சமூக அநீதிக்கு வழிவகுக்கும் பட்டியலின உள் ஒதுக்கீடு ! அக்-13 இல் பெங்களூருவில் கருத்தரங்கம் !
சமூக அநீதிக்கு வழிவகுக்கும் பட்டியலின உள் ஒதுக்கீடு! என்ற தலைப்பில், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் கருத்தரங்கு ஒன்றை அக்-13 அன்று பெங்களூருவில் நடத்தவிருக்கிறார்கள்.
பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி பதிப்பகம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். பெங்களூரூ -8, அல்சூர், பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் அக்-13 அன்று மதியம் சரியாக 2.00 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர் மே.க.பிரவீன் நெறியாளுகையில், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன், கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே.டி.இளங்கோவன், முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.குமார், பேரா.சி.லட்சுமணன், இந்திய குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை.
அறிவு சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வர்,கவிஞர் தமிழடியான், வணங்காமுடி இயக்கத்தின் தலைவர் அ.தமிழ் முரசு,அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்து பிரதீபன், எழுத்தாளர் அருள் முத்துக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள் நலங்கிள்ளி, தனஞ்செழியன், பத்திரிகையாளர் இரா.வினோத் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். பாவலர் மகிமை தாஸ் எழுச்சி பாடல்களும் இந்நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிகழ்வின் நோக்கம் குறித்து எழுத்தாளரும் பண்டிதர் பதிப்பகத்தின் நிர்வாகியுமான அருள் முத்துக்குமரனிடம் பேசினோம். “கடந்த ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் பட்டியலினத்தவரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கலாம். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பட்டியல் பிரிவினரை பிரித்தாளும் சூழ்ச்சியாக இருக்கிறது.
பட்டியல் பிரிவில் உள்ள பல்வேறு சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் நன்மை கிடைப்பதை தடுக்கும் வகையிலும் இருக்கிறது. எனவே இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகவே, உள் ஒதுக்கீடு குறித்து சமூகத்திற்கு சரியான புரிதலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்துதான் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறோம்” என்கிறார்.
இந்நிகழ்வில் பங்கேற்பு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு: 9886823612 /9787494632/ 8675188609/ 8072917363 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.