திருச்சி மாவட்டம் திமுகவைப் பொறுத்தவரை திருப்புமுனை மாவட்டம் என்று அண்ணா காலம் முதல் தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது. திமுகவின் பல்வேறு திருப்புமுனைகள் திருச்சியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டது என்பதும், திருச்சியிலிருந்து தொடங்கப்பட்டது என்பது திருச்சிக்கும் திமுகவுக்குமான உறவை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.திருச்சி மாவட்ட செயலாளராக கே என் நேரு பதவி ஏற்ற பிறகு மாவட்டம் முழுவதும் கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். முன்பு இருந்த திமுகவை காட்டிலும் கே என் நேரு வருகைக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே வந்தது. இப்படி நகரப்பகுதிகளில் ஒவ்வொரு தெருக்களில் தொடங்கி, கிராமப்புறங்களின் ஒவ்வொரு மூலைகளிலும் திமுகவின் கொடி பறக்க நேரு முக்கிய காரணமாக மாறினார். அதேநேரம் பிரம்மாண்ட மாநாடுகளை திருச்சியில் நடத்திக் காட்டி “மாநாடு என்றால், நேரு என்றால் மாநாடு” என்று சொல் லும் அளவிற்கு “மாநாட்டு நாயகன் நேரு” என்று தமிழகம் முழுவதும் அழைக்கப்பட்டார்.
இப்படி திருச்சி மாவட்ட திமுகவின் ஒற்றை ஆளுமையாக வலம் வந்தார். இந்த நேரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசியலுக்கு வந்தார், திருச்சி மாவட்ட திமுகவில் தன்னுடைய ஆளுமை நிலைநிறுத்திக் கொண்டார். தெற்கு மாவட்டச் செயலாளராக ஆனபிறகு தன்னுடைய மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்த திமுக இரட்டை அதிகாரங்களாக பிரிந்தது.இதுவே தற்போது திருச்சி திமுகவின் அரசியல் நிலவரமாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்காக திமுகவைச் சேர்ந்த மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் பரணி குமார், நேருவின் மகன் அருண் நேரு ஆகியோர் போட்டியில் உள்ளனர் என்ற பேச்சு எழுந்தது.திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுகள் பெறப்பட்டிருக்கிறது. இதில் முன்னாள் துணைமேயர் அன்பழகன் மாநகராட்சி மேயர் பதவிக்கான விருப்ப மனுவை திமுகவின் முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேருவிடம் வழங்கினார். இந்த வேளையில் கே என் நேருவின் ஆதரவும் அன்பழகனுக்கே இருப்பதாக கலைஞர் அறிவாலயம் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் தீவிர ஆதரவாளராக உள்ள மலைக் கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் மேயர் பதவிக்கான போட்டியில் மல்லுக் கட்டுகிறார். மேலும் சமூக வலைதளங்களில் தெற்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி மேயர் மதிவாணன் என்று பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தலைமையோ கட்சியின் சீனியரும், கழக முதன்மை செயலாளருமான
கே என் நேருவின் முடிவுபடியே திருச்சி மாவட்ட மேயர் பதவி அமையுமென்று எதிர் தரப்பினரிடம் கூறிவிட்டதாம்.
திருச்சி மாவட்ட திமுகவின் மூத்த உடன் பிறப்பு ஒருவரை அங்குசம் செய்தி தொடர்பு கொண்டது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி பதவியை முடிவு செய்யப்போவது கே என் நேரு தான், தலைமையும் நேருவின் முடிவுக்கே திருச்சி மாநகராட்சியை விட்டுவிட்டது. மேலும் அன்பழகன் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு செலவு செய்து தோல்வி அடைந்திருக்கிறார். நீண்ட ஆண்டுகாலம் கட்சி நகரச் செயலாளராகவும், முன்னாள் துணை மேயராகவும் இருந்துள்ளார். இதனால் மேயர் வேட்பாளராக அதிக வாய்ப்பு அன்பழகனுக்கே இருக்கிறது கூறினார்கள். அதேசமயம் திருச்சி மாநகராட்சி வார்டில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று பல்வேறு உடன்பிறப்புகளும் அருண் நேருவின் பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
மேலும் அருண் நேருவை திருச்சி மாநகராட்சி மேயராக கொண்டுவரவேண்டும் என்றும் பல்வேறு உடன்பிறப்புகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் திருச்சி 2 தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படத் தொடங்கிவிட்டது. இது கட்சியின் வளர்ச்சிக்கும் சரியாக இருக்காது, மேலும் நிர்வாகிகள் வளர்ச்சிக்கும், உடன்பிறப்புகளின் வளர்ச்சிக்கும் சரியாக இருக்காது. இதனால் அடுத்த கட்ட தலைமை உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டுவிடும்
நேருவிற்கு பிறகு தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்று அனைவரும் கணிக்கக் கூடிய நபராக அருண் இருக்கிறார். அதனாலேயே கே.என்.நேரு விருப்பமில்லாத சமயத்திலேயே கழக உடன்பிறப்புகள் பிளக்ஸ் பேனர்கள் முதல் கல்யாண பத்திரிக்கைகள் வரை அனைத்திலும் அருண் பெயரை போட்டு கட்சிக்கு அழைத்தனர். பிறகு அருண் நேருவின் அரசியல் பயணத்திற்கு கே என் நேரு அனுமதி வழங்கினார்.
அதன் பிறகு பிரம்மாண்டமாக அருண் நேருவின் பிறந்தநாளை திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள் கொண்டாடினர். இந்த சூழலில் அருண் நேரு மாநகராட்சி மேயராக தேர்வானால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும், ஆனால் அருண் நேருவிற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக தலைமை சீட்டு ஒதுக்கியது, ஆனால் அருண் நேரு அப்போது தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் அருண் நேரு தனது பிறந்த நாளன்று வாழ்த்து பெற சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்று இருந்தார். அப்போது தலைமை முக்கிய பதவிக்கு தயாராகி வருகிறீர்கள் என்று கூறியபோது கூட தலைமை எது சொல்கிறதோ அதன்படியே நடைபெறும் என்று அருண் சொன்னாராம்.மேலும் கே.என்.நேருவும் தலைமையின் முடிவு எதுவோ அதுவே அருண் நேருவுக்கு என்று சொல்லிவிட்டாராம். தலைமை எம்பி பதிவிற்கு சீட்டு வழங்கினால் எம்பி, கட்சிப் பொறுப்பில் களமிறக்கினால் கட்சிப் பொறுப்பு என்று கூறியிருக்கிறாராம்.
இதனால் அருண் நேருவின் அரசியல் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது, அருண் நேருவை மேயராக்க அல்லது எம்பியாக்க தலைமை முடிவு செய்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-மெய்யறிவன்