அமைச்சர் பொன்முடிக்கு ஜெயிலா…? பெயிலா…?
அமைச்சர் பொன்முடிக்கு ஜெயிலா…? பெயிலா…?
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்குச் சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 21-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை 50 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், “3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தானாகவே இழக்கிறார். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சர் பதவியையும் இழக்கிறார்” என்று தமிழ்நாடு சட்டமன்றச் செயலகத்திலிருந்து ஓர் அறிவிப்பும் வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில், பொன் முடியின் வசம் இருந்த உயர்கல்வித்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜக் கண்ணப்பன் அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிப்பை வெளியிடும். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தும் என்பது தேர்தல் ஆணைய நடைமுறையாகும். “உச்சநீதிமன்றத்தில் பொன் முடி சார்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்படும் என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டில் பொன்முடி சார்பில் இரு வேண்டுகோள் வைக்கப்படும். 1. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுத் தடை கோருதல் 2. உயர்நீதி மன்றத்தின் 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஜாமீன் என்னும் பிணை கோருதல் என்பதாகும்.

சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் தீர்ப்புக்கு தடை கொடுக்கப்பட்டதாக முன்னுதாரணம் இல்லை. என்றாலும் மாவட்ட நீதிமன்றம் பொன்முடியை விடுதலை செய்ததும், உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியதும் முரண்பாடானது என்பதைச் சுட்டிக்காட்டிப் பொன்முடி தரப்பு தீர்ப்புக்குத் தடைக் கோரலாம். அப்படித் தடை கிடைத்தால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு தானே இரத்தாகிவிடும். இதனைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரை நீடிக்கலாம்.
தீர்ப்புக்குத் தடை கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிணை கோரப்படும். பிணை கிடைத்தால் பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்படும்வரை சிறைக்குச் செல்லவேண்டிய தேவை இருக்காது. உச்சநீதி மன்றத்தின் மேல் முறையீட்டில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை எந்த வழக்கறிஞரும் முன்கூட்டியே ஊகிக்கமுடியாது என்றும் உச்சநீதி மன்றத்தின் மேல் முறையீட்டின் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஒருவேளை உயர்நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்புக்குத் தடை கிடைத்தால் பொன்முடி அமைச்சராகவும் வாய்ப்புள்ளது. அதனால் சபாநாயகர் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பு வரும்வரை பொன்முடியின் தகுதி இழப்பை அறிவிக்காமல் காலம் கடத்தலாம் என்ற செய்தியும் உள்ளது. உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்புக்குக் காத்திருப்போம்.
-ஆதவன்