மெடிக்கல் ஷாப் பெயரில் பெருகும் போலி வைத்தியம் ! பள்ளி மாணவி பலி !
மெடிக்கல் ஷாப் என்ற பெயரில் பெருகும் போலி வைத்தியம் ! பள்ளி மாணவி பலி !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் – சங்கீதா தம்பதி. குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிஷாந்த் (5) துர்க்கா ஸ்ரீ (4) என இரண்டு குழந்தைகள்.
நிஷாந்த் ஒண்ணாம் வகுப்பும், துர்கா ஸ்ரீ எல்கேஜியும் வைரிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த _ 1-ந்தேதி துர்க்கா ஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மேலும் சளி இருமல் அதிகமாக இருந்ததால் , அவரது தாய் சங்கீதா தனது குழந்தை துர்க்கா ஸ்ரீயை அழைத்துக் கொண்டு கொப்பம்பட்டி யில் சோலைமேகலா என்ற எம்பிபிஎஸ் மருத்துவர் நடத்தி வரும் ராஜேஸ்வரி மெடிக்கலில் சென்று சளிக்காக ஆவி பிடித்துள்ளார்.அப்போது அங்கு மருத்துவர் சோலை மேகலா இல்லை என கூறப்படுகிறது.
மேலும் மெடிக்கலில் வேலை பார்க்கும் 2 பெண்கள் , சங்கீதாவின் குழந்தைக்கு இருமல் மருந்து மற்றும் மாத்திரைகளைக் கொடுத்துள்ளனர். அதனை வாங்கிய சங்கீதா வீட்டிற்கு சென்று மாலை 4 மணிக்கு, மெடிக்கலில் வேலை பார்க்கும் பெண்கள் சொன்னபடி குழந்தை துர்க்காவிற்கு மருந்து மாத்திரைகளை கொடுத்துள்ளார். மீண்டும் இருமல் வரவே இரவு 10 மணியளவில் மீண்டும் ஒருமுறை மருந்து மாத்திரை கொடுத்துள்ளார்.
இதில் எதிர்பாராவிதமாக குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு துவண்டு விழவே, தாய் சங்கீதா பதறியபடி குழந்தையைப் பார்த்ததில் பேச்சு மூச்சின்றி இருந்த துர்க்கா ஸ்ரீயை தனது தோளில் தூக்கிக் கொண்டு, இரவு 10-30 மணிக்கு தனது மாமியாருடன் மருத்துவர் சோலை மேகலா வீட்டிற்கு சென்று விபரத்தை கூறி , குழந்தைக்கு என்னாயிற்று என அழுது கதறியபடி கூறிய சங்கீதாவிடம், டாக்டர் சோலை மேகலா குழந்தையை தொட்டுக் கூடப் பார்க்காமல், தனது வீட்டிலிருந்து கொண்டு வெளியில் வராமல் , ” உன் குழந்தை இறந்துவிட்டது. அதற்கு நாங்க கொடுத்த மருந்தால் உன் குழந்தை இறக்கவில்லை. நீயும், உன் மாமியாரும் சேர்ந்து தான் பெண் குழந்தை வேண்டாம் என கொன்று விட்டீர்கள் என அவர்களை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.
இந்த தகவல் உப்பிலியபுரம் போலீசாருக்கு தெரிய வர அவர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். சளி இருமலுக்காக மெடிக்கலில் எவ்வித முன் அனுபவமும் இன்றி வேலை செய்யும் 2 பெண்கள் குழந்தைக்கு பரிந்துரை செய்து கொடுத்த மருந்து மாத்திரைகளைப் பற்றிக் கூறி அனுபவமிக்க குழந்தைகள் நல மருத்துவரிடம் கேட்டபோது , அவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது.
இறந்து போன பெண் குழந்தையான துர்க்கா ஸ்ரீக்கு, 6 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பெரியவர்களுக்கு இருமல் சளிக்காக பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகள் தரப்பட்டுள்ளதாகவும் , 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த பார்முலா மருந்தை எந்த குழந்தைகள் நல மருத்துவரும் தருவதில்லை. இருமல் மருந்தையும், மாத்திரையையும் ஒரு சேர குழந்தைக்கு கொடுப்பது அளவுக்கதிகமானது மற்றும் மருந்தின் வீரியத் தன்மை, ஓவர்டோஸ் காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு, அதனால் கூட குழந்தை இறந்திருக்கலாம் என தெரிவித்தார் .
மேலும் துறையூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணி செய்யும் சோலை மேகலா தனது ஊரான கொப்பம்பட்டியில் ராஜேஸ்வரி மெடிக்கல் ஒன்றையும் அருகிலேயே தனது பெயரில் கிளினிக் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். பெரும்பாலும் இவரது மெடிக்கல் மற்றும் கிளினிக்கை பொறுத்தவரை சிகிச்சையளிப்பது சோலைமேகலா கிடையாதாம். எப்போதாவது தான் இவர் கிளினிக்கிற்கு வருவார் எனக் கூறுகின்றனர். அதனால்அவரது கணவரான இஞ்ஜினியர் ஆனந்த் என்பவர் தான் கிளினிக் மற்றும் மெடிக்கல்லை பார்த்துக் கொள்வது. ஊசி போடுவதில் இருந்து அனைத்து சிகிச்சைகளும் செய்வது மெடிக்கலில் மருந்துகள் தருவது போன்ற அனைத்து செயல்களும் ஆனந்த் தான் செய்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று ஆனந்த் மெடிக்கலில் இல்லை என்றும் வேலை பார்க்கும் 2 பெண்கள் மட்டுமே இருந்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் கொப்பம்பட்டி மற்றும் கோட்டப்பாளையம், வைரிச்செட்டிப்பாளையம், நாகநல்லூர், முருங்கப்பட்டி, B. மேட்டூர் , சோபனபுரம் உள்ளிட்ட உப்பிலியபுரம் பகுதிகளைச் சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மெடிக்கல் ஷாப் என்ற பெயரில் போலி வைத்தியம் செய்து கொண்டு, அதன் மூலம் வீடு, வாசல், கார் என செல்வச் செழிப்புடன் போலி மருத்துவர்கள் உலா வருகின்றார். இதில் கொப்பம்பட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நபர் கடந்த 30-வருடங்களுக்கும் மேல் வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு , தனது வீட்டிலேயே தற்போது கிளினிக் மற்றும் மெடிக்கல் வைத்துக் கொண்டு, தையல், நரம்பு ஊசி போடுவது, அவரின் மனைவி பெண்களுக்கு காய்ச்சல் முதல் கருத்தடை வரை எவ்வித அனுபவமின்றி அபாயகரமான முறையில் சிகிச்சையளிக்கின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்டோர்க்கு பணத்தை கொடுத்து சரி செய்து விடுவார்கள்.
பொதுவாக உப்பிலியபுரத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மெடிக்கல் என்று பெயருக்கு வைத்துக் கொண்டு, சுகாதார ஆய்வாளர் முதல் கம்பவுண்டராக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த நபர் வரை நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அபாயகரமான முறையில் சிகிச்சையளித்து வருவது இன்று வரை தொடர்கதையாகி விட்ட நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகளிடத்தில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை புகார்கள் சென்றும் இன்று வரை நடவடிக்கை இல்லை எனவும், போலி மருத்துவம் மற்றும் அனுபவமில்லாதவர்களால் பாதிக்கப்பட்டு மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் இனியும் தொடராத வண்ணம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் உடனடியாக போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– ஜோஸ்