மக்கள் போராளிக்கு ”தகைசால் தமிழர் விருது” கோரிக்கை வைத்த நீதியரசர் !
ஸ்டேன் சுவாமிக்கு தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி கௌரவிக்க வேண்டும்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் நீதியரசர் கே.சந்துரு கோரிக்கை.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து, வரவேற்புரை வழங்கினார். வரவேற்புரையைத் தொடர்ந்து செயலர், முதல்வர், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர் ஆகியோருடன் இணைந்து மாணவர்கள் அரசியல் சாசன நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.வாழ்த்துரையாற்றினார். அவர்தம் வாழ்த்துரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறி அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். ஏதோ சட்டம் என்பது வழக்கறிஞர்களுக்கானது. அவர்கள் மட்டும் கொண்டாடும் நாள் இது என்று எண்ணாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிறைந்த அரங்கில் அரசியலமைப்புச் சட்ட நாள் குறித்த நிகழ்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய குழுவில் பணியாற்றிய அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியால் தேர்வு செய்யப்பட்டவர் அருள்தந்தை ஜெரோம் டிசூசா. நீங்கள் ஒரு பாதிரியார். நீங்கள் அரசியல் சட்டம் இயற்றுவதில் பங்கேற்கலாமா என்று கேட்டதற்கு, அரசியல் இருந்தால்தான் நாடே இருக்க முடியும். அந்த அரசியலில் பங்கு கொள்ளாமல் மக்களுக்கு எந்தவிதமான சேவையும் ஆற்ற முடியாது என்று கூறி முதன்முறையாக அருட்தந்தை ஒருவர் அந்த அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்தந்தை ஜெரோம் டிசூசா அதிபராகவும், முதல்வராகவும் பணியாற்றிய கல்லூரியில் இந்த நிகழ்வு நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே வேளையில் ஒரு கவலையும் எனக்கு ஏற்படுகிறது. இந்தக் கல்லூரிக்கு வந்தபோது ஸ்டேன் சுவாமியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த விரகாலூரில் பிறந்து 40 ஆண்டுகள் நீர், வளம், வனம் என்கிற முழக்கத்தோடு பழங்குடி மக்களுக்காகப் போராடி சிறையிலே இறந்த அவரின் தியாகத்தை வீரத்தை நாம் போற்ற வேண்டும். தனக்காகப் போராடாமல் எங்கோ பிறந்த பழங்குடினருக்காகப் போராடி இறந்த ஸ்டேன் சாமிக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நான் பேசுவதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆகும். அதுவே இந்தியாவின் மரபணு ஆகும். அதன் மூலம் நமக்குக் கிடைத்துள்ளதே இந்த பேச்சுரிமை. எழுத்துரிமை, உரையாடும் உரிமை உள்ளிட்ட அனைத்துமாகும். எனவே நாளை சனநாயகக் காவலர்களான இளைஞர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாம் பெற்றுள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். அதற்கே இந்தக் கூடுகை எனக்கூறி தம் உரையை நிறைவு செய்தார். சிறப்புரைக்குப் பிறகு மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு நீதியரசர் பதிலளித்தார். நிறைவில் கல்லூரி இணைமுதல்வர் முனைவர் த.குமார் நன்றியுரையாற்றினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நுண்கலைகள் குழு, என்.சி.சி 2 தமிழ்நாடு கவசப்படை, மாணவர் பேரவை இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.