முதல்வர் – அமைச்சர் – ஆளுநர் இடையே தொடரும் ! ஆடுபுலி ஆட்டம்
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் அதிரடி
அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
இம் மாதம் 14-ஆம் தேதி அதிகாலையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரத்தில், `செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாலும், அவர் அமைச்சராகத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்திருந்தார் ஆளுநர். அதையடுத்துத் தமிழக அரசு, `செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், `செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறார்’ என இன்று (29.06.2023) மாலை அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் அரங்கைச் சூடாக்கியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் (பாஜக, அதிமுக, தமாக தவிர்த்து) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்திய அரசியல் சாசனம், முதல் அமைச்சரின் பரிந்துரையின் பெயரில்தான் ஆளுநர் ஓர் அமைச்சரைச் சேர்ப்பதும் நீக்குவதும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. “ஆளுநர் நேரடியாக ஓர் அமைச்சரைச் சேர்ப்பதும் நீக்குவதற்கும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கம் என்பது தமிழ்நாடு அரசைக் கட்டுப்படுத்தாது” என்று திமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் அப்பாவு அவர்கள் செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசும்போது,“ஆளுநர் இல்லாத அதிகாரத்தை இருப்பதுபோல் நினைத்துக்கொண்டு செயல்படுகின்றார். முதல் அமைச்சரின் பரிந்துரை இல்லாமல் எந்த மந்திரியையும் நீக்கமுடியாது. அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு இப்படிப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை” குறிப்பிட்டார். தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது,“அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இந்தப் பிரச்சனையைச் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று ஆளுநருக்குப் பதிலடி கொடுத்தார்.
பத்திரிக்கையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது,“ஆளுநர் சில நாள்களுக்கு முன்பு தில்லி சென்று 27ஆம் நாள்தான் சென்னை திரும்பினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமை அமைச்சர் மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படியே ஆளுநர் அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டியது மாநில அரசுதானே. மாநில அரசு ஆளுநரின் உத்தரவைக் கிடப்பில் போட்டுக்கொண்டிருந்தால் ஆளுநரால் என்ன செய்யமுடியும்? ஆளுநர் முதல்வரை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கமுடியுமா? என்று வினா எழுப்பியுள்ளார்.
“கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் அவர்களுக்கும் முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கும் தொடர்ந்து மோதல் நிலை இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், “உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்குக் கேரளப் பல்கலைக்கழகத்தைப் புரிந்துகொள்ள இயலாது” என்று கருத்து தெரிவித்தார். நிதியமைச்சரின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவுக்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால், ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் தனிப்பட்ட அமைச்சர்களின் அறிக்கைகள், அவர்கள்மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர், முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பிய கடிதத்தில், “நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலின் பேச்சுகள், அவருக்கு நான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக இருக்கிறது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் அதைச் சிறுமைப்படுத்துபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவர் தேசத்தின் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் பேசியிருக்கிறார். இப்போது பாலகோபால் பேசியதை நான் கவனிக்கவில்லையென்றால், அது என் பதவிக்கான பொறுப்பைத் தட்டி கழித்ததாகிவிடும்” என்று அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், நிதியமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் இந்தக் கடிதத்தின் கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் ஏற்கவில்லை” என்பதை அரசியல் பார்வையாளர் மிசா தி.சாக்ரடீஸ் சுட்டிக்காட்டுகின்றார்.
“ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின்படி செயல்பட்டு, பிறப்பிக்கும் உத்தரவுகள் மட்டுமே மாநில அரசைக் கட்டுப்படுத்தும். இராஜ்பவன் காங்கிரஸ் பவனாக மாறி ஆளுநர்கள் காங்கிரஸ் கட்சியின் எடுபிடிகளாக இருந்துகொண்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநில அரசு பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை என்று குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மோடி ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த வரலாற்று நிகழ்வை நியூஸ் 18 தொலைக்காட்சியின் சொல்லதிகாரம் நிகழ்வின் நெறியாளர் தம்பி தமிழரசன் ஆதாரங்களைப் படித்துக் காட்டினார்.
கடந்த இதழில் நம் அங்குசம் செய்தியில், ஆளுநர் Vs முதல்வர் அதிகாரப்போர் தொடங்கிவிட்டது என்று ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதிகாரப்போர் உச்சத்தைத் தொட ஆளுநர் செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் ஏற்படுத்தும் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் மக்கள் பணியாற்றி வருகிறார். “ஆளுநர் அரசியல் சாசனத்தை மீறித் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடே செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்கம் என்பதாகும். இப்படி நீக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை” என்று மேனாள் நீதிபதி கற்பகவிநாயகம் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்போரில் ஆளுநரின் சாவல்களை முதல்வர் எதிர்கொண்டு அதிகாரத்தை நிலைநிறுத்துவாரா என்பதை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் நமக்குத் தெளிவை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி:
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் செய்த தன்னுடைய உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவிப்பு.,
உள்துறை அமைச்சகத்தின் மூலம், இது தொடர்பான சட்ட வழிமுறைகளை அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசிக்க சொல்லியிருப்பதாக தகவல்.,
ஆளுநருக்கு, முதல்வரின் பரிந்துரை இல்லாமல், அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று எழுந்த கேள்விக்கு தற்காலிகமாக விடை காணப்படுவதை நிறுத்தி வைத்திருப்பதாக நம்புகிறது ராஜ்பவன் வட்டாரம்.
-ஆதவன்