IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடா் (2)
வெஸ்ட் இன்டீஸ் பி டீம் என்கிற லெவலுக்கு இருந்த காளிச்சரண் தலைமையிலான கிரிக்கெட் டீம், இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. பம்பாய் வாங்கடே மைதானம் கவாஸ்கருக்கு ஹோம் கிரவுண்டு என்றால், கவாஸ்கரின் மச்சானான குண்டப்பா விஸ்வநாத்துக்கு பெங்களூரு சொந்த கிரவுண்டு. அத்துடன் சந்திரசேகர், பிரசன்னா போன்ற சுழல் பந்து வீச்சாளர்களை இந்தியாவுக்குத் தந்ததும் பெங்களூருதான்.
மேட்ச் பார்ப்பதற்கான டிக்கெட் கிடைக்காதவர்கள், டிக்கெட் வாங்க வசதியில்லாதவர்கள் ஆகியோரின் ஏமாற்றத்திற்கு ஆறுதல், ரேடியோவில் ஒலிபரப்பாகும் ரன்னிங் கமெண்ட்ரிதான். டி.வி. பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் குறைவு. அப்போது இந்தியாவில் பணக்காரர்கள் வீடுகளில்தான் டி.வி. இருக்கும். அதுவும் கருப்பு-வெள்ளை டி.வி. பெரும் பணக்காரர்கள் வீடுகளில் கலர் டி.வி. இருக்கலாம். டி.வி. ஒளிபரப்பு எல்லா இடங்களுக்கும் துல்லியமாகக் கிடைக்கக்கூடிய வகையில் சாட்டிலைட் வசதிகளும் இல்லாத காலம்.

கவாஸ்கர் எப்படி இருப்பார், கபில்தேவ் தோற்றம் எப்படி என்று முழுமையாகத் தெரியாவிட்டாலும், பத்திரிகைகளில் வெளியான போட்டோவை மனதில் வைத்துக்கொண்டு, ரேடியோ கமெண்ட்ரி கேட்க வேண்டும். இப்படித்தான் ஸ்கொயர் கட் அடித்திருப்பார். இப்படித்தான் இன் ஸ்விங் பால் போட்டிருப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்களின் மனத்திரையில் காட்சிகள் ஓடும்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எளிதாகக் கேட்கக்கூடியது, ‘தம்’முக்கு நெருப்பு. பக்கத்தில் சிகரெட் பிடிப்பவர் யாராக இருந்தாலும் அவரிடம் நெருப்பு வாங்கி நம்ம சிகரெட்டை பற்ற வைக்கலாம். அதுபோல, காதருகே டிரான்சிஸ்டர் ரேடியோவை வைத்துக்கொண்டு கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டபடியே சாலையோரமாக நடந்து செல்பவர் யாராக இருந்தாலும் அவரிடம் போய் ஸ்கோர் என்ன என்று கேட்கலாம். இரண்டும் மறுப்பின்றிக் கிடைக்கும். பெங்களூர் டெஸ்ட் மேட்ச்சின் ஸ்கோர் நிலவரமும் அப்படித்தான் பலராலும் அறியப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் கலர் டி.விகளும் அதற்கேற்ப சேனல்களும் அதிகரித்துக் கொண்டிருந்தன. அதை குறிவைத்துதான், பிரபல கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு ரேட் பேசிக் கொண்டிருந்தார் கெர்ரி பாக்கர். இங்கிலாந்தின் பிரபல ஆட்டக்காரரான டோனி க்ரீக், பாக்கருக்கு இதில் துணையாக இருந்தார். எப்படி மேட்ச்களை நடத்துவது, அதை எப்படி பிரபலப்படுத்துவது என்பதை பாக்கருக்கு விளக்கிக்கொண்டிருந்தார் ஆஸ்திரேலியாவின் பவுலர். டென்னிஸ் லில்லி. இயான் சேப்பல் பாக்கரின் பாக்கெட்டில் இருந்தார்.
பாக்கர் உருவாக்கும் கிரிக்கெட் டீமிற்காக வெஸ்ட் இன்டீஸின் க்ளைவ் லாயிட்டிடம் பேரம் பேசினார்கள். ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் சவாலான ஆட்டக்காரராக லாயிட் இருந்த நேரம் அது.

“சொல்லுங்க ஜென்டில்மேன், உங்க ரேட் என்ன?”-நேரடியாகவே கேட்டார் பாக்கர். தன்னை விலை கேட்கிறார்கள் என்று தெரிந்தாலும், தனக்கான விலை என்ன என்று க்ளைவ் லாயிட்டுக்குத் தெரியவில்லை. பாக்கரே லாயிட்டுக்கான தொகையை சொன்னார். லாயிட், தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றிவிட்டு, கண்களைத் துடைத்தார். பனித்திருந்தது.
வெஸ்ட் இன்டீசுக்காக அவர் ஆடுகின்ற காலம் வரை எவ்வளவு தொகை கிடைக்குமோ அதைவிட அதிகமாக, பாக்கர் தன்னுடைய முதல் தொடருக்கான தொகையை க்ளைவ் லாயிட்டுக்கு நிர்ணயித்திருந்தார். லாயிட்டால் நம்பமுடியவில்லை. அந்த ஆஃபரை விடவும் முடியவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விவியன் ரிச்சர்ட்ஸ், ஆண்டி ராபர்ட் என அவரது டீமின் கூட்டாளிகளும் ஒப்பந்தமாகினர். ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், இயான் சேப்பல் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாக்கர் உருவாக்கும் போட்டித் தொடருக்கு ஒப்பந்தமாகினர்.
இங்கே பெங்களூரில் காளிச்சரண் தலைமையிலான வெஸ்ட்இன்டீஸ் அணி, கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணியுடன் இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சை ஆடிக்கொண்டிருந்தது. வெஸ்ட் இன்டீஸ் முதல் இன்னிங்ஸில் 437 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் முதல் பாலிலேயே அவுட் ஆக, பெங்களூர் மண்ணின் மைந்தனான குண்டப்பா விஸ்வநாத் 70 ரன்கள் அடித்து சமாளித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஐந்து நாள் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் வரை இழுபறியாகத்தான் இருந்தது. இந்தியாவின் பிஷன்சிங் பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் மூவரும் சுழல் பந்துகளாக வீசிக் கொண்டிருந்தனர். வெஸ்ட் இன்டீஸ் அடித்தும் ஆடாமல், அவுட்டும் ஆகாமல் தடுப்பாட்டத்தில் நேரத்தை இழுத்தது.
இதுபோன்ற சவ..சவ.. ஆட்டங்களை கிரிக்கெட்டைவிட்டே விரட்ட வேண்டும் என்பதுதான் பாக்கரின் ப்ளான். அதற்கேற்ற திருப்பங்களுடன் அவர் ஆஸ்திரேலியாவில் வியூகங்களை வகுத்திருந்தார். பெங்களூர் டெஸ்ட்டின் ஐந்தாவது நாளில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
(ஆட்டம் தொடரும்)
கோவி. லெனின் – மூத்த பத்திகையாளா்