அங்குசம் பார்வையில் ‘இந்திரா’
தயாரிப்பு : ஜே.எஸ்.எம். மூவி புரொடக்ஷன் & எம்பெரர் எண்டெர்டெய்ண்மெண்ட் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக். வெளியீடு “ டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் டைரக்ஷன் ; சபரிஷ் நந்தா. ஆர்ட்டிஸ்ட் : வசந்த் ரவி, மெஹ்ரின் பிர்சடா, சுனில், அனிகா சுரேந்திரன், கஜராஜ், கல்யாண்குமார், ராஜ்குமார். ஒளிப்பதிவு : பிரபு ராகவ், இசை : அஜ்மல் தஹ்சீன், எடிட்டிங் : பிரவீன் கே.எல்., ஸ்டண்ட் : விக்கி, பி.ஆர்.ஓ. : சதீஷ்குமார் [ எஸ்-2 மீடியா].
இது பேய்ப்படம் அல்ல. ஆனால் பேய்ப்படம் போல திகிலாகத் தான் ஆரம்பிக்குது. டம்மு டம்முன்னு சத்தம் கேட்குது. ஒரு கருப்பு உருவம் வீட்டுக்குள் கிடக்குது. திடீரென யாரோ முதுகில் கத்தியால் குத்துகிறார்கள். அலறியடித்து எழுகிறார் இந்திரா [ வசந்த் ரவி ]. திகில் கனவு கலைகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் ரவி சஸ்பென்ஸனில் இருக்கிறார். ஒரு மாதமாகியும் சஸ்பென்ஸனை ரிவோக் பண்ணாததால் கமிஷனரைப் பார்க்க தினமும் அலைந்து தினமும் குடிக்க ஆரம்பிக்கிறார். மனைவி கயல் [ மெஹ்ரின் பிர்சடா] அருகில் இருந்து ஆறுதல் கூறினாலும் சில நேரங்களில் மனைவியை மறந்துவிடுகிறார் வசந்த் ரவி. காலையிலேயே குடிக்க ஆரம்பித்துவிடுவதால், வசந்த் ரவிக்கு கண் பார்வை போய்விடுகிறது.
இந்த நிலையில் ஒரு நாள் இரவு கயல் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாண்குமார் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதற்கு முன்பாக சினிமா தியேட்டர், சென்னை மாநகரின் சப்-வே மற்றும் சில இடங்களில் ஆண்களும் இளம் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடலில் வலது கைமட்டும் வெட்டப்பட்டுள்ளது. இது சைக்கோ கொலைகாரனின் கொடூரம் தான் என்பதையும் கண்டு பிடிக்கிறார் கல்யாண்குமார். அந்த சைக்கோ சுனில் தான் என்பதையும் கண்டுபிடித்து தூக்கிவந்து விசாரிக்கும் போது தான் கயல்[ மெஹ்ரின் பிர்சடா] கொலை நடக்கிறது.
சுனிலோ ”இதுவரை 22 கொலை செஞ்சுருக்கேன். ஆனா கயலை நான் கொலை செய்யல” என்கிறார். அப்படின்னா கயலைக் கொலை செய்தது யார்? என்பதற்கு விடை தான் இந்த ‘இந்திரா’.
வருசத்துக்கு ஒரு படமோ, இரண்டு வருசத்துக்கு ஒருபடமோ வந்தாலும் வசந்த் ரவியின் படங்கள் நல்லாத் தான்ன் இருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ஜெயிலருக்குப் பிறகு இப்ப வந்துள்ள இந்த ‘இந்திரா’வில் கண்பார்வையற்றவராக நடிக்க நன்றாகவே பயிற்சி எடுத்திருக்கார் வசந்த்ரவி. சுனிலுடன் அனிகாவின் காதலனுடனும் நடக்கும் ஸ்டண்ட் சீக்வென்ஸை வசந்தரவிக்காகவே ஸ்பெஷலாக கம்போஸ் பண்ணியுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி. டைரக்டர் சபரிஷ் நந்தாவின் ஐடியாவும் ஒர்க்-அவுட்டாகியுள்ளது.
வசந்த்ரவி-மெஹ்ரினுக்கிடையிலான லவ் ஃப்ளாஷ்பேக் வைத்திருப்பது க்ரைம் லைனிலிருந்து விலகி, கொஞ்சம் ரிலாக்ஸ் தருது. இந்த சைக்கோ க்ரைம் த்ரில்லர் திரைக்கதையில் பெரிய விசயம் என்னன்னா.. இடைவேளைக்கு முன்பே கொலைகாரன் சுனில் தான் என்பதைச் சொல்லிவிட்டு, ஆனால் மெஹ்ரின் பிர்சடாவைக் கொன்றது சுனில் இல்லை என ட்விஸ்ட் வைத்து,க்ளைமாக்ஸ் வரை அந்த ட்விஸ்டை மெயிண்டெய்ன் பண்ணியிருக்கும் டைரக்டர் சபரிஷ் நந்தாவுக்கு சபாஷ்.
மற்ற படங்களைவிட இந்தப் படத்தில் டோட்டல் டிஃபெரெண்டாக நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் சுனில். வலது தோள்பட்டையை லேசாக ஒருபக்கமாக சரித்து, லைட்டாக கண்களை சொடுக்கி சைக்கோவாக மாறிவிட்டார் சுனில். இடைவேளை வரை படம் கொஞ்சம் மந்தமாகத் தான் போகுது.
இடைவேளைக்குப் பிறகு வரும் அனிகா சுரேந்திரனின் ஃப்ளாஷ்பேக் தான் இந்த இந்திராவின் ’பேக் போர்ன்’. வசந்தரவிக்கு கண்பார்வை போனதற்கு காரணமும் இடைவேளைக்குப் பிறகு தான் இருக்கு. இதற்கு முன்பு சில படங்களில் கேட்ட ஞாபகம் இருந்தாலும் இதில் ஸ்கிரிப்டுக்குத் தேவையான க்ரைம் த்ரில்லர் எஃபெக்ட் கொடுத்து அசத்தியுள்ளார் மியூசிக் டைரக்டர் அஜ்மல் தஹ்சீன்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவின் கேமரா வசந்த்ரவி-மெஹ்ரின் வசிக்கும் ஃப்ளாட்டுக்குள் பகலிலும் இரவிலும் நன்றாகவே சுழன்றிருக்கு. இடைவேளைக்குப் பிறகு தான் எடிட்டர் பிரவீன் உஷாராகி படத்தை க்ரிப்பாக கொண்டு போக உதவியிருக்கார்.
ஹீரோவோ, ஹீரோயினோ கண்பார்வையற்றவராக இருந்தால், அது க்ரைம் த்ரில்லர் படமாகத் தான் இருக்கும் என்பதற்கு இந்த ‘இந்திரா’வும் விதிவிலக்கல்ல. ஆனால் இந்தத் திரைக்கதை விதிவிலக்கானது தான்.
— மதுரை மாறன்