திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதா? தோழர் தியாகு (பாகம் – 02)
தமிழ்த்தேசியத்தின் வரலாறு
ஒரு தேசிய இனம். அதற்கான பொதுமொழி, தொடர்ச்சியான நிலபரப்பைக் கொண்டிருப்பதுதான் ஒரு தேசிய இனத்தின் அடையாளம். வடவேங்கடம் ஆயிடை தமிழ்க்கூறும் நல்லுலகத்தில் தமிழ்த்தேசியம் தொடங்கியது. தமிழ்த்தேசியத்தில் திராவிடம் என்பதற்கு இடமே இல்லை. தமிழ்மொழி குறித்த தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் சொல்கிறார்,‘நும் நாடு தமிழ்நாடு என்க’ என்கிறார்.
இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனைப் பாடும்போது, ‘இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிக் கொள்க’ என்கிறார். சங்க இலக்கியத்தின் பரிபாடலில் தமிழ்நாடு என்ற சொல் உள்ளது. தமிழ்நாடுதான் உண்மையில் நாடு. காலப்போக்கில் மலையாளம் பிரிந்து கேரளத்தை இழந்துவிட்டோம். எல்லை மீட்பில் திருவேங்கடத்தை இழந்துவிட்டோம். இப்போதும் எல்லைப் பிரச்சனை இருந்தாலும், 1956இல் அப்போது சென்னை மாகாணமாக இருந்தது தமிழ்நாடு.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்குச் சங்கரலிங்கனார் போராட்டங்கள் நடத்தினார். அண்ணா ஆட்சிக்கு வந்தபின்தான் சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று சூட்டப்பட்டது. தமிழ்நாடு நமக்குக் கிடைத்துவிட்டது. கிடைத்த தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்றால் இறைமையற்றதாக தமிழ்நாடு உள்ளது. அரசியல் அமைப்பின் 3ஆவது உறுப்பு என்ன சொல்கிறது என்றால், இந்த மாநிலத்தின் பெயரை மாற்றலாம், கலைக்கலாம், உடைக்கலாம், வேறுஒரு பகுதியோடு இணைக்கலாம் என்று கூறுகின்றது.
தமிழ்நாடு இறையாண்மை கொண்ட ஒரு நாடாக உருவாக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த்தேசியத்தின் குறிக்கோள் மற்றும் அடிப்படையாகும். அண்ணா 1962இல் மாநிலங்களவையில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு சுயநிர்ணய உரிமையோடு இருக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார்.
திராவிடம் விஷம் என்று தமிழ்த்தேசியம் மருந்து என்கிறார்கள். மருந்துகளில் போதையேற்றும் வகையும் உண்டு. விஷங்களில் மருந்தாகப் பயன்படும் விஷங்களும் உண்டு. நஞ்சை நஞ்சால் முறிப்பதும் உண்டு. தமிழ்த் தேசியம் என்பது தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதுதான் என்றால் முதல்வராக இருந்த அண்ணா, ஓபிஎஸ், இபிஎஸ் இவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே.
அவர்கள்தானே முதல் அமைச்சராக தமிழ்நாட்டை ஆண்டுள்ளார்கள். பிரச்சனை அதுவல்ல, தமிழ்நாட்டை சீமான் முதல் அமைச்சராக இருந்து ஆள வேண்டும் என்பதுதான் தமிழ்த்தேசியம் என்று கூறிவருகிறார்கள். அதுவல்ல தமிழ்த்தேசியம். இறையாண்மை கொண்டு தனி நாடாக தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் உண்மையான தமிழ்த்தேசியம் என்பதை தமிழ்த்தேசியம் பேசுவோர் உணரவேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திராவிடத்தின் பெயரால் இயக்கம், கட்சி வைத்திருப்போர் யாரும் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கவில்லை. ஆதரவு நிலையில்தான் இருக்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது என்ற பொய் பிம்பத்தை அரசியல் காரணத்திற்காக இங்கே கட்டமைக்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் இறையாண்மையுள்ள தமிழ்நாட்டை உருவாக்க முன்வர வேண்டும்.
இந்திய ஒன்றியத்தின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, அதன் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம் பெற்றுக்கொண்டு, முதல் அமைச்சராக இருந்துகொண்டு தமிழ்த்தேசியமான இறையாண்மையுள்ள தமிழ்நாட்டை ஒருபோதும் உருவாக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
— முனைவர் தி.நெடுஞ்செழியன்.
தமிழ்த்தேசியத்தின் வரலாறு பாகம் – 01 படிப்பதற்கு கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதா? தோழர் தியாகு (பாகம் – 01)