”ஆபரேஷன் அகழி” – அரசியலா ? அதிரடியா ? என்ன சொல்கிறார், எஸ்.பி. வருண்குமார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”ஆபரேஷன் அகழி” – செம்மொழியின் தனித்துவமான ”தமிழி”யின் உடன்பிறந்த சொல்லாகவே கருதும் வகையில் அமைந்திருக்கும் அழகான சொல் ”அகழி”. ஆனால், அந்த ஒற்றை சொல்லுக்கு கதிகலங்கி கிடக்கிறார்கள் பேட்டை ரவுடிகள்.

”ஆபரேஷன் அகழி”-க்கு பிள்ளையார் சுழி போட்டது, திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான அறிவிப்புதான். திருச்சியின் மையப்பகுதியில் இயங்கிவரும் மத்திய பேருந்து நிலையத்துக்கு மாற்றாக, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமான பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

பஞ்சப்பூர் பேருந்து நிலையம்
பஞ்சப்பூர் பேருந்து நிலையம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு இணையாக பிரம்மாண்டமாகவும் பல்வேறு வசதிகளுடனும் கட்டப்படுகிறது. இதன் காரணமாக, பஞ்சப்பூர் சுற்று வட்டாரத்தில் வீட்டு மனைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு அருகில் ஒரு பிளாட்டாவது வாங்கிவிட வேண்டுமென்று பலரும் முண்டியடிக்க, கிராக்கி மேலும் அதிகரித்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

புதிய பேருந்து முனையம் என்றில்லை, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புறவழிச்சாலை, மேம்பாலம் அமைப்பது என பொதுமக்கள் நலனுக்கான திட்ட முன்மொழிவை அரசின் சார்பில் அறிவிக்கும்போதே அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பிசினஸ் களைகட்டிவிடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. வழக்கம்போலவே, பஞ்சப்பூர் பேருந்து முணைய திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு, நல்ல இலாபம் பார்த்துவிட வேண்டுமென்று கருதிய உள்ளூர் அளவிலான கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள், ரவுடிகள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் என்ற போர்வையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலங்களை அபகரிக்கத் துடித்தனர்.  இந்த போக்கு, அதே பகுதியில் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவரும் நபர்களையும் அவர்களை தொழில் செய்ய விடாமல் மிரட்டி விரட்டி அடிக்கும் அளவுக்கு போனது.

திருச்சி ரவுடிகள்
திருச்சி ரவுடிகள்

குறிப்பாக, பஞ்சப்பூர் பகுதியில் எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் அமைந்திருக்கின்றன? சாலையையொட்டிய பகுதியில் அமைந்திருக்கும் நிலங்கள் யார் பெயரில் இருக்கிறது? என்பதையெல்லாம் சர்வே செய்திருக்கிறது, உள்ளூர் அளவிலான கட்டப்பஞ்சாயத்து கும்பல். சர்வே லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு, சம்பந்தபட்ட நில உரிமையாளர்களை அன்பாகவோ, அதற்கு உடன்படாதபோது அவர்களுக்கே உரிய மொழியிலோ பேசி கிரயம் செய்ய தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கின்றனர்.

சாத்தனூர் அண்ணாமலை - கொட்டப்பட்டு செந்தில்
சாத்தனூர் அண்ணாமலை – கொட்டப்பட்டு செந்தில்

அதிலும் குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று ஏக்கர் அளவுக்கு புறம்போக்கு இடம் இருப்பதையறிந்து அதனை எப்படியாவது வளைத்துப்போட வேண்டுமென்ற நோக்கில், அந்த நிலத்துக்கு அண்டை நிலத்துக்காரர்களிடம் அடாவடியாக கிரயம் செய்து தர நிர்ப்பந்திருக்கின்றனர். நிலத்தை எழுதி தர மறுத்த தனிநபர்களையும், ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என்ற அளவில் சிறிய அளவில் பிளாட் போட்டு விற்பணையில் ஈடுபட்டு வந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களையும் மிரட்ட தொடங்கியிருக்கின்றனர். இந்த பின்னணியிலிருந்துதான், பாதிக்கப்பட்ட சிறிய அளவிலான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடமிருந்து புகார் போனதையடுத்தே, “ஆபரேஷன் அகழி” நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறார், எஸ்.பி. வருண்குமார் என்கிறார்கள்.

இதுவரை, இரண்டு தவணைகளில் முப்பதுக்கும் அதிகமான ரவடிகளின் வீடுகளில் அதிரடி ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 548 சொத்து ஆவணங்கள்; 113 வங்கி கணக்கு புத்தகங்கள்; 135 புரோநோட்டுகள்; 104 நிரப்பப்படாத காசோலைகள்; 23 செல்போன்கள்; 84 சிம்கார்டுகள்; மற்றும் 13 வகையான பிற ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

மீட்கப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்யும் காவலர்கள் ஆபரேஷன் அகழி
மீட்கப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்யும் காவலர்கள் ஆபரேஷன் அகழி

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் உண்மையான நில உரிமையாளர்களை அணுகி, இந்த பத்திரங்கள் ரவுடிகளின் வசம் போனது எப்படி என்ற விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். போலீசாரின் விசாரணையில் அத்தகைய பத்திரங்கள் அனைத்தும் முறைகேடான வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்தும், மிரட்டியும், பத்து பைசா வரையில் வட்டிக்கு பணம் கொடுத்தும் வாங்கி வைக்கப்பட்டவை என்பது தெரிய வந்திருக்கிறது. ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலோ, இதனை தைரியமாக முன்வந்து புகாராக தெரிவிக்க முன்வரவில்லை.

“இப்போதைக்கு போலீசாரை நம்பி புகார் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. நாளைக்கு இதே எஸ்.பி. வேறு மாவட்டத்துக்கு மாறி சென்றுவிட்டாலோ, அல்லது இன்ஸ்பெக்டர் இடமாறுதலில் சென்றுவிட்டாலோ எங்கள் கதி அதோகதிதான். அடுத்து வரும் அதிகாரிகளும் இதே போல துணிச்சலான நடவடிக்கையை தொடர்வார்களா? என்பது கேள்விக்குறி. அப்படி இருக்கையில் யாரை நம்பி புகார் கொடுப்பது. எதிர்காலத்தில் இதே ரவுடிகளால் பழிவாங்கப்படுவோம்.” என்ற பொதுமக்களிடம் நிலவும் இயல்பான அச்சமே இந்த தயக்கத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

திருச்சி ரவுடிகள்
திருச்சி ரவுடிகள்

ஆபரேஷன் அகழி நடவடிக்கைக்குப் பிறகு, குறிப்பாக பஞ்சப்பூர் பகுதியில் ரியல் எஸ்டேட் பிசினஸ் மந்தமாகிவிட்டதாக குறிப்பிடுகிறார்கள். பரபரப்பாக பிளாட்டுகள் விற்பணையாகி வந்த நிலையில், தற்போது ஒன்றிரண்டு பிளாட்டுகளை மிகவும் சிரமப்பட்டு விற்க வேண்டியதாகிறது என்கிறார்கள். இப்போது பிரச்சினையில்லை என்று வாங்கிவிட்டால், நாளை மீண்டும் இதே ரவுடிகள் பிரச்சினை செய்ய மாட்டார்கள்? என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பொதுமக்களிடம் நிலவும் இத்தகைய அச்சம் குறித்த கேள்வியோடு, எஸ்.பி. வருண்குமாரை அங்குசம் சார்பில் அணுகினோம். “புகாரின் உண்மைத்தன்மை அறிந்து பாரபட்சமற்ற நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்கு நாங்கள் சட்டரீதியான வழிமுறைகளை சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

எஸ்.பி. வருண்குமார்
எஸ்.பி. வருண்குமார்

சட்டப்படியான எங்களது கடமையை நாங்கள் செய்து வருகிறோம். மற்றபடி, அவர்களது பிசினஸை அவர்கள்தான் பார்த்தாக வேண்டும். அவர்களது பிளாட்டுகளை விற்றுத்தர வேண்டியது எங்கள் வேலை இல்லையே? அதே சமயம், இப்போதும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் மிரட்டலுக்குள்ளானாலும் தைரியமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராகவே இருக்கிறோம்.” என்கிறார்.

இன்னொரு கோணத்தில், பெரிய ரியல் எஸ்டேட் அதிபர்களின் தனிப்பட்ட நலன்களுக்காகவே இந்த ஆபரேஷன் அகழி முன்னெடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டையும் முன்வைத்தோம். “ஆதாரம் இல்லாமல், யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த நான் தயாராக இல்லை.

கைப்பற்றப்பட்ட பத்திரங்கள்
கைப்பற்றப்பட்ட பத்திரங்கள்

ஆபரேஷன் அகழியால் தனிப்பட்ட முறையில் எஸ்.பி. ஆதாயம் அடைந்திருக்கிறார். பத்திரங்களை கையில் வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார். பணம் வாங்கினார் என்று யாரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். இதுபோன்ற பேச்சுக்களுக்கு நான் செவி கொடுக்கவே மாட்டேன்.” என்கிறார், எஸ்.பி. வருண்குமார்.

அமைச்சர் ஒருவர் சிபாரிசின் பேரில், திருவெறும்பூரைச் சேர்ந்த குஜராத் தொழிலதிபர் ஒருவர் மீது ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்ததாக உலவும் குற்றச்சாட்டையும் முன்வைத்தோம். “மடியில் கனமில்லை என்றால், எதற்கு அவர் பயப்பட வேண்டும்? போலீசாரின் சோதனையை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? புகாரில் முகாந்திரம் ஏதும் இல்லாமல், எந்த ஒரு ரெய்டு நடவடிக்கைக்கும் நாங்கள் போவதில்லை. இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் ஆபரேஷன் அகழியில் குறுக்கீடு செய்ததில்லை. என்னுடைய பணியில் யாரும் எந்த விதத்திலும் குறுக்கீடு செய்யவும் முடியாது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். ” என்கிறார்.

ஆபரேஷன் அகழி
ஆபரேஷன் அகழி

மேலும், “பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பிரதிநிதியாக என் கவனத்திற்கு கொண்டு வருவதில் தவறு ஒன்றும் இல்லையே? கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, அதிமுக, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை கோரி கோரிக்கை மனுவோடு என்னை அணுகுகிறார்கள். அவ்வளவு ஏன் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கூட பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து என்னிடம் மனு கொடுத்துவிட்டு சென்றார். அதையெல்லாம் தவறு என்று சொல்ல முடியுமா? நாங்கள் இதுவரை கைது செய்திருக்கும் நபர்களின் பின்புலத்தை நீங்களே ஆய்வு செய்து பாருங்களேன். பாரபட்சமின்றி குற்றத்தின் அடிப்படையில் இருந்துதான் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.” என்கிறார், உறுதியாக.

நிறைவாக, மக்களின் அச்சம் குறித்த கேள்வியை மீண்டும் முன்வைத்தோம். “தைரியமாக புகார் கொடுக்க முன்வாருங்கள். சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கிறோம் என்பதுதான் என்னுடைய பதில். ஒவ்வொரு புதன்கிழமை தோறும் வழக்கத்தைவிட நிறைய பேர் வருகிறார்கள். புகார் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சோதனையில் போலீசார்
சோதனையில் போலீசார்

அதன் அடிப்படையில் நாங்களும் அடுத்த பட்டியலை தயார் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இந்த ஆபரேஷன் அகழிக்காகவே, எங்களது போலீசாரை நான் தயார்படுத்தியிருக்கிறேன். அவர்களின் தனித்திறன்களின் அடிப்படையில், பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறேன். அவர்களிடமிருந்து கைப்பற்றிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது தொடங்கி, அதில் உள்ள தொழில்நுட்ப விவரங்களையும் தொகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறோம். இதற்காகவே, ஒரு தனிப்படையே இயங்கி வருகிறது.

எங்கள் டீமில் இயங்கிவரும் எல்லோருமே, வழக்கமான பணிகளோடு சவாலான இந்தப் பணியையும் சேர்த்துதான் செய்து வருகிறார்கள். நாங்கள் பேசுவதைவிட, நாங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் பேசும். மற்றபடி, நான் எஸ்.பி.யாகவே திருச்சி மாவட்டத்திலேயே நீடிக்க முடியாதல்லவா?” என்கிறார், தீர்க்கமாக எஸ்.பி.வருண்குமார்.

வீடுகளில் சோதனை...
வீடுகளில் சோதனை…

உண்மைதான். எஸ்.பி.வருண்குமார் என்பவரது தனிப்பட்ட முன்முயற்சியில் உருவான ஆபரேஷன் அகழி, தற்போது திருச்சி மாநகர், புதுக்கோட்டை மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயல்திட்டமாக விரிவடைந்திருக்கிறது. இந்த எல்லை திருச்சி, புதுக்கோட்டையைத் தாண்டி தமிழகம் முழுவதும் விரிவடைய வேண்டும்; ”எந்த எஸ்.பி. வந்தாலும் இதை செய்துதான் ஆகவேண்டும்” என்ற உத்தரவாதத்தையும் இதன்வழியே, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.

 –   ஆதிரன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.