ஜெயலலிதாவின் தோட்டக்கலையும் சசிகலா கலையும் !
தோட்டக்கலையும் சசிகலா கலையும் !
ஜெயலலிதாவின் ஆரம்பக்கால தோழி லீலா. ஜெயலலிதாவிடம் நெருங்கிப் பேசக்கூடியவர். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். போயஸ் கார்டனை சசிகலா ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், வழக்கம் போலவே போனார் லீலா. ஆனால், அங்கே அவருக்குப் பழைய மரியாதை கிடைக்கவில்லை. தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களை லீலாவிடம் கேட்டிருந்தார் ஜெயலலிதா. அவற்றை லீலாவும் அனுப்பியிருந்தார். அதுபற்றி எந்தத் தகவலும் வராததால் கார்டனுக்குப் போனார் லீலா. ‘‘மேடம் வரச் சொல்லியிருந்தார்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். ‘‘காத்திருங்கள்’’ என பதில் வந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கார்டன் ரிசப்ஷனில் காத்திருந்தும் அவருக்கு ஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. கடைசியாக, ‘‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.
அவர் இன்று யாரையும் பார்க்க மாட்டார். பிறகு வாருங்கள்’’ என சொல்லி அவரை சசிகலா அனுப்பிவிட்டார். ‘‘அவர்தான் என்னை வரச் சொல்லியிருந்தார்’’ என லீலா சொன்னது எடுபடவில்லை. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவுக்காகக் காத்திருந்த வலம்புரி ஜான் மட்டும் கிளம்பவில்லை. சசிகலா போனபிறகு தனக்கு வேண்டப்பட்ட லீலாவிடம் ‘‘என்னம்மா ஆச்சு’’ எனக் கேட்டிருக்கிறார் வலம்புரி ஜான். விரக்தியாகச் சிரித்துவிட்டுப் போனார் லீலா. அதன்பிறகு அவரால் கார்டன் பக்கமே தலை வைக்க முடியவில்லை. ”லீலா வந்து போன தகவல் ஜெயலலிதாவிடம் சொல்லிவிட வேண்டாம்” என வலம்புரி ஜானிடம் கேட்டுக் கொண்டார் சசிகலா.
தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களையும், அவற்றை எழுதிய கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். ‘தோட்டக்கலை பற்றிய செய்திகளை ஜெயலலிதாவுக்குச் சொல்வதாக இருந்தாலும் தனக்கு வேண்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே சொல்ல வேண்டும். தனக்கு வேண்டப்பட்டவர் மட்டும்தான் ஜெயலலிதாவின் பக்கத்தில் போக முடியும் என சசிகலா போட்ட கணக்கில் காணாமல் போனார் லீலா. அந்த தோட்டக்கலை கிருஷ்ணமுர்த்தி ஆக்கிரமித்திருந்த நிலத்தைதான் அரசு இப்போது மீட்டிருக்கிறது.
– எஸ்.ஏ.எம். பரக்கத் அலி