பி.ஐ.எஸ். தரச்சான்று இல்லாத ஒரு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் ! அட அம்புட்டும் போலி நகைகளா ? மெர்சலான பி.ஐ.எஸ். அதிகாரிகள் !
பி.ஐ.எஸ். தரச்சான்று இல்லாத ஒரு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் ! அட அம்புட்டும் போலி நகைகளா ? மெர்சலான பி.ஐ.எஸ். அதிகாரிகள் !
புதுக்கோட்டையில் பி.ஐ.எஸ். தரச்சான்று இல்லாத ஒரு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்! அட அம்புட்டும் போலி நகைகளா ? மெர்சலான பி.ஐ.எஸ். அதிகாரிகள் !
புதுக்கோட்டையில் பிரபலமான நகைக்கடை ஒன்றில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இயங்கி வரும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பொதுவில் இந்திய மக்களிடையே நிலவிவரும் தங்க நகைகள் மீதான மோகம் என்பது ஒருபுறமிருக்க; எந்த விதமான அபாயமும் இல்லாத அதே சமயம் நிச்சயமான இலாபத்தை தரக்கூடிய ஒன்றாக “தங்கத்தில் முதலீடு” பார்க்கப்படுகிறது.
பெண் பிள்ளைகளை பெற்றோர், ஆண்டு தோறும் குன்றின் மணிக்கு குறையாத தங்கத்தையாவது சேமித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உழைத்து வருகின்றனர்.
வாங்கும் தங்கத்தின் அளவுகளில் வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவில் வீட்டு வேலைக்கு செல்வோர் தொடங்கி கார் பங்களா சொகுசு வாழ்க்கை வாழ்வோர் வரையில் இது பொதுப்போக்காகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இதுநாள் வரையிலும் சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ள தங்க நகைகளின் தரம் மீதான சந்தேகத்தை வலுக்க வைத்து விட்டது இந்த சம்பவம்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய தரநிர்ணய அமைவனத்தின் மூத்த இயக்குனர் மற்றும் அதன் தலைவர் சு. த. தயானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“29.10.2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு 1643.36 கிராம் போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தது.
M/s பாலாஜி ஜுவெல்லரி, 71A, புதுக்கோட்டை மெயின் ரோடு, லட்சுமி காம்ப்ளெக்ஸ், இலுப்பூர் தாலுகா, புதுக்கோட்டை, தமிழ்நாடு – 622 102 என்ற முகவரியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பிஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்டு போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட, ஹால்மார்க் தனித்துவ அடையாள இலக்கம்(HUID) இல்லாமல் 1643.36 கிராம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் BIS மதுரை கைப்பற்றியது .
எண். 1047(E), 03 மார்ச், 2023 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு ஆணை மற்றும் தங்க நகைகள், தங்கக் கலைப்பொருட்களின் ஹால்மார்க்கிங் (திருத்தம்) 2023 ஆணையின் படி, மார்ச் 31, 2023க்குப் பிறகு எந்த ஒரு நகைக்கடைக்காரரும் ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்தன்மை வாய்ந்த சரியான HUID குறி இல்லாமல் தங்க நகைகளை விற்கக் கூடாது.
இந்திய தர நிர்ணய சட்டம், 2016ன் படி, மேற்கூறிய நகைக்கடைக்காரர் மீது குற்றவியல் புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது முதல் மீறலுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும், மேலும் நீதி மன்ற உத்திரவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட ஐந்து மடங்கு வரை அபராதமும் வழங்கப்படும்.
உற்பத்தியாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் போலிப்பொருட்களை விநியோகிப்பதைத் தடுக்கவும், தவறான பாதையில் பொதுமக்களை வழிநடத்துவதை தவிர்க்கவும், இந்திய தரநிலைகள் அமைவனம் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு முன், BIS Care ஆப் மூலம் உரிமத்தின் நிலையை உறுதி செய்து கொள்ளலாம். உரிமம் இடைநிறுத்தப்பட்டது/ஒத்திவைக்கப்பட்டது/காலாவதியானது/ ரத்து செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால், நுகர்வோர் புகாரைப் பதிவுசெய்யலாம்.
BIS தரநிலைமுத்திரை (ISI MARK , BIS பதிவுமுத்திரை, BIS ஹால்மார்க் 22K916 XXXXXX, BIS மேலாண்மை அமைப்புகளின் சான்றிதழ்கள்) ஆகியவற்றின் தவறான பயன்பாடு பற்றிய எந்தத்தகவலும், மின்னஞ்சல்/கடிதம்/BIS CARE app (கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்) மூலம் அமைவனத்திற்கு தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமான முறையில் வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
இந்திய தரநிர்ணய அமைவனம்
சிட்கோ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்
பெண்கள் தொழில் பூங்கா
கப்பலூர், மதுரை – 625 008
மின்னஞ்சல்முகவரி: mdbo-bis@bis.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் “ என்பதாக தெரிவிக்கிறார்.
– இளவழகன்