அநீதிக்கெதிரான ஒற்றைக்குரல் இரோம் ஷர்மிளா ( 9 )
கண்ணெதிரே போதிமரங்கள்! ( 9 ) (அறியவேண்டிய ஆளுமைகள்)
மணிப்பூரில் உள்ல மலோம் எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. AFSPA இல் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்த இடமில்லை எனச் சொல்லி அந்தக் கோரிக்கைகளை அரசு நிராகரித்தது.
அது என்ன AFSPA?
1958 செப்டம்பர் 11 முதல் அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் AFSPA – Armed Forces Special Powers Act என்னும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் என்பது போல இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றன.
பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களைச் சுடலாம். யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். தேவையெனில் அவர்களைச் சுடவும் அதிகாரம் உண்டு. சந்தேகத்தின் பேரில் யாரையும் கொலை செய்ய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம். இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது. இதலெல்லாம் அச்சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்கள்.
இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராடிக் கொண்டிருந்தார் மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா.

1972 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஐரோம் ஷர்மிளா ஒரு விவசாயக் குடும்பத்தில் ஐரோம் சி நந்தா, ஐரோம் ஓங்பி சக்தி என்ற தம்பதியினருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். 1991 ஆம் ஆண்டு, 12ஆம் வகுப்புடன் தன் படிப்பை முடித்துக் கொண்ட இவர் இயற்கைச் சிகிச்சை மற்றும் யோகா முறைகளைக் கற்க ஆரம்பித்தார். பல்வேறு சமூக அமைப்புகளுடனும், மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அந்த அமைப்புகள் நடத்திய பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வதை வழக்கமாகவும் கொண்டிருந்தார்.
2000 ஆம் ஆண்டு, நவம்பர் 2 அன்று ஓங்காய் என்னுமிடத்திற்கு அருகில் கர் என்ற இடத்தில் கலாச்சாரம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மாலோம் கிராமத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களைப் பாதுகாப்புப் படையினர் வரைமுறையற்று சுட்டு கொன்ற செய்தியைக் கேள்விப்படுகிறார்.
நவம்பர் 3 ஆம் தேதி பல மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மணிப்பூர் தேசம் அதிர்ச்சியில் உறைந்துபோனது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றன.
நவம்பர் 04 அன்று அதாவது மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி நான்காம் நிலை கால்நடை ஊழியர் ஒருவரின் மகளான 28 வயது ஐரோம் ஷர்மிளா. தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடஙகுகிறார்.

புதுவிதமான போராட்டத்தைக் கையிலெடுக்க முடிவெடுத்த ஐரோம் ஷர்மிளா. வை நவம்பர் 6 அன்று அவரை IPC 309 பிரிவின் கீழ் தற்கொலை முயற்சி செய்வதாகக் கூறி காவல்துறை கைது செய்கிறது.
தண்ணீரைத் தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருக்கிறார். ஆனால் கைது செய்யப்பட்டவரின் உயிரைக் காப்பது காவல் துறையின் பணி என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு மூக்கின் வழியே ஒரு பிளாஸ்டிக் குழாயைத் திணித்து நீர்; வகை உணவுகளைச் செலுத்தத் (Nasogastric intubation) தொடங்குகிறார்கள்.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்து வைக்க முடியும். அதன்பின் மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்த உடன் அவர்; தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற பெண்கள் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்
அவர் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எந்தவொரு திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்திற்குச் சென்றுவிட்டது. ஆனாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

ஷர்மிளாவை கைது செய்து விசாரணை என்ற பெயரில் நீதிமன்ற காவலில் காலவரையின்றி வைத்துவிட்டு, திடீர் என்று ஒருநாள் விடுவிப்பதும் அதுபோல திடீரென்று கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டன.
2004 ஆம் வருடத்தில் மனோரம்மா என்ற பெண் இராணுவத்தால் பலமுறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்படுகிறாள். இதை கண்டித்து மெயிரா பைபிஸ் குழுவைச் சேர்ந்த பெண்கள் முழு நிர்வாணமாக இந்தியா இராணுவ முகாமிற்கு முன்சென்று “இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி, எங்களையும் கொலை செய், எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள்” என்று மனோரம்மா படுகொலையைக் கண்டித்து அவர்கள் முழங்கியது அனைவரையும் கிளர்ந்தெழ வைத்தது.
மக்கள், தங்களுக்கான விடுதலையை முன்வைத்துப் போராடும் போது அவர்களை நிலை குலையச் செய்ய பாலியல் வன்முறையை இராணுவத்தினர் ஒரு உக்தியாகக் கையாளுகின்றனர். இதைக் கண்டித்துத் துணிவுடன் தம் குரலை உயர்த்தினார் ஐரோம் ஷர்மிளா.
2005 ஆம் ஆண்டு ஜீன் 6 ஆம் தேதி ஜீவன் ரெட்டி கமிசன் இந்த சட்டம் குறித்து எதிர்மறையான பல கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் காங்கிரஸ் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டது. அதன் பின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஜீவன் ரெட்டி கமிசன் கொடுத்த சட்டதிருத்தக் கருத்துக்களை நிராகரித்தார். இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல்பட முடியாது எனக் கருத்தும் தெரிவித்தார்.
நீதிமன்றக் காவலில் இருந்து நிபந்தனையின்றி தன்னை விடுதலை செய்யுமாறு ஷர்மிளா சார்பில் உயர்;நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 2006 அக்டோபர் 3 ஆம் தேதியன்று அவரை விடுதலை செய்தது.

போராட்டத்தைத் தீவிரவப்படுத்த எண்ணிய ஐரோம் ஷர்மிளா போலியான ஒரு பெயரில் விமானம் மூலம் டில்லி சென்றார். அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலத்தை நடத்தினார். ஜந்தர்மந்தரில் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்ங்களை அனுப்பினார். ஆனால் இன்றுவரை அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை.
விபரீதம் அடைவதை அறிந்த டில்லி காவல் துறை இரவில் அவரைக் கைது செய்தது. தெற்கு டில்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான் மருத்துவக்கழகத்திற்குக் கொண்டு சென்று பின்னர் சிகிச்சைக்காகத் தங்க வைக்கப்பட்டார்.
ஒரு வருட தில்லி போராட்டத்தின் பிறகு 2007 மார்ச் 4 மணிப்பூருக்கு மீண்டும் பயணம் செய்தார். அன்று இரவே மணிப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்நாளிலிருந்து தனிமைச் சிறையில் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார். பின்னர் மீண்டும் விடுதலை கைது என்று போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
தனது போராட்டத்தைத் தொடங்கியதில் இருந்து இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட தனது வீட்டிற்குச் சென்றதில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக ஒருநாள் நீக்கும். அன்றுதான் என் வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த எனது அம்மாவின் மடியில் தலை சாய்ப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஐரோம் ஷர்மிளா பற்றி படம் ஒன்றை இயக்கிய கவிதா ஜேரியிடம் ஐரோம் ஷர்மிளாவின் தாய், ஐந்து நாள்களுக்கு மட்டும் இந்தக் கொடுமையான ஆயுதப்படைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் ஷர்மிளாவுக்கு ஸ்பூன் மூலம் கொஞ்சம் அரிசி கஞ்சி கொடுப்பேன். அதற்குப் பின் ஷர்மிளா இறந்து போனால் கூட அவளது ஆசை நிறைவேறியதே என்ற நிம்மதியாவது அடைவேன் என்று பதிவு செய்து இருக்கிறார்.
குழந்தையாக இருக்கும்போது நான்தான் இவளைத் தூக்கி வளர்த்தேன். பஞ்சு போல இருப்பாள். இவள் மணிப்பூர் மக்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறாள். மீண்டும் சிறு குழந்தையாக, பஞ்சு போல் ஆகிவிட்டாள். அதே சமயம், முதல் தரப் போராளியாக உருவாகியிருக்கிறாள் என்று அவடைய அண்ணன் சிங்காஜித் தன் தங்கை ஐரோம் ஷர்மிளா குறித்துப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்ற ஐரோம் ஷர்மிளாவை கௌஹாத்தியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்க முயற்சி எடுத்தனர். ஆனால் தொடக்கநிலையிலேயே இந்திய அரசு தலையிட்டு தடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம்தேதி அவரது போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டு புதுக்கட்சியைத் தொடங்கினார். மூன்று முறை முதலமைச்சரான இபோபி சிங்கை எதிர்த்து களத்தில் இறங்கினார். தேர்தலுக்கான வாக்குறுதியாக, “மனித உரிமைகளும் மனிதாபிமானமும் மரணிக்காமல் இருக்கபோராடுவேன்”, என்றார். ஆனால், அவரதுபதினாறு வருட போராட்டத்திற்கு 90 வாக்குகள் மட்டுமே அளிக்க முடியும் என்று மக்கள் முடிவு செய்தனர். அடுத்த வருடமே நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று முடிவு செய்தார்.

தீவிரவாதம் என்னும் ஒற்றை வாதத்தை வைத்துக்கொண்டு பொது மக்களையும் சுட்டுத் தள்ளிய, துன்புறுத்திய அதிகாரத்தை எதிர்த்து, ஒரு மாநிலத்தையே ஒடுக்கியதை எதிர்த்து உணவும் நீரும் இன்றி உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி தோல்வியைக் கண்டார். இவரது போராட்டத்தில் சறுக்கலும், தேர்தல் அரசியலில் தோல்வியும் ஏற்பட்டு இருக்கலாம். அதே வேளையில், பின்புலமோ, பெருங்கூட்டமோ இன்றி அநீதியை எதிர்த்து ஒரு தனி நபர் குரல் கொடுக்க முடியும் என்ற உறுதியின் நிகழ்காலக் குறியீடு இரோம் ஷர்மிளா என்றால் அது மறுக்க இயலாத உண்மை.
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.