ஆள்மாறாட்டம் செய்து ஐந்து கோடியை ஆட்டைய போட்ட கும்பல் ! சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸார் !
புதுச்சேரியில், தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் போல வாட்சப்பில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியான முறையில் ஐந்து கோடி ரூபாய் வரையில் சுருட்டிய சம்பவத்தை கடந்த ஜூலை-23 அன்று அங்குசம் இணையத்தில், செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், இந்த மோசடி விவகாரத்தில், இதுவரை 12 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முக்கிய குற்றவாளி ஒருவரை கேரளத்தில் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “முக்கியமாக வங்கி கணக்கை வாங்கி கொடுத்து நிறுவனத்தின் பணத்தை மாற்றிய முக்கிய நபர் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் வைத்து இணை வழி போலீசார் கைது செய்தனர். மேற்படி நபரின் பெயர் சீனு ராமகிருஷ்ணன். வயது 45. கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த வழக்கில் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் இவர் வாங்கிக் கொடுத்த வங்கி கணக்கில் மோசடிக்காரர்கள் மாற்றி அதை பல்வேறு நபர்களுக்கு அனுப்பி இருப்பது விசாரணையில் தெரிய வரவே, மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதா கிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பெயரில் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் அவர்களின் வழி காட்டுதலின் பேரில் இணைய வழி போலீசாரின் தனிப்படை ஆய்வாளர்கள் தியாகராஜன் கீர்த்தி தலைமை காவலர் மணிமொழி ராஜகுமார், வைத்தியநாதன், அஜித்குமார், ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளத்தில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் வைத்து கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவர். இந்த வழக்கில் அவர்களுடைய தொடர்பு மிக முக்கியமாக வங்கி கணக்கை வாங்கி கொடுத்து மோசடி செய்த பணத்தை பெற்று அந்த பணத்தை மற்ற வங்கி கணக்குகளுக்கு அனுப்பியவர்கள் ஆகும். வங்கிக் கணக்கை கொடுத்த நபர்களை டெல்லிக்கு அவர்களுடைய செல்போன் உடன் வரவைத்து அவர்களுடைய வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை மற்ற வங்கி கணக்குகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. ” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
”உங்களுடைய சிம் கார்டு வங்கி கணக்கு அல்லது புதிய வங்கி கணக்கை துவக்கி கொடுப்பது போன்ற எதையும் செய்ய வேண்டாம். இணைய வழி மோசடிக்காரர்கள் இது போன்ற வங்கி கணக்குகளில் மோசடி செய்கின்ற பணத்தை போட உபயோகப்படுத்துவதால் வங்கி கணக்கு யார் பெயரில் உள்ளதோ அவரே மோசடி செய்த முழு பணத்திற்கும் பொறுப்பு ஆகின்றனர். பொதுமக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்காக இருக்க வேண்டும்” என்பதாக எச்சரிக்கிறார், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் IPS.
— அங்குசம் செய்திப்பிரிவு.