டி இதமாக்கிக் கொள்ள முடிகிறது.
ஆனால் உறக்கத்தை மட்டும் கண்களுக்குக் கொண்ட வர முடிவதில்லை .
அகண்டு விரிந்த பூமியில் அங்குல நிலம் வைத்திருந்தாலும் என் நிலம் என்ற அகந்தை வருகிறது.
நெடிய வரலாற்றில் சிறு புள்ளி போல் வாழ்ந்தாலும் உலகையே ஆண்ட பெருமையரவம் மண்டை ஓட்டிற்குள் புகுந்து கொள்கிறது.
வாழ்நாள் முழுவதும் எது ஆசை? எது பேராசை? என்று அறியாமையிலும் எதைக் கொடுத்தாலும் திருப்தி ஏற்படாத போதாமையிலுமே கழிகிறது.
பொன்னால் ஆன மலையே கிடைத்தாலும் முன்னால் சென்றவன் கைகளில் என்ன இருக்கிறது?
பின்னால் இருப்பவனுக்கு என்ன கிடைத்தது ?
என்றே காண்பதிலும் ஒப்பீடு செய்வதிலுமே கிடைத்த கொஞ்சூண்டு நிம்மதி விடை பெறுகிறது.
கூலிக்கு விரும்பும் நாம் உழைக்க விரும்புவதில்லை..
வெற்றிக்கு விருப்பம் தியாகம் செய்ய மனமில்லை..
சொர்கம் வேண்டி கைகள் நீட்டும் நாம் மரணிக்க விரும்புவதில்லை..
மீண்டும் கூறுகிறேன்
தோல் கொண்ட நிறத்தால் வேறானாலும்
உணரும் வலியால் அனைவரும் ஒன்று
நா பேசும் மொழியால் வேறானாலும்
அது உணரும் சுவையால் அனைவரும் ஒன்று
இங்கு தானாக சேர்ந்ததை வைத்தோ தனக்காக சேர்த்துக் கொண்டவற்றை வைத்தோ
பெருமை கொள்ளவோ இறுமாப்பு கொள்ளவோ
ஒன்றோடு ஒன்று ஒப்புமை பாராட்டவோ
ஏதுமில்லை..

நிலவும் அத்தனை சரிசமமற்ற தன்மைகளையும்
சமம் செய்யும் ஆற்றல் மரணத்திற்கு மட்டுமே உண்டு.
மனிதனின் மனம் மற்றும் உடல் கொண்ட அனைத்து நோய்களுக்கும்
அருமருந்தாக அதுவே அமைகிறது.
நிலையில்லாமையை
உணரும் தருணங்களில் தான்
நிலையானவனின் எண்ணமும் சிந்தனையும் நமக்கு வருகிறது…
பிறர் மரணத்தைக் காணும் போது தான்
நமக்கும் அது நிச்சயம் உண்டு என்ற எண்ணம் பிறக்கிறது.
தன்னை நோக்கி எந்துபவர்களின் கரங்களில்
அயர்வின்றி வழங்குபவனை
நோக்கி கரங்கள் ஏந்துவோம்…
கேட்பவர்களின் மடிகளைக்
குறைவின்றி நிரப்பும் வல்லமை
கொண்டவனிடம் மடிப்பிச்சை கேட்போம்..
சொல்லெதுவும் பேசாமலும்
நம் மனதின் எண்ண ஓட்டத்தை
அளவிடும் சக்தி கொண்டவனிடம்
நம் கோரிக்கைகளை வைப்போம்…
நிலையில்லாமை நம்மனதைப் புண்படுத்தும் போதும் நிலையானவனின் எண்ணமும் மரணம் குறித்த சிந்தனையும் வந்து நம்மைப் பண்படுத்துகிறது.
நிச்சயம் அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே நம் அடைக்கலம்.
— Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா








Comments are closed, but trackbacks and pingbacks are open.