ஆற்றுமணல் உரிமம் பெற்றுத்தருவதாக பல கோடி வசூல் ! சர்ச்சையில் சிக்கிய ராஜப்பா ! பின்னணி என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழகத்தில் ஆற்றுமணல் அள்ளும் உரிமை யாருக்கு வழங்குவது என்பது குறித்து மேலிடத்தில் இன்னும் தெளிவான முடிவுக்கு வராதநிலையில், இது குறித்து எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் ஒருவர் ஆபீஸ் போட்டு மாவட்டத்துக்கு இத்தனை கோடி என்று பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறார் என்கிற தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதற்குமான அனைத்து வகையான மணல்களையும் அள்ளும் உரிமை இதுவரை எஸ்.ஆர். குழுமத்திடம் இருந்து வந்த நிலையில், எஸ்.ஆர். குழுமத்திற்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை மற்றும் எஸ்.ஆர். குழுமத்தின் வரைமுறையற்ற விதிமீறல்கள் மற்றும் அதன் ஏகபோக ஆதிக்கம் ஆகியவை ஆளும் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியதாக ஆளும் தரப்பு கருதிய நிலையில் மீண்டும் அவர்களுக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதாக அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தீபாவளி வாழ்த்துகள்

அதிலும் குறிப்பாக, தொடர்ந்து இவர்களுக்கே அனுமதி வழங்கினால், கடந்த எம்.பி. தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு வைட்டமின் பா சப்ளை செய்வதற்கு முயற்சித்து கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரமும் தலைமையை கோபப்படுத்தியது; மேலும், இப்படியே விட்டால், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிவரும் என்பதை கருத்தில் கொண்டும்தான் மேலிடம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

ராஜப்பா - ஓம் சக்தி புரோ மோட்டர்ஸ்
ராஜப்பா – ஓம் சக்தி புரோ மோட்டர்ஸ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்தப் பின்னணியிலிருந்துதான், தமிழகம் முழுவதுக்கும் ஒரே நபரிடம் உரிமத்தை ஒப்படைத்தாலும், அவர்கள் அவர்களுக்கு கீழாக மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்துதான் மணல் அள்ளி வருகின்றனர் என்பதால், அதன்படியே தமிழகத்தை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நபர் என்பதாக உரிமத்தை வழங்குவது என்பதாகவும் ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதன்படி, மொத்த தமிழகத்தையும் இரண்டு பகுதிகளாக பிரிப்பதாக இருந்தால், விழுப்புரத்தை எல்லைக்கோடாக வைத்து விழுப்புரத்திலிருந்து சென்னை வரையில் ஒரு பகுதி மற்றும் விழுப்புரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் மற்றொரு பகுதி என்பதாக பிரித்து ஒதுக்குவது என்பது ஏற்பாடாம்.

மூன்று பகுதிகளாக பிரிப்பதாக இருந்தால்,  விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட வட மாவட்டங்கள்; மேட்டூர் அணையில் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான டெல்டா மத்திய மாவட்டங்கள்; புதுக்கோட்டை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென் மாவட்டங்கள் என்பதாக பிரிப்பது என்பதாக ஏற்பாடாம். இதன்படி, சற்றேறக்குறைய பகுதி ஒன்றுக்கு சராசரியாக 12 முதல் 13 மாவட்டங்கள் வரையில் அடங்கும் என்கிறார்கள்.

இதன்படி, உரிமம் வழங்கும் நபருக்கு எல்லா வகையான மணலும் அள்ளுவதற்கான உரிமத்தையும் வழங்குவதாக ஏற்பாடு என்கிறார்கள். அதாவது, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், ஆன்லைன் வழியாக பதிவு செய்து அள்ளப்படும் ஆற்று மணல்; அந்தந்த மாவட்டத்தில் பட்டா இடத்தில் கனிம வளத்துறையின் அனுமதி பெற்று அள்ளப்படும் சவுடுமணல் மற்றும் கிராவல் மண் அள்ளும் உரிமை ஆகிய மூன்றையும் சேர்த்தே கொடுப்பது என்பதாக முடிவு என்கிறார்கள்.

எஸ்.ஆர். குழுமமே மீண்டும் எப்படியாவது உரிமத்தை பெற்றுவிட வேண்டுமென்று இன்னும் உறுதியாக போராடி வருவதாக ஒரு தகவல். இதற்கிடையில், வட மாவட்டத்தின் உரிமையை தனது ஆதரவாளர் ஒருவருக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமைச்சர் எ.வ.வேலு தரப்பில் முயல்வதாகவும் ஒரு தகவல். டெல்டா மாவட்டங்களை கொண்ட மத்திய மாவட்டத்தை செந்தில் பாலாஜியின் ஆசிபெற்ற பொன்னர் – சங்கர் சகோதரர்கள் பெற்று விட முயற்சிக்கிறார்கள் என்பதாக தகவல்.

இந்த பின்புலத்தில்தான், அதாவது மீண்டும் எஸ்.ஆர். குரூப்புக்கு மணல் அள்ளும் உரிமத்தை கொடுக்கக்கூடாது என்பது மட்டும்தான் இதுவரையில் உறுதிபடுத்தப்பட்ட தகவலாக இருந்து வருகிறது.  மொத்த காண்டிராக்டையும் பழையபடி ஒரே நபருக்கு கொடுப்பதா? மூன்றாக பிரிப்பதா? நான்காக பிரிப்பதா? ஆற்றுமணலை மட்டும் தனியாக கொடுப்பதா? கிராவல் சவுடு மணல் காண்டிராக்டையும் சேர்த்துக் கொடுப்பதா?

என்பது பற்றியெல்லாம் இன்னும் தீர்க்கமான முடிவுக்கு தலைமை இன்னும் வராத நிலையில், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக  மணல் உரிமம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு தகவலும் அறிவிக்காத நிலையில், தமிழகம் முழுவதுக்குமான மணல் காண்டிராக்டை பெற்றுவிட்டேன் என்று சொல்லி, மாவட்டத்துக்கு இத்தனை கோடி என்று பெருமளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார் ஒருவர் என்பதாக பிரத்யேகமாக கிடைத்த தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விசாரணையில் இறங்கினோம். சென்னையில் ஓம்சக்தி புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்திவரும் ராஜப்பா என்பவர், சென்னை அசோக்நகரில் (விடுதலை சிறுத்தைகளின் தலைமையகம் எதிரில்) அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து டீலிங்குகளை நடத்தி வருகிறார் என்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து சூட்கேஸ் கையுமாக அவரது அலுவலகத்தில் குவிந்து வருகிறார்கள் என்பதாகவும் சொல்கிறார்கள்.

யார் இந்த ராஜப்பா ?

சர்ச்சையில் சிக்கிய ராஜப்பா
சர்ச்சையில் சிக்கிய ராஜப்பா

மயிலாடுதுறை செம்பனார்கோவிலை சேர்ந்தவர் ராஜப்பா. கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கிராவல் மணல் அள்ளும் உரிமம் பெற்றிருந்த மணல் மார்ட்டின் என்பவர் வழியாக, தலைமைக்கு அறிமுகம் ஆனவர் என்கிறார்கள். பின்னர், அவரிடமிருந்து பிரிந்து ஒரு சில குவாரி காண்டிராக்ட்களை பெற்று தொழில் நடத்தி வந்திருக்கிறார். இந்த வகையில், தலைமையின் மகள் குடும்பத்தின் மருமகனான டாக்டர் ஒருவரின் நட்பை பெற்றிருக்கிறார். அந்த நட்பை காட்டியே பலரிடம் வசூல் வேட்டையை நடத்தியுமிருக்கிறார் என்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதனை தொடர்ந்த, அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலாவின் உறவினர், மயிலாடுதுறைக் காரன் என்ற அடையாளத்தை வைத்து தொழிலை தொடர்ந்திருக்கிறார். தனியே குவாரி உரிமம் எடுத்து தொழில் செய்ததைவிட, எனக்கு மேலிடத்தில் அவரைத் தெரியும் இவரைத் தெரியும். அவரை வைத்து நான் இன்ன காரியத்தை முடித்துத் தருகிறேன். என்பதாக ஹைடெக் புரோக்கராக செயல்படுவதில் ராஜப்பா கில்லாடி என்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், அதுபோல கமிஷன் வாங்கிக்கொண்டு காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்தால்கூட புண்ணியமாக போகும். ஆனால், அதையும் செய்யமாட்டார், இந்த ராஜப்பா என்கிறார்கள். வெறும் வாய்ப்பேச்சிலேயே ஆளை மயக்கி, கட்டிங் போடுவதில் கை தேர்ந்தவர் என்கிறார்கள்.

குறிப்பாக, அதிமுகவின் எடப்பாடி ஆட்சி காலத்தில், எடப்பாடியாருக்கு எல்லாமுமாக இருந்த ஆத்தூர் இளங்கோவனின் முக்கிய கூட்டாளியான திண்டுக்கல் சுகுமார் வழியாக, அவரது பெயரை சொல்லியே பலகோடி ஆட்டையை போட்டிருக்கிறார் ராஜப்பா என்கிறார்கள்.

உதாரணத்துக்கு, தமிழகத்தின் ஏதோ ஒரு மாவட்டத்தின் ஆற்று மணல் அள்ளும் உரிமத்தை பெற்றுத் தருகிறேன் என்பதாக ஒருவரிடம் பேரம் பேசி காசை வாங்கிவிடுவது. பார்ட்டியிடம் வாங்கிய காசில் ஒரு பகுதியை திண்டுக்கல் சுகுமார் வழியாக மேலிடத்துக்கும் சேர்த்துவிடுவது. இதேபோல, ஒரு இடத்துக்கு பலரிடம் பணத்தை வாங்கிவிடுவாராம். பின்னர், பணம் கொடுத்தவர்கள் நெருக்கினால், ”இதோ அமைச்சர் வீட்டில்தான் இருக்கிறேன். முதல்வர் வீட்டில்தான் இருக்கிறேன். கட்சி தலைமை அலுவலகத்தில் இருக்கிறேன்.

உங்கள் விசயமாகத்தான் பேச வந்திருக்கிறேன்.” என்பதாக செல்ஃபி எடுத்து போட்டு கதைவிடுவாராம். முதல்வர் இல்லத்திலேயே அவர் காத்திருந்தாலும், அவர் என்ன சோலியாக காத்திருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த நேரத்தில் எவர் அழைத்தாலும் அவர் வேலையாகத்தான் வந்திருக்கிறேன் என்பதாக அள்ளிவிடுவாராம்.

கொஞ்சம் நெருக்கடி கொடுத்து நெருக்கினால், ”இதுல ஆயிரம் பார்மாலிட்டிஸ் இருக்கிறது. எத்தனை பேர் போட்டி போடுறான் தெரியுமா? கோர்ட் ஆர்டர் இருக்கிறது. எல்லாம் சரி செஞ்சி தருணம் பார்த்துதான் உரிமம் கொடுப்பாங்க. இதையெல்லாம் ரெடி பண்ணிதான் கொடுக்க முடியும். கொஞ்சம் பொறுத்துதான் ஆகனும்.” என்று அதற்கும் ஒரு விளக்கம் கொடுப்பாராம், ராஜப்பா.

இதுபோல, ஏதோ ஒரு டீலிங்கில் தெரியாத்தனமாக மாட்டிக்கொண்ட, தலைநகர் வணிகவீதியில் மூன்றெழுத்து பெயரில் உணவகம் நடத்திவரும் தொழிலதிபர் ஒருவர் ஒரு காரியத்தை முடித்து தருவதற்காக காசை கொடுத்துவிட்டு, அந்த காரியமும் நிறைவேறாமல் கொடுத்த காசையும் திரும்ப வாங்க முடியாமல் நொடிந்தே போய்விட்டாராம்.

இன்னொரு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ஒரு ரீச் கேட்டு ஒரு கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார். ஆற்றில் மணல் அள்ளுவது; லாரியில் ஏற்றுவது; யார்டில் இறக்குவது (Cut, Load, Transport) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய (Lifting contract) லிப்டிங் காண்டிராக்ட் திண்டுக்கல் சீனிவாசனின் அண்ணன் மகன் ராஜசேகரிடம் இருந்த சமயத்தில் நடந்த பஞ்சாயத்து இது. ராஜப்பா கொடுத்த வாக்குறுதியின்படி, சொன்ன வேலை நடக்காமல் போகவே, காசை திரும்பக் கேட்டதற்கு அவரும் திமிராக பேச கை கலப்பாகி முடிந்தவரை வசூலித்துவிட்டு கிளம்பியிருக்கிறார், அந்த நபர்.

அதிமுக ஆட்சி முடிந்து, இப்போது திமுக ஆட்சி வந்த நிலையில், அவரும் பழையபடி, மூன்றெழுத்து அம்மாவை நல்லா தெரியும். டாக்டரை தெரியும். என்று சொல்லியே, பெரும் வசூல் வேட்டையை நடத்தி முடித்துவிட்டார் என்கிறார்கள். எப்படியோ, போலீசுக்கு விசயம் போக அவர்களும் மேலிடத்து விவகாரமாக இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்பதாக சொல்லிவிட்டு சென்றதாகவும் தகவல்.

இந்த தகவலையெல்லாம் உறுதிபடுத்துவதற்காக, சர்ச்சையில் சிக்கியிருக்கும் ராஜப்பாவை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். நாம் எங்கிருந்து பேசுகிறோம் என்பதை மட்டும் சொல்லி அறிமுகம் செய்து கொண்டு அடுத்து என்ன ஏதென்று பேசுவதற்கு முன்பாகவே, ”இப்போ எந்த செய்தியும் இல்லை சார். கவர்மெண்டு சைடில் இருந்து பக்காவாக அனோன்ஸ்மெண்ட் செய்துதான் வரும் சார். தப்பா சொல்லிகிட்டு இருக்காங்க. ஒன்றுமில்லை.” என்பதாக நறுக்கென்று பேசிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார், ராஜப்பா.

தமிழகம் முழுமைக்குமான மணல் அள்ளும் உரிமையை கையில் வைத்துக்கொண்டு ஏகபோகமாக உருவாகியதோடு, ஆளும் அரசுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்திவிட்டார்கள் என்பதால்தான், எஸ்.ஆர்.குரூப்புக்கு தொடர்ந்து கொடுக்கக்கூடாது என்ற முடிவுக்கே வந்தது ஆளும் தரப்பு. இந்நிலையில், உரிமம் கொடுப்பதற்கு முன்பாகவே, மாவட்ட வாரியாக வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், ராஜப்பா. இந்த விசயம் உளவுத்துறை வழியாக ஆளும் தரப்புக்கு சென்றதா?  இல்லையா? என்ற நிலையில், பழைய பாணியில் இன்னும் பலரிடம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையை நடத்தி முடிப்பதற்குள்ளாக சாட்டையை சுழட்ட வேண்டும் என்பதே பொதுவில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

–    அங்குசம் புலனாய்வுக்குழு.

 

தொடர்புடைய கட்டுரை – 

மணல் அள்ளும் உரிமையை பெறத்துடிக்கும் எஸ்.ஆர். குரூப் ?

 

எஸ்.ஆர். குரூப்பிடமிருந்து கை மாறுகிறதா, ஆற்று மணல் காண்டிராக்ட் ? அதிர வைக்கும் பின்னணி !

 

 

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.