மானுடத்தின் தேவையை மனதுக்குள் விதைக்கும் ஜெயபாஸ்கரன் – ( 21 )
முனைவர் ஜா.சலேத் - போதிமரத்தின் ஞான நிழல்கள் ( 21 ) தன்னம்பிக்கைத் தொடர் அறியவேண்டிய ஆளுமைகள்
மானுடத்தின் தேவையை மனதுக்குள் விதைக்கும்
கவிஞர் ஜெயபாஸ்கரன் –
“உலகம் எதனால் சுழல்கிறது?” இப்படி ஒரு வினாவை முன் வைத்தால் விடை என்னவெல்லாம் நம்முன் வந்து நிற்கும்? அறிவியலாளா்கள் எப்படிப்பட்ட பதில்களைச் சொல்வார்கள்? ஆன்மீகவாதிகளிடமிருந்து எத்தகைய விடைகளெல்லாம் வரும்? வரலாற்று அறிஞர்கள் எந்தெந்த சான்றுகளோடு முன்வந்து நிற்பார்கள்? நம்மால் நீண்ட தரவுகளைத் தரக்கூடும். அவைகளெல்லாம் இருக்கட்டும். உலகச் சுழற்சியின் மையம் எது என்ற வினாவிற்கு ஒரு கவிஞா் இப்படிச் சொல்கிறார்.

கதிர் வீச்சு நிகழாது
எனும் நம்பிக்கையில் தான்
கல்பாக்கத்திற்கு அருகிலேயே
கடை நடத்துகிறாய் நீ
குடும்பம் நடத்துகிறேன் நான்
அணு குண்டுகளை வைத்திருப்பார்களே தவிர
வீசமாட்டார்கள் எனும்
நம்பிக்கையில்தான்
வேளச்சேரியில்
வீடு கட்டுகிறாய் நீ
தள்ளாடித் தள்ளாடி
எல்.ஐ.சி.க்கு
தவணை கட்டுகிறேன் நான்
ஒரு நீண்ட கவிதையின் துளி மட்டுமே இந்த வரிகள் அப்படியென்றால் உலகம் சுழல்வதற்கான அச்சாணி எது என்ன சொல்ல வருகிறாா் கவிஞா். அந்த வினாவிற்கான பதில் நம்பிக்கை. நம்பிக்கை என்பது குறித்து எவ்வளவோ எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கவிதையின் வீரியம் ஒரு புள்ளி சற்று அதிகமானது தான். ஆம் இந்தக் கவிதையின் ஆசிரியர் யார்? என்கிற உங்களின் எண்ண வினாவிற்கு விடை சொல்ல வேண்டியது எனது கடமை.
‘இலக்கியவாதிகள் பெரும்பாலும் சோம்பேறிகள்’ என்கிற கருத்தின்மீது சம்மட்டி அடி அடித்து சுறுசுறுப்பாக இயங்கும் கவிஞா்கள் சிலருள் ஒருவா். அதேவேளையில் ‘இலக்கியவாதிகள் தமது கொள்கைகளுக்கெதிரான கருத்துக்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவேமாட்டார்கள்’ என்கிற கூற்றின் முகமாகவும் முகவரியாகவும் நின்று தராசின் நடுமுள்ளாய் எழுதும் சிலருள் ஒருவர். அவர்தான் கவிஞர் ஜெயபாஸ்கரன்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிராமங்களில் ஒன்றான காட்டுப்பாக்கம் என்னும் கிராமத்தில் பிறந்த இவா் தனது எழுத்தித்திறத்தால் இதழியல், இலக்கியம் மற்றும் காட்சி ஊடகத் துறைகளில் தமக்கென தனித்ததொரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றவா். சமூகப் புலனாய்வுச் செய்தியாளா், சுதந்திரச் செய்தியாளா், சிறப்புச் செய்தியாளா் என்கிற முகவரியோடு இவா் எழுதிய எழுத்துகள் காத்திரமானவை. ‘உழைத்தாா்கள் உயா்ந்தாா்கள்’ உள்ளிட்ட பதிவுகள் முதல் தலைமுறைத் தொழிலாளா்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து அவா்களின் சமூக அங்கீகாரத்திற்கு ஏணியாகவும் , தோணியாகவும் அமைந்தது.
மனைவியானேன் மகளே!, சொல்லாயணம், வரவேண்டாம் என் மகனே!, கடைசிப் புகையின் கல்லறை, வாய்மொழியல்ல வாழ்க்கை மொழி, தாவரத் தரகன் உள்ளிட்ட இவரது படைப்புகளின் தலைப்புகள் ஒவ்வொன்றும் நடத்தும் சமூகக்கல்விப் பாடங்கள் கணக்கற்றவை.
கவிதை என்பது ராஜநடை
கவிதை என்பது தெருப்பாடகன்
கவிதை என்பது திருவிழா
கவிதை என்பது சோககீதம்
கவிதை என்பது சம்மட்டி அடி
கவிதை என்பது மயிலிறகு சுகம்
என்கிற எந்தப்பிடியைக் கையில் எடுத்தாலும் அதன் நீள, அகல, ஆழ எல்லைக்குள் நின்று மக்களுக்கான மொழி பேசும் மக்கள் கவிஞரே நம் ஜெயபாஸ்கரன்.
பார்த்தறியாத மனிதர்களைத் தம் வாசகா்களுக்கு அறிமுகப்படுத்தும் கவிஞராக நில்லாது, பார்த்தறிந்த மனிதா்களின் பாா்த்தறியாப் பக்கங்களைத் தம் படைப்புகளால் வாசகரின் கண்முன் நிறுத்தும் ஈரமும் இனிமையும் நிறைந்த மானுடப் படைப்பாளா்.

எந்த எந்தத் தொழில் செய்த அனுபவம் இவருக்கு இருக்கும் என்று இவரின் வாழ்க்கை வரலாற்று வரப்புகளை உற்றுப்பார்த்தால் இரண்டு தொழில் செய்தவராக அறிமுகம் ஆகிறார். ஒன்று சொந்தக்கிராமத்தில் வேளாண்மைப்பணி. இன்னொன்று உத்திரமேரூர் அருகிலுள்ள நூற்பாலையில் நூற்புத் தொழிலாளர் பணி. இப்போது இந்த இரண்டு பணியிலும் அவர் இல்லை. ஆனாலும் எழுதுகோலை கையில் வைத்துக்கொண்டு அந்த இரண்டு பணிகளையும் தொடர்கிறாா் என்பது அவர் எழுத்துக்களை வாசிப்போருக்கு மட்டும் தெரிந்த இரகசியம். நமது கண்களை ஈரமாக்கவும், நம் எண்ணங்களைவிட்டுத் தூரமாகப் போன மனிதர்களின் இதயத்துப்பாரத்தை உள்வாங்கி செயல்பாட்டுக்களத்தின் சாரமாக்கவும் செய்கிற யுத்தியை நம்மை அறியாமலே நமக்குள் நிகழ்த்தி விடுகின்றன ஜெயபாஸ்கரனின் கவிதைகள்.
‘மருத நிலம்’
வேகவேகமாக
‘மனை நிலம்’ ஆனது
விதை நெல்லை விற்றுத் தின்றுவிட்டு, எதிர்காலம் குறித்த துளி அளவு கூட அக்கறை இல்லாத சமகால சர்வாதிகாரிகாரார்களுக்கு முன்பு பச்சை ஆடையை உடுத்தி கோசம் எழுப்புகிறது.
எதற்கடுத்தாலும்
புள்ளி வைத்துப்
பழகி விட்டார்கள்
மனிதர்கள்
பிடிக்காத பெயர்கள் மீது
புள்ளி வைத்து ஒதுக்குவதே
வேலையாகி விட்டது
பல பெரும் புள்ளிகளுக்கு
மேற்காணும் ஒற்றை கவிதை ஒருவனை சோறுக்கு ஒரு சோறு பதம் போல நின்று விழிகளில் மட்டும் கரிசனையாய்ப் பேசி மனதிற்குள் கருகிப்போன மனிதா்களை நூலாய் நூற்று கண் முன்னே நிறுத்துகிறது
படைப்பாளா்கள் பலவிதமாய் இருப்பாா்கள். புரியாமல் பேசும் படைப்பாளா்கள். புரிய விடாமல் செய்யும் படைப்பாளா்கள். புரிந்ததை புரியாமலாக்கும் படைப்பாளா்கள். ஆனால் ஜெயபாஸ்கரன் வாசகனை வாசகனாக மதிக்கும் பேரன்பு மிக்கவா். இவரைப்பற்றி கவிஞர் காசி ஆனந்தன் கூறிய வரிகளிலே சொன்னால் “புரியாத இலக்கியம் புனைதல் தெரியாத புலவன்.”
மனிதர் உடலால் ஆனவா். மனத்தால் வாழ்பவா். உடலை இளமையாக வைத்துக்கொள்வதும், மனதை வளமையாக வைத்துக்கொள்வதும் அவசியமானது என்பது உலக இயற்கை. அந்த அவசியத்தை அா்த்தத்தோடும் ஆழத்தோடும் விசாரணை செய்து எவ்விதத் தடங்களுமின்றி, தம் மனத்தோடு ஒரு சத்திய சோதனை உரையாடல் நிகழ்த்தி, சமூகத்திற்கானக் கவிதைகளைச் சமைத்துத் தருவதென்பதெல்லாம் கவிஞர் ஜெயபாஸ்கரனின் தனித்தன்மை.
பெண்ணியக் கவிதைகள், சமூகப் பகடிக் கவிதைகள், வாழ்வியல் நுட்பக் கவிதைகள், சூழல் இயக்க கவிதைகள் என சாதாரண மனிதரை மாண்புள்ளவர்களாக நோக்கும் களங்களையே தம் கவிதைக் களங்களாக்கி சொற்போா் நடத்தும் பாவலா் இவா்.
குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிற பொருண்மையில் ஜெயபாஸ்கரன் கவிதை எழுதும் போதும், பேசும்போதும், உரையாடும்போதும் எதிர்காலச் சமூகம் நிமிா்ந்து அமா்வதை என் பிள்ளைவழி கண்கூடாகக் கண்டிருக்கிறேன் பல வேளைகளில்.
ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவன் (எஸ்.எஸ்.எல்.சி.) எனத் தன்னை அறிமுகம் செய்யும் இவரின் கவிதைகளைக் கருப்பொருளாக்கி ஆய்வு செய்த பட்டம் பெற்ற இளையோரை வரிசைப்படுத்தினால் சாலைகளில் போக்குவரத்து சிலமணிநேரம் பாதிக்கப்படும் என்றால் அதில் வியப்பேதுமில்லை.

உரிய பட்டங்களோடு
முக்கிய பிரமுகா்களின்
முகவரி எழுதிய கையோடு
என் வீட்டிற்கான
மளிகை சாமான் பட்டியலை
எழுத நேரும் சமயங்களில்
என்னால் தவிர்க்கவே முடியவில்லை
வீரச் சீரகம் விவேக வெந்தயம் – என்று பட்டியல் முழுவதையும்
பட்டங்களோடு எழுதுவதை
முகத்துதி பேசிப்பேசி, பாராட்டுப் பல்லாக்குத் தூக்கித் தூக்கி, ஒன்றுக்கும் பயன்படாத பதா்களை நெல்மணி போல பேசிப்பேசி, வாா்த்தைகளால் வானளக்கும் வாய்ச்சொல் வீரா்களின் முகத்தில் தம் கவிதைகளால் ஓங்கி அடிப்பாா் இந்தக்கவிஞா் என்பதற்கு இந்த ஒரு கவிதைச்சான்று போதுமானது. ‘பகடி’ எனும் உத்தியை அணுகுண்டாய் அள்ளி வீசி, எழுதுகோலை நெம்புகோலாக்கி இருக்கிறாா் ஜெயபாஸ்கரன்.
வேறு எவருக்காவது விற்டு விட்ட பின்னரும் கூட அதை அவா் (அப்பா) சுற்றி சுற்றி வரக் கூடுமோ? என்று அஞ்சியே விற்காமல் வைத்திருக்கிறேன் அந்த ஒரு ஏக்கர் நிலத்தை என்ற கவிஞரின் எழுத்தை வாசித்த மறுநொடி, இந்த தேசத்தை தங்களது ஏர்க்கலப்பைகளில் கீறிக்கீறி வளம் செய்த உழுகுடிகளின் ஏக்கப்பெருமூச்சு நமது விழிகளின் ஓரம் கண்ணீா்த்துளிகளாய் வந்து நிற்பது இதயத்தைக் குலுக்குகிறது.
கவிதைகள் சொற்களால் ஆனதல்ல. கவிதைகள் உத்திகளால் ஆனதல்ல. கவிதைகள் அனுபவங்களால் ஆனதல்ல. கவிதைகள் அறிவை நிரூபிக்கும் ஆய்வகங்களல்ல. கவிதை ஆளுமைகளை போற்றும் மேடைகளுமல்ல. ஆனால் கவிதைகளுக்குச் சொற்களும் உத்திகளும் அவசியம். அனுபவமும் அறிவும் தேவை. போற்றலும் புரிய வைத்தலும் நடுவம். இதைச் சரியாக உள்வாங்கித் தம் எழுத்தின்வழி பிரகடனப்படுத்திக் கொண்டே இருக்கிறாா்
மக்கள் கவிஞா் ஜெயபாஸ்கரன்.
எளிய மனிதா்களின் வியா்வை, ஏழைகளின் மானுடம், பெண்களின் மௌன யுத்தம், இயற்கையோடு பிணைந்துபோன உறவு, சூழலியில் மீதான விரிந்த பாா்வை, இவற்றையெல்லாம் ஜெயபாஸ்கரன் நமக்குத் தம் கவிதைகளின் மூலம் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறாா்.
ஜெயபாஸ்கரன் தமது எந்தக் கவிதைகளிலும் தீர்வுகளளைச் சொல்லிவிடாது தேடல்களையே விதைக்கிறாா். அதேபோல தம் கவிதையின் இன்னொரு பகுதியை சுவைஞா்கள் தம் விருப்பத்திற்கு எழுதிக்கொள்ள தாராளமான சுதந்திரத்தையும் தருகிறாா். இந்த இரண்டுமே இவரை மக்கள் கவிஞரென அழைப்பதற்குக் காரணங்ளாகின்றன. இவா் குறித்து ஒற்றை வரியில் சொல்வதென்றால், மானுடத்தின் தேவைகளை மனங்களுக்குள் விதைக்கும் மக்கள் கவிஞா் ஜெயபாஸ்கரன் எனவேதான் கவிஞர் ஜெயபாஸ்கரன் போதிமரத்தின் ஞான நிழலாகவே காட்சி தருகிறார்.
-முனைவர் ஜா.சலேத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.