சுடுகாடுகளை குறிவைக்கும் ஈஷா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

”எல்லோரும் ஆனந்தமாக வாழமுடியும் என்றால் ஆனந்த அலை உருவாக்கலாம். அப்படி இல்லை என்றால், அமைதியாகவாவது இறக்கின்ற மாதிரி, ஒருவர் உயிருடன் இருக்கும்போது, ஒரு சொட்டு ஆன்மீகம் அவருக்கு கொடுக்கலாம். அதற்கும் அவர் வரவில்லை என்றால் நாம் கோயம்புத்தூரில் ஒரு ஈஷா சுடுகாடு ஆரம்பித்திருக்கிறோம். ஈஷா யோகாவிற்கு வராமல் தப்பித்துப் போனவர்களை அங்கு வைத்து ஏதாவது செய்வோம். வாழும்போது தேவையான அறிவு அவருக்கு வரவில்லை. எப்படியோ ஈஷா யோகாவிலிருந்து தப்பித்துப் போய் விட்டார்கள். எனவே உடல் தாண்டிய பிறகாவது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா?

… இதற்காகத்தான் ஈஷா சுடுகாடு. இன்னொரு சில வருடங்களில் தமிழ்நாட்டில் 500 சுடுகாடு உருவாக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறோம்.” இப்படி பேசியிருப்பது வேறு யாருமல்ல. கோவையில் பிரம்மாண்டமாக ஈஷா யோகா மையத்தை நடத்திவரும் சத்குருவின் வேத வாக்குகள் இவை. அவர்களின் இணையதளத்தில் இதனை பெருமையாக வேறு பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தமிழகம் முழுவதும் அரசின் வசமுள்ள சுடுகாடுகளை கைப்பற்றும் அவர்களின் திட்டத்திற்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர், “காயாந்த ஸ்தானம்”. ‘காயாந்த’ என்றால் ‘உடலின் கடைசி நிலை’ என்று பொருள். ஆம். அவர்களின் திட்டம் மெல்ல செயல்படத் தொடங்கிவிட்டது. கோவையை அடுத்து திருச்சியில் கால்தடம் பதித்துவிட்டார்கள்.

திருச்சி ஓயாமரி சுடுகாடு
திருச்சி ஓயாமரி சுடுகாடு

திருச்சி காவிரிக்கரையோரம் அமைந்திருக்கிறது, ஓயாமரி சுடுகாடு. எப்போதும் ஓயாமல் எரிகின்ற சுடுகாடு என்பதாலேயே, ஓயாமரி என்று அதற்கு பெயர். ஒரு காலத்தில் விறகு கட்டைகளை அடுக்கி சடலங்கள் எரியூட்டப்பட்டு வந்த நிலையில், திருச்சி மாநகராட்சியின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக நவீன எரிவாயு தகன மேடையை அமைத்து சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓயாமரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஈஷா யோகா மையத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

“கடந்த 30.05.2025 அன்று நடைபெற்ற திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ரத்து செய்தோம். தற்போது எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.” என்பதாக, ஓயாமரி சுடுகாட்டை ஈஷா – மையத்திற்கு தாரைவார்த்த திருச்சி மாநகராட்சிக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்.

”மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு மற்றும் சுடுகாடு அத்தியாவசிய சேவைகள். அரசின் நேரடி பொறுப்பில் இருக்க வேண்டியவை. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கான பணி பாதுகாப்பை வழங்க வேண்டும்.” என்பதாகவும் கோரிக்கையை முன்வைக்கிறார்கள் அவர்கள் தரப்பில்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஏற்கெனவே, காவிரி ஆற்றங்கரையோரம் மரங்களை நடப்போகிறோம் என்பதாக காவேரி கூக்குரல் என்ற பெயரில் விவசாயிகளிடமே மரக்கன்றுக்கு இவ்வளவு என வசூலித்தார்கள். அந்த விவகாரம் என்ன ஆனது என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில், தற்போது மீண்டும் ஈஷாவுக்கு அடுத்த புராஜெக்ட். சேவை மனப்பான்மையில் முன்னெடுப்பதாக அவர்கள் சொல்லும் ஒவ்வொரு திட்டங்களும் பயனாளிகளிடமிருந்தே கட்டணம் வசூலிப்பதாகவே அமைந்திருக்கிறது என்பதுதான் இங்கே அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

பிணங்களை எரியூட்ட திருச்சியில் ஆட்களே இல்லையா? கோவையிலிருந்து ஈஷா மையம்தான் எரியூட்டும் வேலையை செய்ய வேண்டுமா? காசு வாங்காமல் சேவை மனப்பான்மையில் செய்தால்கூட வரவேற்கலாம். அப்படியும் இல்லை. அப்புறம் எதற்காக இந்த மாற்றம்?

அதிலும் குறிப்பாக, கடந்த ஆட்சியில் கடுமையான எதிர்ப்புகளின் காரணமாக, தீர்மானத்தை நிறைவேற்றவே முடியாத நிலையில், தற்போது அத்தகைய எதிர்ப்புகளையும் மீறி ஒப்பந்தத்தை வழங்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? இங்கேதான், சூட்சுமம் அடங்கியிருக்கிறது. திருச்சி – தேவதானத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அந்த சூட்சுமங்களை அம்பலமாக்குகிறது.

சத்குரு
சத்குரு

கடந்த காலங்களில், ஓயாமாரி எரிவாயு தகனம் செய்யும் பணியை மாநகராட்சி சார்பில் ஏற்று நடத்தியபொழுது, ஒரு பிரேதத்திற்கு ரூ 2500 வசூலிக்கப்பட்டது. அந்த தொகை அப்படியே கருவூலத்திற்கு சென்றது. மாநகராட்சியே ஏற்று நடத்தும்போது இலாபம். தற்பொழுது ஒயாமாரி எரிவாயு தகனம் செய்யும் பணியை ஈஷா அறக்கட்டளை காயந்த ஸ்தானம் சார்பில் ஏற்று நடத்த ஒரு பிரேதத்திற்கு வசூலிப்பது அதே 2500. அதில், தொண்டு நிறுவனத்திற்கான பராமரிப்பு கட்டணம் ரூ2400-ஐ அவர்கள் எடுத்துக் கொண்டது போக, மாநகராட்சிக்கு அவர்கள் செலுத்தப்போவது வெறும் ரூ.100 மட்டுமே.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் சாரத்திலிருந்து, ஆண்டொன்றுக்கு சற்றேறக்குறைய 1500-க்கு குறைவில்லாத சடலங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. 13.12.2021 முதல் 22.06.2026 வரையிலான கால கட்டத்தில் மொத்தம் வரவானது இரண்டு கோடியே ஐம்பத்து ஐந்தாயிரம் (ரூ2,00,55,000.00). இதற்காக மாநகராட்சிக்கு ஆன செலவுகளோ வெறும் எண்பத்திரண்டு இலட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து இருநூற்று பன்னிரண்டு ரூபாய் (ரூ82,58,212.00) மட்டுமே. ஓயாமரி என்ற ஒற்றை சுடுகாட்டின் வழியே மட்டும் மாநகராட்சிக்கு இலாபமாக கிடைத்தது, ஒரு கோடியே பதினேழு லட்சத்து தொண்ணூற்றாறாயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு (ரூ1,17,96,788). ஓயாமரியில் அன்றாடம் எரியும் பிணங்கள் ஈட்டிக்கொடுத்த இந்த கோடிகள் அத்தனையும் இனி, ஈஷா-வின் கஜானாவுக்கு.

முதலில், பிணத்தை எரியூட்டுவதால் மாநகராட்சிக்கு இலாபமா? நட்டமா? என்ற கேள்விக்கே இங்கே இடமில்லை. இலாபத்தில் இயங்க வேண்டுமெனில், ஒருநாளைக்கு இத்தனை பிணங்களை எரியூட்டியாக வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்க இதுவொன்றும் பிசினஸ் அல்ல. அப்படியிருந்தும், கோடிகளை இலாபமாக மாநகராட்சிக்கு கொட்டிக் கொடுத்திருக்கிறது, ஓயாமரி. இந்த தொகையை வைத்து மேற்படி இடுகாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கலாம். மாநகராட்சி சார்பில் அங்கே பணியமர்த்தப்பட்டிருக்கும் தற்காலிக – ஒப்பந்த பணியாளர்களை கௌரவமான முறையில் நல்ல ஊதியத்தோடு நிரந்தரப்பணியாளர்களாக ஆக்கியிருக்கலாம். ஆனால், அதையெல்லாம்விட்டு மாமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி ஈஷா – மையத்திற்கு ஒப்படைக்க வேண்டிய தேவை ஏன் வந்தது என்பதே இங்கே எழும் மையமான கேள்வி. விடை சொல்லுமா, அரசு?

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.