தலைவருக்கு பதில் துணைத் தலைவர் -முடிவுக்கு வந்த பஞ்சாயத்து!
திமுக கூட்டணியில் உள்ள வி.சி.க.விற்கு நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேநேரம் விசிகவினர் போராட்டம், தடியடி, சாலை மறியல் என்று பெரிய பரபரப்பே ஏற்பட்டது. இந்த நிலை மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கணேசன் வி.சி.க.விற்கு தலைவர் பதவியைப் பெற்றுத் தர தீவிர முயற்சி எடுத்தார்.
ஆனால் நகர்மன்றத் தலைவர் பதவியை ஜெயந்தி விட்டுக்கொடுக்க முடியாது என்று கறாராகக் கூறி விட்டார். மாற்று முயற்சியாக துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெயப்பிரியாவிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி பதவியை ராஜினாமா செய்ய சம்மதிக்க வைத்தார். பிறகு திமுக தலைமையையும், விசிக தலைமையையும் சம்மதிக்க வைத்து துணைத் தலைவர் பதவியை வி.சி.க. விற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ராஜினாமா செய்ய ஜெயபிரியா முடிவு எடுத்த உடனேயே விசிக தலைவர் திருமாவளவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருமாவளவன் அமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.